Published : 08 Oct 2021 03:11 AM
Last Updated : 08 Oct 2021 03:11 AM

பத்திரப் பதிவுத் துறை: நிர்வாகச் சீர்திருத்தங்களின் அவசரத் தேவை

கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகப் புகார் அளிக்கப்பட்ட பதிவுத் துறை அதிகாரிகள் சிலர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மண்டல அளவிலான அதிகாரிகளின் வழக்கமான இடமாற்றம்கூட அதிரடி நடவடிக்கையைப் போலக் கருதப்படுகிறது. பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்களில் அவ்வப்போது திடீர் சோதனைகளை நடத்துவதும் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டால் விசாரணை நடத்துவதும் மட்டுமே முறைகேடுகளைத் தடுத்துவிடாது. துறைசார்ந்த முழுமையான சீர்திருத்தங்களை நோக்கி அரசு நகர வேண்டும்.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்தாலும்கூட, பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் மீதான உடனடி நடவடிக்கை என்பது பெரிதும் இடமாறுதலாகத்தான் இருக்கிறது. அடுத்த சில மாதங்களிலேயே இடமாறுதல் நடவடிக்கையும் முடிவுக்கு வந்துவிடுகிறது. இது போன்று விசாரணையில் உள்ளவரின் இடமாறுதல் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட ஒரு வழக்கில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வானது, பத்திரப் பதிவுத் துறையில் நடக்கும் தவறுகளைக் களைய, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் அரசுக்கு இத்தகைய நிர்ப்பந்தங்களைக் கொடுப்பது புதிதல்ல. பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தரகர்கள் இருப்பது அரசுக்குத் தெரியுமா என்று சென்னை உயர் நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு கேள்வி எழுப்பியது. சார்பதிவாளர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் எத்தனை, அவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எத்தனை என்ற விவரங்களும் அப்போது கேட்கப்பட்டன. ஆனால், நீதிமன்றத்தின் இத்தகைய கேள்விக் கணைகள் பெரும்பாலும் பத்திரிகைச் செய்திகளாக மட்டுமே முடிந்துவிடுகின்றன. பத்திரப் பதிவுத் துறை வழக்கம்போல, அதன் போக்கில் இயங்கிக்கொண்டிருக்கிறது.

அதிமுக ஆட்சியிலும்கூட, கடந்த ஆண்டு பத்திர எழுத்தர்களும் நிலத் தரகர்களும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்டது. பத்திர எழுத்தர்கள், அதற்கான ரசீது அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. துறையின் தலைமை அதிகாரிகள் இத்தகைய சீர்திருத்தங்களைச் செய்ய முயற்சித்தாலும் அவை உரிய பலன்களை அளிப்பதில்லை என்பதுதான் உண்மை நிலை. ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் பெரும்பாலும் அப்போது ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சியைக் குற்றம்சாட்டுவதே வழக்கமாக இருக்கிறது. ஊழலுக்குத் துணையாகவும் வழிகாட்டிகளாகவும் இருக்கும் அதிகாரிகள், தங்களைக் கவனமாகப் பாதுகாத்துக்கொள்கிறார்கள்.

பத்திரப் பதிவுத் துறை மட்டுமல்ல, வணிகவரித் துறை, வருவாய்த் துறை ஆகியவற்றின் மீதும் இதே விமர்சனங்கள் எதிர்நிற்கின்றன. மாநில அரசுக்கு வருவாய் அளிக்கக்கூடிய இத்துறைகளில் நடக்கும் தவறுகள், அரசு நிர்வாகத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியவை. பெருந்தொற்றின் பாதிப்பால் அரசின் வரிவருவாய் இனங்கள் அனைத்தும் கேள்விக்குள்ளாகி இருக்கும் நிலையில், அவற்றில் நிலவிவரும் இத்தகைய தவறுகள் உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x