தொழில் வளர்ச்சியும் தொழிலாளர் நலனும் வேறுவேறல்ல!

தொழில் வளர்ச்சியும் தொழிலாளர் நலனும் வேறுவேறல்ல!
Updated on
1 min read

மத்திய அரசு இயற்றி அமலில் இருக்கும் மூன்று மத்திய சட்டங்களுக்குத் திருத்தங்கள் அவசியம் என்று ராஜஸ்தான் மாநில அரசு கோரியிருக்கிறது. நிறுவனத்தில் தற்காலிகப் பணி முடக்கம், ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்வது, தொழிற்சாலைகளில் வேலைநேரங்களுக்குக் கட்டுப்பாடு ஆகிய சட்டங்களில் நீக்குப்போக்கான நடைமுறைகளை மேற்கொள்ள சட்டத் திருத்தங்களுக்கு அனுமதி தேவை என்பதே கோரிக்கை.

இதுவரை, 100 தொழிலாளர்கள் வேலை செய்தாலே தொழில் தகராறு சட்டத்தின் கீழ் அந்த நிறுவனம் கொண்டுவரப்பட வேண்டும் என்கிறது சட்டம். இந்த எண்ணிக்கையை 300 தொழிலாளர்கள் என்று உயர்த்த வேண்டும் என்பது ராஜஸ்தானின் கோரிக்கை. ஒப்பந்தத் தொழிலாளர் சட்டத்தில் இப்போதுள்ள 20 தொழிலாளர் என்ற வரம்பை 50 ஆக உயர்த்த வேண்டும், ஆலைத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் வரும் 10 என்ற தொழிலாளர் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த வேண்டும் என்பவை மற்ற கோரிக்கைகளாகும்.

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் இந்த முயற்சி முழுக்க முழுக்க நிறுவனங்களின் நலனுக்காகவே என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

இந்தியாவில் அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. சமீப காலமாக அரசுத் துறைகளும் பொதுத் துறை நிறுவனங்களுமே நிரந்தரப் பணிக்கான ஆளெடுப்பைக் குறைத்துக்கொண்டிருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களை அணுகும் விதம்பற்றி விவரிக்க வேண்டியது இல்லை. எங்கும் ஒப்பந்த ஊழியர்கள் என்பதே நிலைமை.

இன்னும் கொஞ்ச நாட்களில், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அரசுடைமை வங்கி ஊழியர்கள் தவிர வேறு யாருக்கும் நிரந்தர வேலையே கிடையாது என்ற நிலை ஏற்பட்டால் ஆச்சரியப்பட ஏதும் இருக்காது.

ஆக, தன்னுடைய குடிமக்களுக்குப் பணி வாய்ப்பையோ தொழில் வாய்ப்பையோ வழங்கும் பொறுப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை விடுவித்துக்கொள்ளும் அரசு, வெளியே தனியாரிடத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் கொஞ்சநஞ்ச நலன்களிலும் கைவைப்பது மக்கள்நல விரோதச் செயல்பாடாகும். ராஜஸ்தான் அரசின் இந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கக் கூடாது.

வளர்ச்சியே தன்னுடைய இலக்கு என்ற முழக்கத்துடன் பொறுப் பேற்றுள்ள மோடி அரசு, உண்மையான தொழில் வளர்ச்சியும் தொழிலாளர் நலனும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். நிரந்தர வேலை மூலம்தான் மக்கள் தங்களுடைய பொருளாதார நிலையைத் தாங்களே வலுப்படுத்திக்கொள்ள முடியும்.

இது மறைமுகமாக, அரசுக்குள்ள சுமையைக் குறைக்கும். நிரந்தர ஊதியக்காரர்களின் சேமிப்பு வெளிநாடுகளுக்குச் செல்லாமல் தேசிய சேமிப்பாகத் திரளும். வறுமை ஒழிப்பும் தேசிய வளர்ச்சியும்தான் லட்சியம் என்று அறிவித்துள்ள பிரதமர், ஊதியத்தை உயர்த்தியதால் ஐரோப்பாவில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதுடன் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in