Published : 22 Sep 2021 03:04 am

Updated : 22 Sep 2021 05:56 am

 

Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 05:56 AM

ஆடைப் புரட்சியின் நூற்றாண்டு நினைவு: நம் காலத்துக்கான பாடங்கள்

centennial-commemoration-of-the-clothing-revolution

காந்தி உயிரோடிருந்த காலத்தைக் கணக்கில் கொண்டால், அடுத்து வரும் 27 ஆண்டுகளுக்கு முக்கியமான நிகழ்வுகளின் நூற்றாண்டு நினைவுகளை மாதம்தோறும் நாம் அனுசரிக்க வேண்டியிருக்கிறது. இந்திய வரலாற்றில் ஏறக்குறைய முப்பதாண்டு காலம் ‘காந்தியின் சகாப்தம்’ என்றே அழைக்கப்படுகிறது. சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் கட்டம் என்ற வகையில் மட்டுமல்லாது சமூக, பண்பாட்டு உரையாடல்கள் தீவிரம் பெற்ற காலம் என்ற வகையிலும் காந்தியின் கருத்துகளும் அவர் முன்னெடுத்த மக்கள் இயக்கங்களும் இன்றும் நினைவில் கொள்ளப்பட வேண்டியவையாகவும் இன்றைய சூழலுக்கான வழிகாட்டுதல்களைப் பெறத்தக்கனவாகவும் இருக்கின்றன. 1921-ல் தமிழ்நாட்டுப் பயணத்தின்போது அவர் அரையாடையைத் தேர்ந்துகொள்ள முடிவெடுத்ததற்கும் அத்தகைய முக்கியத்துவம் உண்டு.

பாரிஸ்டர் படிப்புக்காக இங்கிலாந்துக்குச் சென்ற காந்தி, அங்கு பணக்கார்களுக்கு உடை தைத்துக்கொடுக்கும் ‘வெஸ்ட் எண்ட்’ தையற்கலைஞர்களிடமிருந்தே தனக்கான உடைகளைத் தைத்துக்கொண்டார் என்ற தகவலோடுதான் அவர் அரையாடைக்கு மாறிய நிகழ்வையும் அணுக வேண்டும். அன்றைய மக்களைப் பீடித்திருந்த வறுமை நிலை, அந்த முடிவெடுக்க அவரைத் தூண்டியது. அந்நியத் துணிகளைப் புறக்கணித்து கதராடை அணியும் வழக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது அவரது உள்ளக்கிடக்கையாக இருந்தது. மக்கள் தங்களில் ஒருவராகவும் தலைவராகவும் அவரை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான உத்தி என்று இந்நிகழ்வை மதிப்பிடுபவர்களும் உண்டு. தனது மக்களிடம் அவர் தன்னை எவ்வாறு காட்சிக்கு முன்வைத்தாரோ அதே உடைகளுடன்தான் உலக அரங்கின் முன்னாலும் நின்றார். இரண்டாவது வட்ட மேசை மாநாட்டுக்காக இங்கிலாந்தில் தங்கியிருந்த வேளையில், ஏழைகள் அதிகம் வசிக்கும் ‘ஈஸ்ட் எண்ட்’ பகுதியில்தான் அவர் தங்கியிருந்தார். ஆடைகளில் வெளிப்படுத்திய அரசியலை தனது செயல்பாடுகளாலும் உறுதிப்படுத்தினார். இன்று இந்திய அரசின் பிரதிநிதிகளாக உலகை வலம்வரும் தலைவர்களிடமும் மக்கள் அதையேதான் எதிர்பார்க்கிறார்கள். அரசின் பிரதிநிதியாக மட்டுமல்ல, அவர்கள் மக்களின் பிரதிநிதிகளாகவும் இருந்தாக வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் வறுமையாலும் பிணியாலும் துயரத்தில் உழன்றுகொண்டிருக்கும் காலத்தில் அவர்களது தலைவர்களின் உடுப்புச் செலவுகள் விவாதப் பொருளாவது அதன் காரணமாகத்தான்.


அரசியல் பணியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்கள் தங்களது சொந்தத் தொழில்களிலிருந்தும் விலகி நிற்க வேண்டும். பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக லண்டன் சென்ற காந்தி, அரசியலில் இணைத்துக் கொண்ட பிறகு வழக்கறிஞர் தொழிலுக்கும் உடுப்புகளுக்கும்கூட விடைகொடுத்துவிட்டார். தன்னை மக்களுக்காக முழுவதும் அர்ப்பணிக்கும் தலைவர்களே என்றென்றும் மக்களால் நினைவுகூரப்படுவார்கள். அவர்களே அடுத்து வரும் தலைமுறைகளின் வழிகாட்டியாகவும் கொள்ளப்படுவார்கள். அரசியல் நோக்கில் காந்தி எடுத்த பல முடிவுகள் குறித்து இன்றும் வெவ்வேறு கோணங்களிலிருந்து விமர்சனங்கள் எழுந்தபடியேதான் இருக்கின்றன. ஆனாலும், பொதுவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் அனைவருக்கும் அவரே என்றும் முன்னுதாரணம்.
ஆடைப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுClothing revolutionகாந்திமகாத்மா காந்திMahatma gandhiகாந்தியின் சகாப்தம்சுதந்திர போராட்டம்காந்தியின் ஆடை அரசியல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x