Published : 17 Feb 2016 08:31 AM
Last Updated : 17 Feb 2016 08:31 AM

ராணுவ வீரர்களின் பலிபீடமா சியாச்சின்?

சியாச்சின் பனிமலைப் பகுதியில் இம்மாதம் 3-ம் நாள் ஏற்பட்ட மாபெரும் பனிச்சரிவில் புதையுண்ட 10 இந்திய ராணுவ வீரர்களும் இறந்திருப்பது சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்துகிறது; ‘19 மதறாஸ் ரெஜிமென்ட்’ படைப் பிரிவைச் சேர்ந்த அவர்கள், கடல் மட்டத்திலிருந்து 19,600 அடி உயரத்தில் இருந்துகொண்டு, தேசத்தைக் காக்கும் பணியைச் செய்துவந்தனர். சாதாரணமாக, சில மணி நேரங்களுக்குக்கூடத் தங்கியிருக்க முடியாத, உயிர்களுக்கு மிகவும் ஆபத்தான இந்த இடத்தை இனியும் தொடர்ந்து ராணுவ வீரர்களைக் கொண்டு காவல் காக்க வேண்டுமா, அதன் மூலம் மேலும் பல அரிய உயிர்களை இழக்க வேண்டுமா என்பதை இந்தியாவும் பாகிஸ்தானும் முடிவு செய்வதற்கான நேரம் இது. கடுங்குளிர் உடலை ஊடுருவாமல் தடுக்க என்னதான் கவச உடை அணிந்தாலும், பாதுகாப்பு என்று நினைத்துக் கூடாரம் அடித்து அதற்குள்ளிருந்து காவல் காத்தாலும் வேளைக்கு உணவுடன், மருந்து மாத்திரைகளை உண்டு வந்தாலும், உறைபனி நிலைக்கும் கீழே குளிர் நிலவும் இப்பகுதி ரத்தத்தை உறைய வைத்து நாடி, நரம்புகளை வெடிக்கவைத்து மரணத்தை ஏற்படுத்திவிடும் மயான பூமியாகும். இயல்பாகவே ஆபத்தான இந்த இடம் இப்போது புவிவெப்ப நிலையில் ஏற்படும் மாறுதல்களால் மேலும் மோசமாகிவிட்டது. ‘3 லடாக் ஸ்கவுட்ஸ்’ என்கிற படைப் பிரிவைச் சேர்ந்த 4 வீரர்கள் சென்ற ரோந்து வாகனத்தின் மீது மிகப் பெரிய பனிப்பாறை விழுந்து அனைவரும் இறந்தனர். இப்போது விபத்து நடந்துள்ள இடத்துக்கு அருகில்தான் அந்த வாகனமும் பனிப் பாறையில் சிக்கியது. இந்திய வீரர்களுக்கு மட்டும்தான் இந்த ஆபத்து என்று இல்லை, பாகிஸ்தானிய வீரர்களும் இதே போல உயிர்த் தியாகங்களைச் செய்ய நேர்கிறது. 2012 ஏப்ரலில் காயாரி என்ற பகுதியில் ‘6 நார்தர்ன் லைட் இன்ஃபேன்ட்ரி’படைப் பிரிவைச் சேர்ந்த 129 பாகிஸ்தானிய ராணுவ வீரர்களும், அவர்களுக்கு உதவியாகச் சென்ற 11 சிவிலியன்களும் பனிப் பாறைகள் சரிந்ததில் அவற்றினுள் புதையுண்டு இறந்தனர். பனிச் சரிவு மட்டுமல்ல, இங்கு வீசும் பனிச் சூறாவளி, பனிப் புயல், கண்ணைப் பறிக்கும் சூரிய ஒளி போன்றவற்றாலும் வீரர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இங்கு பணிபுரிந்து உயிரோடு ஊர் திரும்பினாலும் உடல் ரீதியாக அதன் பின்விளைவுகள் மிக மோசமாகவே இருக்கின்றன. இந்த சியாச்சின் பனிச்சிகர முகடுகளைக்கூட விட்டுவைக்காமல் பாகிஸ்தானியத் துருப்புகள் ஒரு சில நாட்கள் ஆக்கிரமித்தார்கள் என்பதற்காகத்தான் இந்திய ராணுவம் இங்கே ஒரு படைப் பிரிவைக் கொண்டுவந்து நிறுத்தியது. இந்தியா தற்காப்புக்காகச் செய்ததை பாகிஸ்தான் வீம்புக்காகச் செய்து, தானும் ஒரு படைப் பிரிவை நிறுத்தியது. அவ்வாறு படைகள் நிறுத்தப்பட்ட 1984 தொடங்கி, இன்று வரையில் 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இருதரப்பிலும் இறந்துள்ளனர்.

இந்த இடத்தில் ராணுவ வீரர்களைத் தங்க வைப்பதும் காவல் சாவடிகளை அமைப்பதும் அவர்களுக்கு வேளைக்கு உணவு, மருந்து, உடைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் மிகுந்த சவாலான வேலை. அத்துடன் ஏராளமான மனித உழைப்பும் தேவைப்படுகிறது. எனவே, இரு நாடுகளுமே கூடிப் பேசி, இப்பகுதியில் ராணுவ வீரர்களை விலக்கிக்கொள்வது என்ற முடிவை எடுக்க வேண்டும். சிம்லா ஒப்பந்த அடிப்படையில், இப்பகுதியில் மோதல்கள் ஏற்படாமல் தடுக்கவும் பலப் பிரயோகம் செய்யாமல் தவிர்க்கவும் பேச்சு நடத்துவது என்று இரு நாடுகளுமே முன்னர் தீர்மானித்தன. அதைத் தீவிரப்படுத்தி இப்பகுதியை ராணுவப் படைகளற்ற பகுதியாக மாற்ற முனைய வேண்டும். அது இல்லாததால்தான், இரு நாடுகளுமே பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களைத் தொடர்ந்து இழந்துகொண்டிருக்கிறது. போர் வீரர்களை இயற்கைக்குப் பலி கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டியது. கடந்த காலங்களிலும் இது தொடர்பான யோசனைகளை இந்தியா தெரிவித்திருந்தது. இதை பாகிஸ்தான் இப்போது பரிசீலிக்க முன்வர வேண்டும். பாகிஸ்தானுடனான நட்புறவில் முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டிருந்தபோது கிறிஸ்துமஸ் அன்று லாகூர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு நட்புறவை வலுப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை ஒவ்வொன்றாகத் தொடர வேண்டும். இரு நாடுகளைச் சேர்ந்த மக்களும் ராணுவ வீரர்கள் இப்படி உயிரிழப்பதை விரும்பவில்லை. அத்துடன் இரு நாடுகளும் தொடர்ந்து போருக்கான தயார் நிலையில் இருப்பதையும் ஆதரிக்கவில்லை. இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த விபத்தையே ஒரு வாய்ப்பாகக் கொண்டு ராணுவ வீரர்களையும் காவல் சாவடிகளையும் சியாச்சின் பனிமலைப் பகுதியிலிருந்து விலக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி ஏற்பட இது முன்னோடியாக இருக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x