பயங்கரவாதத்தை ஒடுக்க கொடூர சட்டமா?

பயங்கரவாதத்தை ஒடுக்க கொடூர சட்டமா?
Updated on
2 min read

சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் எனும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது பாஜக தலைமையிலான குஜராத் அரசு. ‘பயங்கரவாதம், திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு மசோதா - 2015’ என்று அழைக்கப் படும் மசோதாவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அம்மாநில அரசு முயற்சி செய்கிறது. நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது 2003-ல் இம்மசோதா முதன் முறையாகக் கொண்டுவரப்பட்டது.

இதன் சில பிரிவுகள் மிகக் கடுமையானவை என்று தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது. தொலைபேசித் தகவல் பரிமாற்றத்தை இடைமறித்துக் கேட்கும்போது கிடைக்கும் தகவல்களை ஆதாரமாக நீதிமன்றத்தில் சேர்க்கலாம் என்று மசோதாவின் ஒரு பிரிவு கூறுவதை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த அப்துல் கலாம் ஏற்க மறுத்தது நினைவுகூரத் தக்கது. அவருக்குப் பிறகு குடியரசுத் தலைவரான பிரதிபா பாட்டீலும் இம்மசோதாவுக்கு அனுமதி மறுத்தார். 2015 மார்ச்சில் குஜராத் சட்டப் பேரவை இம்மசோதா மீது புதிதாக விவாதம் நடத்தி மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், இம்மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் இப்போது திரும்பக் கேட்டுப் பெற்றிருக்கிறது. குடியரசுத் தலைவர் முகர்ஜியும் அந்த மசோதாவை நிராகரித்துவிடுவார் என்ற அச்சத்தின் பேரிலேயே இப்போது திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.

பயங்கரவாதச் செயல்களை முறியடிக்க மேற்கொள்ளப்படும் சட்ட முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில்தான் முடிகின்றன. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட ரௌலட் சட்டத்துக்கு இணையான பயங்கரத் தன்மையுள்ளது என்று கருதப்படும் ‘பயங்கரவாத, சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்-1985’ தடா சட்டம் என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. அதுவே ‘பயங்கரவாதச் செயல்கள் தடுப்புச் சட்டம்-2003’ பொடா என்று மறு அவதாரம் எடுத்தது. அச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தத்தான் வாய்ப்பு அதிகம் என்று உணரப்பட்டதால் அது தானாகவே காலாவதியாக அனுமதிக்கப்பட்டது.

குஜராத் அரசு கொண்டுவர விரும்பும் பயங்கரவாதத் தடைச் சட்டமானது மகாராஷ்டிர அரசு கொண்டுவந்த, ‘திட்டமிட்ட குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்கான மகாராஷ்டிர சட்டம்’ (எம்.சி.ஓ.சி.ஏ.) என்பதன் பாணியிலானது. மகாராஷ்டிர சட்டமே குறிப்பிட்டுச் சொல்லும்படியான பலன் எதையும் விளைவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்க விஷயம்.

குஜராத் மாநில அரசு கொண்டுவர விரும்பும் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன. மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள காவல்துறை அதிகாரியிடம் ஒருவர் தரும் ஒப்புதல் வாக்குமூலத்தை, குற்றத்துக்கான ஆதாரமாக நீதிமன்றம் ஏற்கலாம், குற்றப்பத்திரிகையை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை 180 நாள்கள் வரை நீட்டிக்கலாம் என்ற பிரிவுகள் உள்ளன. இவையெல்லாம் அரசியல் சட்டம் மக்களுக்கு அளிக்கும் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும் வகையில் உள்ளன. உண்மையில் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்த மாநில அளவில் இம்மாதிரியான சட்டங்கள் தேவையே இல்லை. பயங்கரவாதச் செயல்களிலோ சதிகளிலோ ஈடுபடுகிறவர்களைப் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு மேலும் ஆள் பலமும், சாதனங்களும், பயிற்சிகளும்தான் தேவையே தவிர, சட்டங்கள் அல்ல; அதுவும் மனித உரிமைகளுக்கு ஆபத்தாக விளங்கக்கூடிய சட்டங்கள் தேவையே இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in