

காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாருடன் தொடர்புடையவர்களையும் சாட்சிகளையும் விசாரிப்பதற்கு முன்பாக அவர்களுக்குத் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட எழுத்துபூர்வமான அழைப்பாணையைக் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவிட்டிருப்பது முக்கியமான ஒரு வழிகாட்டு நெறிமுறையாகக் கொள்ளப்பட வேண்டியது. விசாரணைக்கான அழைப்பாணையில் புகார் எண், அளிக்கப்பட்ட தேதி, புகார்தாரரின் பெயர் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் விசாரணையின் பெயரில் அழைக்கப்பட்டவர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற அமர்வின் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அறிவுறுத்தியுள்ளார். லலிதகுமாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைக் காவல் துறை விசாரணைகளின்போது தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
லலிதகுமாரி வழக்கில் 2013-ல் உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, குற்றம்சாட்டப்பட்டவர், புகார்தாரர் இருவரது உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில், முதல் கட்ட விசாரணைக்குக் கால வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். அந்தக் கால அளவு ஒரு வார காலத்தைத் தாண்டிச் செல்லக் கூடாது. முதல் கட்ட விசாரணை தாமதமாவதும் அதற்கான காரணங்களும் காவல் நிலைய தினசரி பொதுக் குறிப்பேட்டில் பதிவுசெய்யப்பட வேண்டும். பிடியாணையின்றிக் கைதுசெய்யக்கூடிய குற்றங்களைப் பொறுத்தவரையில், முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்வதா, இல்லை முதல் கட்ட விசாரணை நடத்துவதா என்று முடிவெடுப்பது தொடங்கி, முதல் கட்ட விசாரணைகளைக் குறித்த அனைத்து விவரங்களும் காவல் நிலையக் குறிப்பேடுகளில் பதிவுசெய்யப்பட வேண்டும் என்று அந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
எழுத்துபூர்வமான பதிவுகளும் அழைப்பாணைகளும் காவல் துறை விசாரணைகளின் கடுமையைக் குறைக்கக்கூடும் என்று நீதித் துறை நம்புகிறது. எழுத்துபூர்வமான அழைப்பாணையை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு வலியுறுத்தியுள்ளதுபோல, கேரள உயர் நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு காவல் துறையினர் பொதுமக்களிடம் மரியாதைக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று சுற்றறிக்கை பிறப்பிக்குமாறு காவல் துறை இயக்குநருக்கு அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்களிடம் காவல் துறையினர் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அனைவரையும் குற்றவாளிகள் என நினைத்து நடந்துகொள்ளக் கூடாது என்றும் வழக்கு விசாரணையின்போது நீதிபதி தேவன் ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். மதுரை அமர்வு, கேரள உயர் நீதிமன்றம் இரண்டுமே காவல் துறை விசாரணைகள் தொடர்பில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுவருவதன் அடிப்படையிலேயே இத்தகைய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. தினந்தோறும் பல்வேறு வகையான வழக்குகளைக் கையாள வேண்டியிருக்கும் காவல் துறையினர் புகார்களுடன் தொடர்புடைய அனைவரையும் ஒரே விதத்தில் நடத்துவதைத் தவிர்ப்பதே அவர்களின் மீதான பொதுமக்களின் அச்சத்தைக் குறைக்கும்.