Published : 12 Mar 2016 09:01 AM
Last Updated : 12 Mar 2016 09:01 AM

தேசிய நீதிமன்றம் காலத்தின் தேவை!

உச்ச நீதிமன்றத்தின் பணிச் சுமையும் தேங்கும் வழக்குகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகும் நிலையில், ‘தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம்’ கோரிக்கை உயிர் பெற்றிருக்கிறது.

கடந்த காலங்களில் இப்படிப்பட்ட மனுக்கள், கேள்விகளைப் புறந்தள்ளிய உச்ச நீதிமன்றம், இது தொடர்பான பொது நல மனுவை இப்போது விசாரணைக்கு ஏற்றிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்காகத் தேங்கும் வழக்குகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. உரிமையியல், குற்றவியல் வழக்குகளின் நடுவில் அரசியல் சட்டம் தொடர்பான வழக்குகளைப் பிரிக்க வேண்டும். ஒரு சட்டம் அல்லது அரசின் ஆணை அல்லது அரசுத் துறை பிறப்பிக்கும் விதி தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது கருத்தைத் தெரிவிப்பதே முக்கியம். பல நாடுகளில் உச்ச நீதிமன்றங்கள் இதையே தன் பணியாக மேற்கொள்கின்றன. நம்முடைய உச்ச நீதிமன்றத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து குவியும் மேல் முறையீட்டு வழக்குகளை எதிர்கொள்வதே பெரும் சவாலாகிவருகிறது. ஒருபுறம் வழக்குகள் தேக்கத்துக்கு மட்டும் அல்லாமல், மறுபுறம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் - அதுவும் டெல்லியிலிருந்து வெகு தொலைவில் - வசிக்கும் வாதிகள் தங்களுடைய வழக்கின் மேல்முறையீட்டுக்காக டெல்லி வரை வந்து செல்லும் அலைச்சல், செலவுகள் போன்ற துயரத்தையும் இது உருவாக்குகிறது.

இந்தப் பிரச்சினைகளைப் போக்கப் பல யோசனைகள் முன்வைக்கப் படுகின்றன. உச்ச நீதிமன்றத்தை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அரசியல் சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அரசியல் சட்டப் பிரிவையும், இதர வழக்குகளுக்கு இன்னொரு பிரிவையும் ஏற்படுத்தலாம் என்பது ஒரு யோசனை. டெல்லியில் அரசியல் சட்ட அமர்வை வைத்துக்கொண்டு மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் பிராந்திய அளவில் உச்ச நீதிமன்றக் கிளைகளை உருவாக்கலாம் என்பது இன்னொரு யோசனை. அரசியல் சட்டத்துடன் தொடர்பில்லாத வழக்குகளை 4 வெவ்வேறு பெருநகரங்களில் விசாரிக்க மேல்முறையீட்டு விசாரணைக்கான தேசிய நீதிமன்றத்தை ஏற்படுத்தலாம் என்பதும் ஒரு யோசனை.

மத்திய சட்ட அமைச்சகம் சமீபத்தில்தான் ‘மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க தேசிய நீதிமன்றம் தேவை’ என்ற வழக்கறிஞர் ஒருவரின் கோரிக்கையை நிராகரித்தது. உச்ச நீதிமன்றத்தின் அமைப்பையும் தன்மையையும் மாற்றிவிடும் வகையில் மறுவரையறை செய்வதற்கு அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என்பதாலேயே அமைச்சகம் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது. எனினும், தேவைப்பட்டால் அரசியல் சட்டத்தின் 130-வது பிரிவைத் திருத்தி, 4 பிராந்தியங்களில் 4 மேல்முறையீட்டு விசாரணை நீதிமன்றங்களை ஏற்படுத்தலாம் என்று மத்திய சட்ட ஆணையத்தின் 229-வது அறிக்கை (2009) கூறியது. குடியரசுத் தலைவரின் அனுமதியுடன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தை டெல்லியிலோ, அவர் விரும்பும் வேறு ஊர்களிலோ நிறுவி வழக்குகளை நடத்தலாம் என்று அப்பிரிவு கூறுகிறது. ஆனால், மேல்முறையீட்டு நீதிமன்றமாக உச்ச நீதிமன்றத்துக்கு அரசியல் சட்டத்தின் 136-வது பிரிவு அளித்துள்ள இந்தச் சிறப்பதிகாரத்தை, தன்னைவிட அந்தஸ்தில் குறைந்த நீதிமன்றங்களுடன் உச்ச நீதிமன்றம் பகிர்ந்துகொள்ளுமா என்ற கேள்வியும் நிலவியது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையை இப்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருப்பது முக்கியமானது. வரவேற்புக்குரியது.

உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் அந்தஸ்தையும் எந்த விதத்திலும் பாதித்துவிடாமல் இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டறிவது காலத்தின் தேவை; உச்ச நீதிமன்றத்தால் மட்டுமே அது முடியும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x