Published : 04 Mar 2016 09:17 AM
Last Updated : 04 Mar 2016 09:17 AM

அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி (இ.பி.எஃப்.) தொகையில் ஒரு பகுதி மீது வரி விதிக்க அரசு உத்தேசித்திருக்கிறது என்ற அறிவிப்பு மாதச் சம்பளக்காரர்களிடையே கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. வருவாய்த் துறைச் செயலாளர் இது தொடர்பாக அளித்த விளக்கம் திருப்தியாக இல்லை.

“ஓய்வூதியத் திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு நிதிப் பாதுகாப்பை அளிப்பவை; ஓய்வுக்குப் பிறகு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையைப் பெறும் விதத்திலும், ஓய்வூதியத் திட்டத்துக்குப் பணியில் இருக்கும்போதே குறிப்பிட்ட தொகையைச் செலுத்தும் வகையிலும் உள்ள திட்டங்கள் அனைத்துமே சரிசமமாக நடத்தப்பட வேண்டும்” என்று பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருக்கிறார் அருண் ஜேட்லி. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் (என்.பி.எஸ்.) வருகிறவர்கள் ஓய்வுபெறும்போது அவர்கள் பங்குக்குரிய தொகையில் 40%-ஐ வரிப் பிடித்தம் ஏதுமில்லாமல் பெற்றுக்கொள்ளலாம். ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்.) உள்ளிட்ட திட்டங்களுக்கும் 2016 ஏப்ரல் 1-க்குப் பிறகு இதே நடைமுறை பொருந்தும் என்று கூறியிருக்கிறார். வழக்கமான ஓய்வூதியத் திட்டத்துக்கும் வருங்கால வைப்பு நிதி மூலமான திட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை அரசு வேறுபடுத்திப் பார்த்திருக்க வேண்டும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்.) திட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் ஏன் 40% தொகைக்கு ஒரு காசோலையும் 60% தொகைக்கு இன்னொரு காசோலையும் தனித்தனியாக வழங்கப்பட வேண்டும்? 60% தொகை ஏன் வரி விதிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்?

ஓய்வூதியப் பலன்கள் என்றால், அது எல்லா பிரிவினருக்கும் ஒரே மாதிரியாகக் கிடைக்க வேண்டும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி என்பது கட்டாய சேமிப்பாகத்தான் இருக்கிறது. சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மிகவும் குறைவாக உள்ள இந்தியச் சமூகத்தில், இந்தத் திட்டம்தான் பணிக் காலத்தின் இறுதியில் மகன், மகள் திருமணம் அல்லது படிப்பு, சொந்த வீடு போன்ற தேவைகளுக்குக் கைகொடுக்கிறது. சிலர் இந்தத் தொகையிலிருந்துதான் உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சை போன்ற செலவுகளைக்கூட எதிர்கொள்கின்றனர். உயர் வருவாய்ப் பிரிவினர் வரி விதிப்பிலிருந்து தப்பிக்க இத்தகைய திட்டங்களுக்குச் சந்தா செலுத்துகின்றனர் என்றே வைத்துக்கொண்டாலும்கூட அதற்கும் ரூ.1.5 லட்சம் என்ற உச்ச வரம்பு இருக்கிறது. அதையும் மீறிய தொகை முதலிலேயே வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறது. எனவே, பணத்தைத் திரும்பப் பெறும்போது மீண்டும் வரி விதிப்பு என்பது இரட்டை வரிவிதிப்பாக மாறுகிறது.

ஊழியர்கள் தங்களுடைய வருங்காலத்துக்காகச் சேமிக்க வேண்டும் என்பதை அரசு வலியுறுத்த நினைத்தால், ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டத்தை மேலும் கவர்ச்சிகரமாக மாற்ற வேண்டும். இப்படியானவர்களிடம் வரி விதிப்பது மனிதாபிமானமற்றது. இது சேமிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் போக்கிவிடும். இந்த சேமிப்புத் தொகைதான் அரசுக்குப் பல திட்டங்களுக்கும் கணிசமாகக் கை கொடுக்கிறது. எனவே, மாதச் சம்பளக்காரர்களின் இதுபோன்ற சேமிப்புகளுக்கு வரி விதிக்கும் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x