

உலகப் பொருளாதாரப் பின்னணியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்று பரிசீலித்த இந்திய ரிசர்வ் வங்கி நிர்வாகிகள் கூட்டம், வட்டி வீதத்தில் மாறுதல் எதையும் மேற்கொள்ளாமல் அப்படியே விட்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் 29-ல் வியப்பளிக்கும் விதத்தில் வட்டி வீதத்தை 0.50% குறைத்து 6.75% ஆக்கியிருந்தது. உலகப் பொருளாதார நிலை சுணங்கியிருக்கும் நிலையில், வட்டி வீதத்தை மாற்றாமலிருப்பது வியப்பை அளிக்கவில்லை. பணக்கொள்கையை ஆராய்ந்த நிர்வாகிகள் உள்நாட்டிலும் உலக அளவிலும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிப்போயிருப்பது குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர்.
சீனத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிச்சயமற்ற நிலை, ஜப்பானிய அரசு மேற்கொண்டுள்ள புதிய பண அளிப்பு நடவடிக்கை, பன்னாட்டுச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை அடிமட்டத்துக்குச் சென்றுவிட்டதால் ஏற்பட்டுள்ள விளைவுகள், நிதிப் பற்றாக்குறையை இட்டுநிரப்ப அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களைத் தங்களுடைய கைவசத்திலிருந்து விற்கும் சவுதி அரேபிய அரசின் நடவடிக்கை போன்றவை குறித்தெல்லாம் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. அமெரிக்க அரசின் கடன் பத்திரங்கள் விற்கப்பட்டால் அதன் செலாவணி மதிப்பு குறையும். அதனால் இந்தியாவுக்கும் பாதிப்பு நேரிடும். பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அமெரிக்க டாலர்கள் வரத்து அதிகரித்தாக வேண்டும். இல்லையென்றால், ரிசர்வ் வங்கி கணித்தபடி லாபமும் குறையக்கூடும். இதனால் நம்முடைய பற்று-வரவு அளவும் சுருங்கும். பணப்புழக்கத்திலும் இது கடும் விளைவுகளை ஏற்படுத்தும். இந்நிலையில் அமெரிக்க டாலர்களுக்கு நிகராக இந்திய ரூபாயில் கணக்கிடுவதற்குப் பதிலாக தங்கத்தின் சந்தை மதிப்புக்கு நிகரான முறையில் கணக்கிடும் முறைக்கு மாற வேண்டும். இதனால் சில இடர்கள் தவிர்க்கப்படும். இப்போதைக்கு இந்திய ரூபாயின் செலாவணி மதிப்பு ஓரளவுக்கு நிலையாக இருந்தாலும், வெளிநாடுகளிலிருந்து இந்தியத் தொழிலாளர்களும் தொழிலதிபர்களும் அனுப்பும் தொகை குறைந்தால் அதுவும் சரியக் கூடும்.
நாட்டின் பணவீக்க விகிதம், பொருளாதார வளர்ச்சி என்ற இரண்டு அடையாளங்களும் நன்றாக இல்லை. ரிசர்வ் வங்கியின் ஆய்வு பட்டவர்த்தனமாக இருந்தாலும் அதுவும் சில விஷயங்களைக் கவனிக்கத் தவறியிருக்கிறது. மொத்த விலைக் குறியீட்டெண்ணுக்கும் சில்லறை விலைக் குறியீட்டெண்ணுக்கும் இடையில் வேறுபாடு ஏன் என்பதை ரிசர்வ் வங்கி விளக்கவில்லை. இந்த வேறுபாடு சில வாரங்களுக்குப் பிறகு குறைந்திருந்தாலும் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டும். விலைவாசியைக் கட்டுக்குள் வைப்பது ரிசர்வ் வங்கியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்றாலும், சில்லறை விலை அடிப்படையிலான குறியீட்டெண்ணை மட்டும் கணக்கில் கொள்வதையும் தாண்டி ரிசர்வ் வங்கி தனது பார்வையைச் செலுத்தியிருக்க வேண்டும். உணவுப் பண்டங்களின் விலை உயர்கிறது என்பதற்காகப் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதைவிட, தேவைப்படும் உணவுப் பண்டங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்பிவைத்தும், வெளிநாடுகளிலிருந்து குறைந்த விலையில் வாங்கி விற்பதற்கு முன்னுரிமை தந்தும் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
நம்முடைய பொருளாதார உலகு, சர்வதேச அளவில் நிலவும் சுணக்கம் போக வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைப்பது மட்டுமே கடமை என்று அரசு கருதிவிடக் கூடாது. துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்பதுடன், முக்கியத் துறைகளில் அரசின் ஒதுக்கீட்டையும் செலவையும் அதிகப்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஊட்ட முடியும்!