Published : 03 Sep 2021 03:14 AM
Last Updated : 03 Sep 2021 03:14 AM

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்ட மேடைகளல்ல சட்டமன்ற அவை

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு அமைந்த சட்டமன்ற அமைப்பின் நூற்றாண்டு விழாவை இந்தியக் குடியரசுத் தலைவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்துவந்து கொண்டாடியிருக்கிறது திமுக தலைமையிலான அரசு. நவீன இந்திய அரசியல் வரலாற்றின் முக்கியமானதொரு திருப்புமுனை நிகழ்வு நூற்றாண்டு விழாவாகவும், முன்னாள் முதல்வரின் படத்திறப்பு விழாவாகவும் மட்டும் முடிந்துவிடாமல், சரித்திரங்களின் பக்கங்களை மீண்டும் திரும்பிப்பார்க்கும் வாய்ப்பாக 1921 முதற்கொண்டு சட்டமன்ற நடவடிக்கைகளை மின்னுருவாக்கம் செய்யும் முக்கியமானதொரு திட்டமும் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டாட்சி அமைப்பில் மாநில சட்டமன்றங்களின் விவாதங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வை பாராட்டுக்குரியது. சட்டமன்ற விவாதங்கள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்ற அவரது வாக்குறுதியும் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு முன்பாகத் தற்போது நடந்துவரும் சட்டமன்ற விவாதங்கள் அனைத்தையும் சட்டமன்றத்தின் இணையதளத்தில் அனைவரும் படிக்கக் கிடைக்கிற வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும்.

நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் கண்ணியமான முறையில் நடைபெற்றுவருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்களும்கூட பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த சில பதிற்றாண்டுகளாக நிலவிவந்த முதன்மைக் கட்சிகள் இரண்டுக்கும் இடையிலான இருதுருவப் போக்கு முடிவுக்குவந்து, ஆரோக்கியமான அரசியல் விவாதத்துக்கான வாய்ப்புகள் உருவாகிவருகின்றன என்ற வகையில், இத்தகைய பாராட்டுரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதே நேரத்தில், கடந்த ஆட்சிக் காலங்களில் சட்டமன்ற விவாதங்களின்போது மிதமிஞ்சி ஒலித்த தனிநபர் துதிகளை இப்போதும் கேட்க முடிகிறது. அண்மையில், மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில் பேசிய திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் முதல்வர் கருணாநிதியை திராவிட இனத்தின் குலதெய்வம் என்று போற்றினார். இதயதெய்வம் என்ற எதிர்க்கட்சியின் விருப்பத்துக்குரிய வார்த்தையைக் குலதெய்வம் என்ற வார்த்தையால் ஈடுசெய்தார் போலும். கட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாதோ என்ற கேள்வியையே இத்தகைய புகழ்ச்சியுரைகள் ஏற்படுத்துகின்றன.

சட்டமன்றங்களிலும் நாடாளுமன்ற மரபுகளையே பின்பற்றும் நாம், பேரவைத் தலைவர், முதல்வர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் என்று அரசமைப்பின்படியான பொறுப்புகளைக் குறிப்பிட்டு விளிப்பதே சரியானதாக இருக்க முடியும். உறுப்பினர்கள் தங்களது கட்சித் தலைவராகவும் இருக்கும் முதல்வரைக் குறிப்பிடுகையில் கட்சியினரால் சூட்டப்பட்ட அடைமொழிகளைத் தவிர்ப்பதே சட்டமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கும் அளிக்கும் மதிப்பாக இருக்க முடியும். சட்டமன்றத்தில் தம்மைப் புகழ்ந்து பேசக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக தமது கட்சி உறுப்பினர்களுக்குத் தெரிவித்த பிறகும்கூட, உறுப்பினர்கள் அந்த அறிவுறுத்தலை ஏற்காமல், அவரைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது என்ற பீடிகையுடன் புகழ்பாடத் தொடங்குவது அதிர்ச்சியளிக்கிறது. அந்தப் புகழ்ச்சியுரைகள் அதற்கடுத்து உதயநிதி வரைக்கும் நீள்கின்றன. பண்பட்டதொரு அரசியல் நாகரிகத்தை உருவாக்கத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முயன்றுகொண்டிருக்கிறார். அவரது கட்சி உறுப்பினர்களும் அதற்குத் துணைநிற்க வேண்டும். கண்ணியத்துக்குரிய சட்டமன்ற அவை இனிமேலும் கட்சிகளின் பொதுக்கூட்ட மேடையாக இருக்க வேண்டாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x