

இதுவரை புழக்கத்தில் இருந்த 340 கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு விதித்திருக்கும் தடைக்கு, மருந்து உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட விகிதத்தில் சிலவகை மருந்துப் பொருட்கள் சேர்க்கப்பட்டு, கூட்டு மருந்து- மாத்திரைகளாக விற்கப்படுகின்றன. இவற்றில் பல, அவை தயாரிக்கும் நிறுவனங்களால் விளம்பரப்படுத்தப்பட்டு நன்கு மனதில் பதிந்துவிட்ட பிராண்டு பெயர்களால் ஆனவை. ஜலதோஷமா இதைச் சாப்பிடு, உடல் வலியா இந்த மாத்திரையை எடுத்துக்கொள், குளிர்க் காய்ச்சலா இதுதான் நிவாரணி என்ற அளவுக்கு இவை பிரபலமாகிவிட்டன. ஆனால், ஒரேயொரு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள்கூட, தேவையின்றி பிற நோய்களுக்கான நோய்முறி குணமும் கொண்ட மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவது தேவையற்றது மட்டுமின்றி, நோய் எதிர்ப்புச் சக்தியையும் நாளடைவில் போக்கிவிடும்.
பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள்தான் இந்தத் தடையால் பெரிதும் வியாபாரத்தை இழக்கப்போகின்றன. எனவே, அவையும் அவற்றால் பயன் அடைபவர்களும் இந்த நடவடிக்கையைப் பெரிதும் எதிர்க்கின்றனர். சுமார் ரூ. 4,000 கோடி மதிப்புள்ள மருந்து - மாத்திரை வர்த்தகம் வீணாகிவிடும் என்பது அவர்களுடைய ஆதங்கம்.
உண்மையிலேயே மக்களுக்கு இவை தீங்கை விளைவிக்கும் கூட்டு மருந்துகள் என்றால், இத்தனை ஆண்டுகள் இவற்றை அனுமதித்தது ஏன்? இப்போது மட்டும் 340 வகை கூட்டு மருந்துகள் தீங்கானவை என்ற முடிவுக்கு வந்தது எப்படி? எஞ்சிய கூட்டு மருந்துகள் நன்மை தருபவையா, இன்னும் ஆய்வுகள் முடியவில்லையா? இவை மக்களுடைய மனங்களைக் குடையும் கேள்விகள். இந்தக் கூட்டு மருந்துகள் பெரும்பாலும் பொருத்தமற்றவை, பயனற்றவை, சமயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றே கருதப்படுகிறது.
அதேசமயம், ஒரு நோய்க்கு அல்லது நோய் அறிகுறிக்கு ஒற்றை மருந்தைவிட கூட்டு மருந்து நல்ல பலன் அளிக்கிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம். காசநோய், மலேரியா, எச்.ஐ.வி. நோய்த்தொற்று, எய்ட்ஸ் போன்றவற்றுக்குக் கூட்டு மருந்துகளே பரிந்துரைக்கப்படுகின்றன. எனவே, மக்கள் உட்கொள்வதற்குப் பாதுகாப்பான, அவசியமான, பயனுள்ள கூட்டு மருந்துகள் தொடர்பான பட்டியலை அரசே வெளியிட வேண்டும். மத்திய அரசு தனியாகவும் மாநில அரசுகள் தனித்தனியாகவும் மருந்து உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கும் முறையைப் பொதுவான முறைக்கு மாற்ற வேண்டும். மருந்து ஆய்வாளர்கள் தங்களுடைய பணிக்குரிய பயிற்சிகளை அவ்வப்போது மேம்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம்.
மருந்து தயாரிப்பு, விநியோகம், விற்பனை தொடர்பான நம்முடைய சட்டங்கள் குழப்பமானவை. விசாரணை நடைமுறை களும் காலதாமதத்துக்கே வழிவகுக்கின்றன. 294 கூட்டு மருந்துகளைத் தடை செய்வது தொடர்பான பழைய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் 2007 முதல் நடந்துவருவது இதற்கு உதாரணம். மருந்துக் கட்டுப்பாட்டாளர் 2012-ல் 7,000 மனுக்களைக் கூட்டு மருந்துகளின் பாதுகாப்பு, பயன் குறித்து ஆய்வதற்காகப் பெற்றிருக்கிறார். மத்திய அரசும் நீதிமன்றங்களும் இந்த வழக்குகளைத் தீர்மானிப்பதில் அறிவியல், தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. சுகாதாரமும் மருந்தும் ஒரே துறையின் கீழ் நிர்வகிக்கப்பட வேண்டும். ‘மருந்து தயாரிப்பு’ என்ற சுகாதார அம்சத்தையும், ‘விற்பனை’ என்ற வர்த்தக அம்சத்தையும் இணைத்து நிர்வகிக்கும் வகையில் ‘தேசிய சுகாதார ஆணையம்’ என்ற அமைப்பை ஏற்படுத்துவதும் பலனளிக்கும்.