Published : 31 Aug 2021 03:12 AM
Last Updated : 31 Aug 2021 03:12 AM

மத்திய அரசின் பொருளாதாரச் சீரமைப்பு: தவிர்க்கவியலாத தீங்கு

நான்காண்டு காலத்துக்குள் ரூபாய் ஆறு லட்சம் கோடியைத் திரட்டும் மத்திய அரசின் பொருளாதாரச் சீரமைப்புத் திட்டத்துக்கு எதிர்க் கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என்ற தொடர் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் சான்றாகவே இத்திட்டத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 42,000 கிமீ தொலைவிலான மின்வழித் தடங்கள், பிஎஸ்என்எல் நிறுவனங்கள், விமான நிலையங்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மத்திய அரசுக்குச் சொந்தமான சொத்துகளைத் தனியார் நிறுவனங்களுக்கு நீண்ட காலக் குத்தகைக்கு விடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சொத்துகளை ஏழே ஆண்டுகளில் பாஜக அரசு அழித்துவருவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அரசுக்குச் சாதகமான மூன்று நான்கு தொழிலதிபர்களுக்கு மட்டுமே பரிசாக இந்தக் குத்தகை அளிக்கப்படுகிறது என்பது அவரது குற்றச்சாட்டின் சாராம்சம்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் பொதுத் துறை முதலீடுகள் விற்கப்பட்டுள்ளன. இப்போதும்கூட, தனியார்மயத்துக்குத் தாங்கள் எதிரியல்ல என்றே ராகுல் காந்தி விளக்கம் அளித்திருக்கிறார். நீண்ட காலமாக நட்டத்தில் இயங்கிய தொழில்களும் குறைந்த சந்தைப் பங்கைக் கொண்ட நிறுவனங்களும் மட்டுமே காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தனியார்மயமாக்கப்பட்டன; கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும், பெருமளவிலான எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை வழங்கும் ரயில்வே போன்ற தொழில்களைத் தனியார்மயமாக்க காங்கிரஸ் எப்போதுமே எண்ணியதில்லை என்ற ராகுலின் கருத்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. அடிப்படைத் தொழில் துறைகளை, குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே குத்தகைக்கு விடும்பட்சத்தில் அது ஏகபோகத்துக்கு வழிவகுக்க வாய்ப்புகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. காங்கிரஸ், பாஜக இரண்டுமே தனியார்மயத்துக்கு ஆதரவாளர்கள்தான் என்பதையும் சேர்த்தே இந்தப் பிரச்சினையை அணுக வேண்டியிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இல்லாத மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியைப் பெருந்தொற்றின் பாதிப்புகளால் பாஜக எதிர்கொண்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய பாரதீய மஸ்தூர் சங்கத்திடமிருந்தும்கூட இம்முடிவுக்கு எதிர்ப்பு வந்துள்ளது. தொழிலாளர்களின் உரிமைகள், பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பில் கிடைத்துவந்த இடஒதுக்கீட்டு வாய்ப்புகள் ஆகியவை பாதிப்புக்கு உள்ளாகும் என்ற நோக்கிலிருந்தும் நியாயமான அச்சங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த அச்சங்களைக் களைவதற்கான முழுப் பொறுப்பும் மத்திய அரசுக்கே உண்டு. மத்திய அரசின் இந்த முடிவு இன்றைய பொருளாதார நெருக்கடி மிகுந்த சூழலில் தவிர்க்க முடியாதது என்பதை எல்லோருமே ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அதற்குத் தீர்வு பொதுத் துறைக்குச் சொந்தமான சொத்துகளைக் குத்தகைக்கு விடுவது அல்ல என்பதே அனைத்து எதிர்ப்பாளர்களும் முன்வைக்கும் கருத்து. அதே நேரத்தில், அத்தகைய மாற்று வாய்ப்புகள் என்னென்ன இருக்கின்றன என்பது குறித்து எதிர்ப்பாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க வகையில் எந்த ஆலோசனைகளும் முன்வைக்கப்படவில்லை. நெருக்கடியான நேரத்தில் மாற்றுத் தீர்வுகளை முன்வைக்காமல் அரசின் முடிவைக் கேள்விக்குள்ளாக்குவது மேலும் புதிய நெருக்கடிகளை நோக்கித் தள்ளிவிடும் அபாயம் நிறைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x