Published : 24 Aug 2021 03:13 AM
Last Updated : 24 Aug 2021 03:13 AM

ஆளுநர் இல.கணேசன்: தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு மரியாதை

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டுக்கு பாஜக அளித்திருக்கும் மேலும் ஒரு மரியாதை. தஞ்சையைப் பூர்விகமாகக் கொண்ட இல.கணேசன், தனது இளமைக் காலத்திலிருந்தே தனித்தமிழை வாழ்வியல் கொள்கையாக வரித்துக்கொண்டவர். நெருக்கடிநிலையை எதிர்த்து தலைமறைவு அரசியலில் ஈடுபட்டவர். தமிழ்நாடு அளவிலும் தேசிய அளவிலும் கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். அனைத்துக்கும் மேலாக, இந்துத்துவ அரசியல் பெரிதும் விரும்பப்படாத தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சியினரின் அன்பையும் அபிமானத்தையும் பெற்றவர். தற்போது அவர் ஆளுநராக அறிவிக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியிடமிருந்து வாழ்த்துச் செய்தி வந்திருக்கிறது என்பதிலிருந்தே கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட இல.கணேசனின் அரசியல் நட்புணர்வைப் புரிந்துகொள்ள முடியும்.

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர்களில் ஒருவரான மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் 2019 செப்டம்பரிலிருந்து தெலங்கானாவின் ஆளுநராகப் பொறுப்பில் இருக்கிறார். இல.கணேசனுக்கு அப்படியொரு வாய்ப்பு தாமதமாகத்தான் கிடைத்திருக்கிறது என்றாலும், அவரது அரசியல் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் பாஜக உரிய வகையில் கௌரவித்திருக்கிறது என்பது மறுக்க முடியாதது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, அவர் வெற்றிவாய்ப்பை இழந்தாலும்கூட, மாநிலங்களவை உறுப்பினராக அவரை அக்கட்சி தேர்வுசெய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய வாய்ப்புகளை உருவாக்கி வழங்குவதில், மாநிலக் கட்சிகளைக் காட்டிலும் தேசியக் கட்சிகளுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், தேர்தல் களத்தில் கணிசமான வெற்றியைப் பெற முடியாத நிலையிலும் தமிழ்நாடு தொடர்பில் பாஜக இத்தகைய வாய்ப்புகளை அளிப்பதிலிருந்து தவறவில்லை.

வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றிய இல.கணேசன், நிரந்தர மாத வருமானத்தைத் துறந்து, முழுநேர அரசியலில் அடியெடுத்துவைத்தார். இன்று அவர் ஆளுநராகியிருக்கிறார். காவல் பணித் துறை அதிகாரியாக இருந்த அண்ணாமலை, அரசியலில் இணைந்த பிறகு அவருக்கு மாநிலத் தலைவர் பதவியை வழங்கியிருக்கிறது பாஜக. மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகியிருக்கிறார். முழுநேர அரசியல் பணி என்பது எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாத பயணம். எனினும் ஒரு அரசியல் கட்சி, தனது முழுநேரத் தொண்டர்களை எவ்வாறு கௌரவிக்கிறது என்பதுதான் அக்கட்சியின் வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது. பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு எதிராகத் தீவிரமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் தேசிய, மாநிலக் கட்சிகளின் முழுநேர ஊழியர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் உருவாகுமா என்ற கேள்வியும் முன்னால் நிற்கிறது.

அரசியலுக்கு எதிர்பார்ப்புகளுடன் வரக் கூடாது என்பது பொது விருப்பமாக இருக்கலாம். ஜனநாயக அரசியல் களத்தில் ஒருவர் தனது வாழ்க்கையைப் பணயம்வைத்து விளையாட வேண்டியிருக்கிறது. எந்தக் கட்சிக்காக அவர் உழைக்கிறாரோ அவரை அந்தக் கட்சி எவ்விதம் நடத்துகிறது என்பது முக்கியம். தமிழ்நாட்டில் இயங்கும் தேசியக் கட்சிகளுக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் பாஜக ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கியிருக்கிறது. தம்மோடு இணைந்தவர்கள் எந்த நிலையிலும் கைவிடப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கையையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x