Published : 04 Feb 2016 08:39 AM
Last Updated : 04 Feb 2016 08:39 AM

பொலிவுறு நகரங்கள் செலவு தாங்குமா?

இந்தியாவில் 100 பொலிவுறு நகரங்களை உருவாக்குவது என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.

முதல் கட்டமாக 20 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரும் ரூ.500 கோடி பெறத் தகுதியுள்ளவை. இந்தத் தொகை 5 ஆண்டுகளில் பிரித்து வழங்கப்படும். நகரத்தை மேம்படுத்த இது உதவும் என்கிறது அரசு.

பொலிவுறு நகரம் என்றால் என்ன என்பதை மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. புரிந்தும் புரியாமலும் இதை வரவேற்பவர்களும், விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர். நகர்ப்புறங்களில் மக்களின் வாழும் தரத்தை உயர்த்துவதற்கான திட்டம் என்று சுருக்கமாக இதைக் குறிப்பிடலாம். நகர மக்களின் தரமான வாழ்க்கைக்கு உதவும் வகையில் குப்பைகளைப் பிரித்து அகற்றுவதுடன் அவற்றை மறுசுழற்சித் தொழில்நுட்பம் மூலம் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது, கழிவுநீரை அகற்றிச் சுத்திகரித்து குடிநீர் அல்லாத பிற பயன்பாடுகளுக்குத் தருவது, மின்சார விநியோகத்தையும் நுகர்வையும் சிக்கனமான முறையில் மேற்கொள்வது, தரமான குடியிருப்புக்கேற்ற வகையில் இப்போதுள்ள பகுதிகளை மறுபயன்பாட்டுக்குத் தயார் செய்வது, பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு எளிதில் சென்று திரும்ப பொதுப் போக்குவரத்தை ஒருங்கிணைப்பது இப்படியான செயல்திட்டங்களைக் கொண்டது இத்திட்டமாகும். முன்னர் தொழில்பேட்டை நகரியங்களாக இருந்தவற்றைப் பொலிவுறு நகரங்களாக மாற்றுவது முதல் கட்டத்தில் வருகிறது. இந்த நகரங்கள் மக்களை ஈர்க்கத் தொடங்கினால், அருகில் உள்ள பெரு நகர்ப் பகுதியில் உள்ளவர்கள் கணிசமாக இப்பகுதியை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். இவை வசிப்பதற்கும் தொழில் செய்வதற்கும் ஏற்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுடன் திட்டமிட்டு அமைக்கப்படும். தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், உணவுப்பொருள் பதப்படுத்தல், ஆடைகள் தயாரிப்பகம் போன்ற தொழில் பிரிவுகளுக்கு உற்ற இடங்களாக இருக்கும். இந்தியாவின் எப்பகுதியிலும் தொழில், சேவைப் பிரிவுகளைத் தொடங்குவதற்கு ஏற்றதாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்துக்கு 10 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று சொல்கிறது அரசின் ஆலோசகரான டெலாய்ட் என்ற நிறுவனம். இந்த திட்டச் செலவுக்கான தொகையை வரிகள், கட்டணங்கள், மாநில அரசின் நிதியுதவி, கடன் பத்திரங்கள் மூலம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தப் பணியில் தேவையற்ற காலதாமதமோ, வீண் விரயமோ, ஊழலோ, தரக்குறைவான கட்டுமானங்களோ குறுக்கிட்டால் செலவு பலமடங்காவதுடன் அதன் விளைவு மக்கள் தலையில்தான் விடியும். திட்டமிட்ட நகர்ப்புற வளர்ச்சி என்பதில் இத்தனை ஆண்டுகளாகக் கோட்டைவிட்டதால்தான் இப்போது பொலிவுறு நகரத் திட்டங்கள் தேவையாக இருக்கின்றன. ஆக்கிரமிப்புகளையும் விதி மீறல்களையும் அனுமதித்ததும், திட்டமிடாத வகையில் நகரம் வளர்வதைக் கண்டும் காணாமல் இருந்ததும்தான் இந்திய நகரங்களின் பெரும்பாலான இடர்களுக்குக் காரணமாக இருக்கிறது. மழைநீர் சேகரிப்பு, சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பு, மரம் வளர்ப்பு, பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் பராமரிப்பு, நடைமேடைகள் என்று நகருக்குரிய எல்லாவற்றையும் அமைத்து, அவற்றை மக்களுடைய ஒத்துழைப்புடன் நன்கு பராமரிக்க அரசு முன்வர வேண்டும். பழைய நகரங்களுக்கு அருகில் ஏற்படுத்தவுள்ள பொலிவுறு நகரங்களைச் சரியான முறையில் பழைய நகருடன் இணைக்க வேண்டும். பழைய நகரானாலும் பொலிவுறு நகரமானாலும் அதில் வாழும் மக்கள் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் தொல்லைகள் இல்லாமலும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x