Published : 18 Feb 2016 08:53 AM
Last Updated : 18 Feb 2016 08:53 AM

காங்கிரஸுக்கு சிக்கலான நேரம்

மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலங்கள் அனைத்திலும் காங்கிரஸுடன் ஒப்பிடும்போது பாரதிய ஜனதா வலுவற்ற நிலையில் இருக்கிறது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி இதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலையும் இருக்கிறது. இந்த மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் இழந்த செல்வாக்கை காங்கிரஸால் இப்போதைக்கு மீட்க முடியாது என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்துகொண்டுவிட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்காக மத்திய அரசு ஆற்றிய, ஆற்றத் தவறிய உதவிகள் அனைத்தும் மக்கள் மனதில் இன்னமும் பசுமையாகவே இருக்கின்றன. இது பழைய பாதைக்கே மீண்டும் திரும்பும் பயணம்தான்.

திமுகவுடன் கூட்டு சேராமல் - திராவிடக் கட்சிகள் இடம் பெறாத கூட்டணிக்குத் தலைமை தாங்க ஒரு மகத்தான வாய்ப்பு காங்கிரஸுக்கு இப்போது கிடைத்தது. ஆனால், காங்கிரஸைக் காட்டிலும் சின்ன கட்சிகளுக்கு இருக்கும் துணிச்சலும் தன்னம்பிக்கையும்கூட காங்கிரஸுக்கு இல்லை. மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எப்படியாவது சட்டை கசங்காமல் பதவி சுகம் தேடுவதில்தான் குறியாக இருக்கின்றனர்.

கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் காங்கிரஸ் கட்சி பொறியில் சிக்கியிருக்கிறது. மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அடிபணிந்த கட்சியாக காங்கிரஸ் அடக்கி வாசித்தது அக்கட்சியை வலுவிழக்கச் செய்துவிட்டது. இதனால் அக்கட்சியின் மாநிலத் தலைமை தங்களுடைய நீண்ட கால அரசியல் எதிரியான மார்க்சிஸ்ட் கட்சியுடன் கைகோத்துப் போட்டியிட விரும்புகின்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியத் தலைமை முடிவெடுக்க முடியாமல் தயங்குகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்குவங்கத் தலைமையும் காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்து மம்தா கட்சியை எதிர்க்க விரும்புகிறது. அப்படி நடந்தால் கேரளத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பு கிடைத்துவிடும். கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் ஒன்றையொன்று எதிர்த்துக் களத்தில் நிற்கின்றன. கூட்டணி பற்றி மாநிலத் தலைமைகளே தீர்மானித்துக்கொள்ளட்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமையால் எளிதாக முடிவெடுத்துவிட முடியும். மார்க்சிஸ்ட் கட்சியில் அப்படியல்ல. சித்தாந்தபூர்வமாகவே அது அரசியல் முடிவுகளை எடுத்தாக வேண்டும். கேரளத்தில் இப்போது காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக மக்களின் மனநிலை வலுத்துவருகிறது. அக்கட்சியின் பல்வேறு ஊழல் வழக்குகள் முக்கிய கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் பரிசீலித்த பிறகு தான் மார்க்சிஸ்ட் தலைமையால் ஒரு முடிவுக்கு வர முடியும்.

அசாமில் ஆட்சியில் இருக்கும் கட்சி காங்கிரஸ் என்பதால், மக்களின் அதிருப்தியை மீறி வெற்றி பெற வேண்டும். மத ரீதியில் வாக்காளர்களை அணிதிரட்ட முயற்சிகள் நடக்கின்றன. அங்கும் கஷ்டம்தான்! எனவே, மத்திய ஆட்சிக்கு உட்பட்ட புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல்களுமே காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மிகுந்த சவாலானது; கூடவே சிக்கலானதும்கூட!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x