நீதிமன்ற விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பு நல்லதொரு தொடக்கம்

நீதிமன்ற விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பு நல்லதொரு தொடக்கம்
Updated on
1 min read

குஜராத் உயர் நீதிமன்றத்தில் இணையவழி நேரடி ஒளிபரப்பை முறையாகத் தொடங்கிவைத்துள்ளார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா. அவர் அளித்திருக்கும் அறிவுரைகள், நீதிமன்ற விசாரணைகளை அறிந்துகொள்வதில் குடிமக்களுக்கு உள்ள அரசமைப்பு உரிமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றின் விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்புவது பற்றி அவ்வப்போது விவாதிக்கப்பட்டுவந்தாலும் அதன் நடைமுறைச் சாத்தியங்கள் குறித்த கேள்விகளும் இருந்துவந்தன. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் முழுவதும் முடங்கிப்போயிருக்கும் சூழலில், முக்கிய வழக்குகளின் விசாரணைகள் இணையவழியில் நடத்தப்பட்டதன் அனுபவங்கள், இனி வரும் காலங்களில் நேரடி ஒளிபரப்புக்கு வெற்றிகரமான முன்னோட்டங்களாக அமைந்துவிட்டன என்று சொல்லலாம். இணையவழி விசாரணையில், வழக்கறிஞர்கள் தங்களது அலுவலகத்திலிருந்தே வாதிடவும் வழக்காடிகள், அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் அவற்றைக் காணவும் வாய்ப்புகள் உருவாகின. இணையத்தின் வழி இணைகிறபோதே கணினியின் கேமரா, மைக் ஆகியவற்றை அமைத்துக்கொள்ளும் வாய்ப்புகளும் தற்போது வழங்கப்படுகின்றன. தற்போதுள்ள இந்த இணையவழி விசாரணை முறையின் சாத்தியங்களை, இனி வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்புக்கும் நீட்டித்துக்கொள்ளலாம்.

2018-ல் ஸ்வப்னில் த்ரிபாதி வழக்கின் தீர்ப்பில், நீதிமன்ற விசாரணைகளை அறிந்துகொள்வது ஒவ்வொரு குடிநபரின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. உச்ச நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் அரசமைப்பின் அடிப்படையிலான வழக்குகளின் விசாரணை நடக்கிறபோது அவற்றைப் பரிசோதனை அடிப்படையில் நீதிமன்றத்தின் வெளியேயும் ஒளிபரப்புவதற்கு அவ்வழக்கில் உத்தரவிட்டபோதிலும், இப்போதுதான் அதற்கு வேளை வந்திருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தனஞ்ஜெய ஒய்.சந்திரசூட் தலைமையிலான இ-கமிட்டி, நீதிமன்ற விசாரணைகளை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்புவது, அவற்றைப் பதிவுசெய்வது குறித்த விதிமுறைகளின் வரைவு மீது யோசனைகளை அளிக்குமாறு நாட்டிலுள்ள 24 உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. உயர் நீதிமன்றங்கள் மட்டுமல்லாது விசாரணை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஆகியவற்றின் நடைமுறைகளும் அடுத்தடுத்து இணையவழி ஒளிபரப்பில் இணையவிருக்கின்றன.

சட்ட அறியாமை எப்போதுமே எதிர்வாதமாக நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை என்பதால், குடிமக்களுக்குச் சட்டங்கள் குறித்த அறிமுகத்துடன் நீதிமன்ற விசாரணைகளைப் பற்றிய விழிப்புணர்வும் அவசியமாக இருக்கிறது. அதே நேரத்தில், நீதிமன்ற விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பை இருபுறமும் கூர்மைகொண்ட வாளுடன் ஒப்பிட்டு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்சரித்துள்ளதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. பாதிக்கப்பட்டவர்களின், சாட்சிகளின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியிருக்கும். வழக்கறிஞர்கள் இதைத் தங்களது பிரபல்யத்துக்கான வாய்ப்பாகவும் பயன்படுத்திக்கொண்டுவிடக் கூடாது. எது எப்படியிருப்பினும், விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பானது நீதித் துறையின் வெளிப்படைத் தன்மையை மட்டுமல்ல, பொறுப்புணர்வையும் அதிகப்படுத்தவே செய்யும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in