ஜம்மு-காஷ்மீருக்கு அரசு தேவை

ஜம்மு-காஷ்மீருக்கு அரசு தேவை
Updated on
2 min read

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு மாதத்துக்கு மேலாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி நீடிக்கிறது.

மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் மாநில முதலமைச்சருமான முப்தி முகம்மது சய்யீத் மறைவுக்குப் பிறகு, அவரது மகள் மெஹ்பூபா முப்தி முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அதற்கான எந்த அறிகுறியும் தென்படாதது கவலை தருகிறது. குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்ட 5 வாரங்களில் பொது மக்களில் 3 பேர், இரு வேறு சம்பவங்களில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கித் தோட்டாக்களுக்குப் பலியாகிவிட்டனர். புல்வாமா என்ற இடத்தில் பாதுகாப்புப் படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, அங்கு கலவரம் மூண்டது. 2001-ல் நடந்த நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, பிறகு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். ஜிலானி மீது தேசத் துரோகக் குற்றம் புரிந்ததாகப் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அப்சல் குரு தூக்கில் போடப்பட்டதைக் கேள்வி கேட்டு நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்திய எதிர்ப்புக் கோஷம் எழுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கண்ணைய்ய குமார் கைது செய்யப்பட்டிருப்பதும் காஷ்மீரிகளால் கவனிக்கப்படுகிறது. அப்சல் குருவுக்கு நீதி வழங்கப்படவில்லை என்று மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.) ஏற்கெனவே கண்டித்திருந்தது. அப்படியிருந்தும் குறைந்தபட்சச் செயல்திட்டத்தின் அடிப்படையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து, மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தியது. இப்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, காஷ்மீர் பிரிவினைவாதிகளை ஆதரிப்பதாக டெல்லி மாணவர் சங்கத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது பி.டி.பி. கட்சிக்கு எரிச்சலை ஊட்டியிருக்கிறது.

இந்நிலையில், பி.டி.பி., பாஜக கட்சிகள் தங்களுக்குள் பேசி விரைந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். முப்தி முகம்மது சய்யீத் தலைமையில் நடந்த அரசை மீண்டும் தொடர வேண்டும். அல்லது தங்களால் மேற்கொண்டு கூட்டணி அரசை அமைக்க முடியாது என்று பகிரங்கமாக அறிவித்து, மற்ற கட்சிகள் அந்த முயற்சியில் ஈடுபட வழிவிட வேண்டும். எதுவுமே சரிப்படாது என்று தோன்றினால், மாநில சட்டப் பேரவையைக் கலைத்துவிட்டு புதிதாகத் தேர்தலை நடத்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். காஷ்மீர் மாநிலத்துக்குத் தருவதாகச் சொன்ன நிதியுதவியை உரிய நேரத்தில், போதிய அளவில் மத்திய அரசு தரவில்லை என்பது பி.டி.பி.யின் முக்கியக் குற்றச்சாட்டு. அத்துடன் இந்துத்துவக் கருத்துக்களைத் திணிக்கும் முயற்சிகளும் காஷ்மீரப் பள்ளத்தாக்கில் கடும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளன.

எப்போதோ அமலில் இருந்த சட்டத்தைத் தூசி தட்டி, மாட்டுக் கறிக்குத் தடை விதித்தது, காஷ்மீருக்கென்று இருந்த தனிக் கொடிக்கு எதிர்ப்புத் தெரிவித்தது என்று பி.டி.பி. கட்சியை பாஜக தொடர்ந்து ஆழம்பார்த்து வருகிறது. காஷ்மீர் மக்களுக்கு நெருக்கமானவர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் தொடர்வதை, தங்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையாகவே அம்மாநில மக்கள் பார்க்கின்றனர். இவையெல்லாம் காஷ்மீர் மக்களுக்குக் கோபத்தையும் அதிருப்தியையும் அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே, நிலைமை மேலும் முற்றுவதற்குள் பாஜகவும் பி.டி.பி.யும் பேசி, குறைந்தபட்சச் செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டு மீண்டும் கூட்டணி ஆட்சியை விரைந்து வழங்க முன்வர வேண்டும். அல்லது மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in