

முன்னாள் முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், திமுக அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டது, தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில பத்தாண்டுகளாக நடந்துவந்த கட்சிகளுக்கு இடையிலான பகை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக வர்ணிக்கப்பட்டது. ஆளுநர் அளித்த தேநீர் விருந்தின்போது, மு.க.ஸ்டாலினும் ஓ.பன்னீர்செல்வமும் ஒரே மேஜையைப் பகிர்ந்துகொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் மிகப் பெரும் அளவில் பகிர்ந்துகொள்ளப்பட்டது. திமுகவும் அதிமுகவும் அரசியல்ரீதியான கருத்து வேறுபாடுகளைத் தாண்டி தங்களுக்கிடையில் நட்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற பொதுமக்களின் விருப்பம்தான் இந்தப் பகிர்வுகளில் வெளிப்பட்டது.
தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களாக இருந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் இன்றில்லை. எனினும், அவர்களது காலத்தில் தொற்றிக்கொண்ட கட்சிகளுக்கு இடையிலான பகை அரசியல் இன்றளவும் தொடர்கிறது என்பதைத்தான் சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளாமல் அதிமுக புறக்கணித்திருப்பதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. பேரவையில் ஜெயலலிதாவின் படத்தைத் திறந்துவைத்தபோது அந்நிகழ்ச்சியில் திமுக கலந்துகொள்ளவில்லை. அதற்குப் பதிலடியாக கருணாநிதி படத் திறப்பு விழாவில் அதிமுகவும் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. ஜெயலலிதா படத் திறப்பின்போது திமுகவுக்கு அழைப்பிதழ் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் ஆனால், தொலைபேசியின் வழி முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் துரைமுருகன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் அதிமுக கலந்துகொள்ளாததற்குத் தெரிவிக்கப்பட்டிருக்கும் காரணங்களில் ஒன்று, தமிழகத்தின் சட்டமன்ற வரலாறு திமுகவால் மாற்றியமைக்கப்படுகிறது என்பதாகும். அன்றைய சென்னை மாகாணத்தின் சட்டமன்ற அமைப்புகளின் தொடர்ச்சியாக இன்றைய அரசமைப்பின் அடிப்படையிலான பேரவையைக் கொள்ள முடியுமா என்பது முற்றிலும் அரசமைப்பு சார்ந்த விவாதமாகும். திமுக 1997-லேயே தமிழ்நாடு சட்டமன்றத்தின் பவளவிழாவைக் கொண்டாடியது. அதையொட்டி வெளியிட்ட விழா மலரில், அதிமுக ஆட்சிக் காலங்களில் பேரவைத் தலைவர்களாகப் பொறுப்பு வகித்த முனு ஆதி, க.இராசாராம் ஆகியோர் தங்களது சட்டமன்ற அனுபவங்களைப் பற்றி எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. எம்ஜிஆர் காலத்துப் பேரவைத் தலைவர்கள் சட்டமன்ற அமைப்பின் தொடக்கத்தை ஏற்கெனவே ஏற்றுக்கொண்டாகிவிட்ட பிறகு, ஜெயலலிதா காலத்துப் பேரவைத் தலைவர்களில் ஒருவரான ஜெயக்குமார் அது குறித்துக் கேள்வியெழுப்புவது முரணாக இருக்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை, அதிமுகவின் மீது பாமக சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போதைய திமுக அரசு நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு என்று விழாவை அதிமுக புறக்கணித்ததற்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம் என்ற சந்தேகங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஆக மொத்தம், திமுக பதவியேற்பு விழாவின்போது மக்களிடம் எழுந்த எதிர்பார்ப்பு வெகுவிரைவில் பொய்த்துவிட்டது. பொது விழாக்களில் கலந்துகொள்வதில் பகை அரசியலைப் பின்பற்றுவது அரசியல் நாகரிகம் அல்ல என்பதை இனிவரும் காலங்களிலாவது இரண்டு கட்சிகளும் கருத்தில் கொள்ள வேண்டும்.