Published : 12 Aug 2021 03:19 AM
Last Updated : 12 Aug 2021 03:19 AM

அதிகரிக்கும் வேலையிழப்புகள்: நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை தீர்வளிக்குமா?

தொழிலாளர் நல விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் சமீபத்திய அறிக்கை, மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டியிருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ‘பெருந்தொற்றானது தொழிலாளர் சந்தையை நிலைகுலைய வைத்திருக்கிறது, வேலைவாய்ப்புகளை இல்லாமலாக்கியிருக்கிறது, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களின் இருப்பை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கிறது’ என்று பர்த்ருஹரி மாதப் தலைமையிலான தொழிலாளர் நிலைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கரோனா போன்ற நெருக்கடிக் காலங்களில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், அவர்களது வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகைகள் அளிக்கப்படுமாறு தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்த வேண்டும் என்றும் அரசை அது கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றும் முக்கியமான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

வேலையிழப்புகளின் அளவு குறித்த வெவ்வேறு அமைப்புகளின் கணக்கீடுகளைக் கருத்தில் கொண்டு, அதன் உண்மையான அளவைக் கண்டறியுமாறும் தொழிலாளர் நலத் துறையை இந்த அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது. காலமுறையிலான உழைப்புச் சக்தி கணக்கெடுப்பை (பிஎல்எஃப்எஸ்) மேற்கோள் காட்டியுள்ள தொழிலாளர் நலன்களுக்கான நிலைக்குழு, இந்தியாவிலுள்ள சுமார் 46.5 கோடித் தொழிலாளர்களில் 41.9 கோடிப் பேர் அமைப்புசாரா தொழிலாளர்கள் என்று கூறியிருக்கிறது. நாட்டின் மொத்த உழைப்புச் சக்தியில் 90% அமைப்புசாரா துறைகளாகத்தான் இருக்கின்றன. ஜனவரி - மார்ச் 2020 மாதங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, கடந்த 15 ஆண்டுகளாக 20.8% ஆக இருந்துவந்த நகர்ப்புற வேலைவாய்ப்பின்மையின் அளவு மேலும் 9.1% அதிகரித்துள்ளது. அடுத்தடுத்த பொதுமுடக்கங்களால் இந்த அளவு இன்னும் மோசமாக அதிகரித்திருக்கும். ஆனால், அது குறித்த கணக்கெடுப்புகள் அவ்வமைப்பால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அமைப்புசாரா தொழிலாளர்கள் பற்றிய கணக்கெடுப்பை முடிக்குமாறு இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) தரவுகளை ஒப்பிட்டு அமைப்புசார்ந்த வேலையிழப்பின் அளவையும் உறுதிப்படுத்துமாறும் புதிய தொழிலாளர் சேர்க்கை பற்றிய விவரங்களைச் சேகரிக்கும்போது நிதியாண்டை மட்டும் கணக்கில் கொள்ளாமல், மாதவாரியாகத் தகவல்களைத் திரட்டுமாறும் ஆலோசனை கூறியுள்ளது. தவிர, வருங்கால வைப்புநிதி நிறுவனம் இத்தகைய ஒரு நெருக்கடிச் சூழலில் மிகவும் தீவிரமாகச் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டாவது பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட வேலையிழப்புகள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு விவரங்கள் எதுவும் இதுவரையில் நம்மிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் நல விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் இந்த அறிக்கையை, நடைபெற்றுவரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதத்துக்காக முன்வைக்கப்பட்டபோதிலும்கூட பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் அமளியில் அது உரிய கவனம் பெறாமல்போனது துரதிர்ஷ்டவசமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x