Published : 20 Aug 2021 06:39 AM
Last Updated : 20 Aug 2021 06:39 AM

பள்ளி மறுதிறப்பு: மாற்றுத் திட்டங்களும் தயாராகவே இருக்கட்டும்

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வார காலமாகத் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுவருகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் இறுதியிலோ செப்டம்பர் ஆரம்பத்திலோ கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் பாதிப்புக்கு 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆளாகக்கூடும் என்ற அச்சம் பெற்றோர்களைப் பீடித்துள்ளது. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுவரையில் மிகச் சில தடுப்பூசிகளில் மட்டுமே பரந்த அளவில் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நாட்டின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான பாரத் பயோடெக் நிறுவனம் 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் தடுப்பூசிப் பரிசோதனைகளை நடத்துவதற்குத் தன்னார்வலர்களை நியமித்துள்ளது. எனினும், அதன் உடனடிப் பயன்களை அடுத்த சில மாதங்களுக்குள் எதிர்பார்ப்பதற்கில்லை.

குழந்தைகளின் உடல்நலத்தைக் குறித்துக் கவலைகொள்ளும் அதே வேளையில், கரோனா காலத்தில் அவர்களின் மனநலம் குறித்தும் தீவிர அக்கறை காட்ட வேண்டியுள்ளது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் பள்ளிக் குழந்தைகள் அவர்களது வழக்கமான உற்சாகத்தை இழந்துள்ளனர். குழந்தைகளிடமிருந்து வெளிப்படும் அதிகப்படியான கோபம், அளவுக்கு அதிகமான வருத்தம் ஆகியவற்றுக்கு உரிய கவனம் கொடுக்கப்பட வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். பாடங்கள் தடைபடக் கூடாது என்பதற்காக இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டுவந்தாலும், பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று படிப்பதற்கு அவை ஒருபோதும் சரியான மாற்று ஆகாது. வீட்டிலேயே வகுப்பறைச் சூழலை உருவாக்குவது தொடர்பில் மும்பையைச் சேர்ந்த கல்வியாளர்களும் மனநல மருத்துவர்களும் இணைந்து மேற்கொண்ட சில பரிசோதனை முயற்சிகளும்கூட வெற்றிகரமாய் அமையவில்லை. பள்ளிகளைத் திறப்பதுதான் குழந்தைகளின் மனநலனை மீட்பதற்கான ஒரே வழி என்று அனைத்துத் தரப்பிலிருந்துமே பேச ஆரம்பித்துவிட்டனர்.

தமிழ்நாட்டில் செப்டம்பர் தொடக்கத்திலிருந்து 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று இல்லாத பகுதிகளில் தனிமனித இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றிப் பள்ளிகளைத் திறக்கலாம். ஆனால், பள்ளிகள் திறக்கப்படும் காலத்தில்தான் மூன்றாவது அலையும் எதிர்பார்க்கப்படுகிறது என்பதால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாற்றுத் திட்டங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும். தொற்றுள்ள பகுதிகளில் பள்ளிகளைத் தற்காலிகமாக மூடிவைக்கவும் வேண்டும். அடுத்த கட்டமாக, 6 முதல் 8 வரையிலான வகுப்புக் குழந்தைகளை வாரத்துக்கு ஒரு முறையாவது பள்ளிக்கு அழைத்து, குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் வகுப்புகளை நடத்துவது பற்றியும் யோசிக்கலாம். ஒரு மணி நேரம் பாடங்களுக்கும், ஒரு மணி நேரம் விளையாட்டுக்கானதாகவும் இருக்கலாம். குழந்தைகளின் உடல்நலம், மனநலம் இரண்டுமே முக்கியம். பள்ளிக் கல்வித் துறையால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு திட்டமும் இவை இரண்டையுமே உள்ளடக்கியதாக இருக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x