Published : 27 Aug 2021 03:11 AM
Last Updated : 27 Aug 2021 03:11 AM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏழரை சதவீத இடஒதுக்கீடு: அதிமுகவை விஞ்சும் திமுக!

அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழிற்கல்விப் படிப்புகளில் ஏழரை சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவு, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையின்படி இந்தச் சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டுள்ளது. பொறியியல், விவசாயம், மீன்வளம் மற்றும் சட்டம் ஆகிய படிப்புகளுக்கு இந்த இடஒதுக்கீடு பொருந்தும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இந்தச் சட்ட முன்வடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின்போது நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ இளநிலைப் படிப்புகளில் ஏழரை சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்குச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிமுக தொடங்கிவைக்க... திமுக அதை இன்னும் விரிவுபடுத்தியிருக்கிறது. அரசியல் கருத்துநிலைகளில் மாறுபட்டு நின்றாலும் இடஒதுக்கீடு சார்ந்து திமுகவும் அதிமுகவும் ஒன்றுக்கொன்று இயைந்துசெல்கின்றன என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு இது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதத்துக்குக் குறையாமல் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று நீதிபதி முருகேசன் கமிட்டி பரிந்துரைத்திருந்தாலும், அதைவிடவும் குறைவாகவே இந்த இடஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்த நீதிபதி கலையரசன் தலைமையிலான கமிட்டியும் 10 சதவீதத்தையே பரிந்துரைத்திருந்தது. எனினும், திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே ஏழரை சதவீதத்தையே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டு அளவாகத் தீர்மானித்துக்கொண்டுள்ளன. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த இடஒதுக்கீட்டால் பயன்பெற முடியாத சூழலும் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டுவருகிறது. மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்த பிறகு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிலையும் அரசுப் பள்ளிகளின் நிலையைப் போலத்தான் கவலைக்குரியதாக இருந்துவருகிறது.

அரசுப் பள்ளிகள் என்றாலே அது தனியார் பள்ளிகளைக் காட்டிலும் ஏன் தரம் குறைந்ததாகவோ வசதிகள் குறைந்ததாகவோ இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. கரோனா ஏற்படுத்திய கடுமையான பொருளாதாரப் பாதிப்புகளுக்குப் பிறகு, அரசுப் பள்ளிகளை நோக்கி வரும் மாணவர்களின் எண்ணிக்கை நடப்புக் கல்வியாண்டில் அதிகரித்துள்ளது. எனவே, ஆசிரியர் - மாணவர் விகிதம் வழக்கத்தைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது 60 வரையிலும் நீட்டிக்கப்பட்டிருப்பதால் நடப்புக் கல்வியாண்டைச் சமாளிக்கலாம். ஆனால், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போதுமான நிதி ஒதுக்கீட்டுக்கு வாய்ப்பில்லாத நிலையில், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை முடுக்கிவிட்டுப் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x