

ஒரே சமயத்தில் ரூ.2 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள தங்கம் வாங்குகிறவர்கள் வருமான வரித் துறை அளிக்கும் வரிமதிப்பீட்டுக்கான ‘பான்’கார்டு எண்ணைத் தெரிவிக்க வேண்டும் என்ற வருமான வரித் துறை விதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நகைக் கடைகள் மூடப்பட்டன. இதனால், ஒரு நாளைக்கு ரூ.250 கோடி முதல் ரூ.300 கோடி வரை மதிப்புள்ள தங்க விற்பனை பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் 22.03 கோடிப் பேரிடம்தான் ‘பான்’கார்டு இருக்கிறது என்பதால், தங்க விற்பனையே முடங்கிவிடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். நகை வாங்குகிறவர்களில் கணிசமானவர்கள் கிராமவாசிகள், அவர்களிடம் ‘பான்’கார்டு இல்லை என்று தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1,000 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியர்களிடம் இருக்கும் தங்க இருப்பு சுமார் 20,000 டன் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. கருப்புப் பணத்தைக் கண்டுபிடிக்கவும் கருப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்கவும் அரசு பல வழிகளிலும் முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே வங்கிகள் மூலம் அனுப்பப்படும் ரூ.50,000 அல்லது அதற்கும் அதிகமான தொகைகளுக்கு ‘பான்’எண் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதுவே வங்கிகளில் செய்யப்படும் ரொக்க டெபாசிட்டுகள், பரஸ்பர நிதி முதலீடு, இன்சூரன்ஸ் தொகை, கடன் பத்திரங்கள் போன்றவற்றுக்கும் கட்டாயமாகப் பின்பற்றப்படுகிறது. இந்தத் தொகைகளைவிட ரூ.2 லட்சம் என்பது அதிகம். இப்போதும்கூட அதிகத் தொகைக்குத் தங்கம் வாங்குகிறவர்கள் 4 அல்லது 5 பேரின் பெயர்களில் பிரித்து வாங்குவது சிரமமான செயல் அல்ல. பெரும்பாலான நகைக் கடைகளில் ‘எஸ்டிமேட் பில்’மட்டுமே தந்து, அசல் பில் தந்தால் வணிகவரி செலுத்த வேண்டும் பரவாயில்லையா என்று கேட்டு நுகர்வோரைத் திசை திருப்புகின்றனர்.
கிராமமானாலும் நகரமானாலும் வசதி படைத்தவர்களுக்கு ‘பான் எண்’ இல்லாமல் இருப்பது அபூர்வம். அத்துடன் ரூ.2 லட்ச மதிப்புக்கு மேல் ஒரே சமயத்தில் தங்கம் வாங்கிக் குவிக்கும் அளவுக்கு இந்நாட்டில் பெரும்பாலான ஏழைகள் இல்லை. அரசின் இந்த நடவடிக்கை உயர் நடுத்தர வகுப்பினரிலிருந்து பணக்காரர்கள் வரை நுகரும் தங்கத்தின் மதிப்பை அறியும் முயற்சிதான். இது கருப்புச் சந்தையில் தங்கம் விற்கப்படுவதையும் கருப்புப் பணப் புழக்கத்தையும் தடுக்கும் முயற்சி. இந்த நாட்டின் பொருளாதார நலனில் அக்கறை உள்ளவர்கள் இதற்கு ஒத்துழைப்பு தரும் வழிகளை யோசிக்க வேண்டும். இப்போதெல்லாம் ‘பான் எண்’பெறுவதற்கு அதிகம் சிரமப்பட வேண்டாம்.
சொந்தமாகத் தொழில் செய்கிறவர்களில் பெரும்பாலானவர்களும் சேவை அளிப்பதில் கணிசமானவர்களும் இன்னமும் வருமானவரி செலுத்துவோர் பட்டியலில் இடம்பெறாமல் தப்பிவருகின்றனர். அரசு அலுவலகங்கள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் மாதச் சம்பளம் வாங்குவோர் மட்டுமே தொடர்ந்து (வேறு வழியில்லாமல்) வருமான வரி செலுத்துகின்றனர். அரசிடம் ஊதியம் பெறாமல், எந்தச் சலுகையும் பெறாமல் உழைக்கும் கோடிக்கணக்கான ஏழைகள் கண்ணுக்குத் தெரியாமல் விதிக்கப்படும் மறைமுக வரிகளைச் செலுத்துகின்றனர். எனவே, வசதியாக இருந்தும் வரி ஏய்ப்பு செய்வோரை அடையாளம் காண அனைத்துத் தரப்பினரும் உதவ வேண்டும். நகை வியாபாரிகள் தங்களுடைய எதிர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.