உலகளாவிய நம்பிக்கையைப் புதுப்பிக்குமா ஒலிம்பிக்?

உலகளாவிய நம்பிக்கையைப் புதுப்பிக்குமா ஒலிம்பிக்?
Updated on
1 min read

உலகம் ஆவலாக எதிர்நோக்கும் ஒலிம்பிக் போட்டிகள், ஓராண்டு தாமதமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகின்றன. 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்/வீராங்கனைகள் 33 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்க இருக்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முடக்கப்பட்டிருக்கும் உலக மக்களுக்கு அடுத்த 17 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் பெரும் ஆசுவாசமாக அமையும். மக்கள் அதிகம் கூடும் இடங்கள் நோய்த்தொற்றைப் பரவலாக்கிவரும் சவாலான இந்தக் காலத்தில், இந்தப் போட்டியை ஜப்பான் வெற்றிகரமாக நடத்திமுடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகில் நிலவிவரும் பல்வேறு ஒடுக்குமுறைகளைக் களைவதும் ஒலிம்பிக் போட்டிகளின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று. அந்த வகையில், 1900 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக 22 பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். 120 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்கில் பெண்களின் பங்கேற்பு ஆண்களின் எண்ணிக்கைக்கு அருகில் வந்துள்ளது. 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக அகதிகள் ஒலிம்பிக் அணி சார்பாக 10 பேர் பங்கேற்றார்கள். இந்த முறை 29 பேர் பங்கேற்கிறார்கள். இப்படி அனைவரையும் உள்ளடக்கும் வகையிலும் நாடுகளுக்கிடையே அமைதியையும் இணக்கத்தையும் வளர்க்கும் வகையிலும் ஒலிம்பிக் போட்டி வளர்ந்துவருகிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதை உயரிய பெருமையாகவும் அவற்றில் பதக்கம் வெல்வதைக் கனவாகவும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கொண்டுள்ளனர். இதுவரை இல்லாத வகையில், 18 விளையாட்டுப் பிரிவுகளில் 120 இந்திய வீரர், வீராங்கனைகள் இந்த முறை பங்கேற்கிறார்கள். முதன்முறையாக வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்கும் சி.ஏ.பவானிதேவியும், முதன்முறையாக மகளிருக்கான பாய்மரப் படகுப் போட்டியில் பங்கேற்கும் நேத்ரா குமணனும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள வினேஷ் போகத் (மல்யுத்தம்), தீபிகா குமாரி (வில்வித்தை), அமித் பங்கால் (குத்துச்சண்டை), இளவேனில் வாலறிவன்-யஷாஸ்வினி தேஸ்வால்-அபிஷேக் வர்மா (துப்பாக்கி சுடுதல்) ஆகியோர் இந்தியக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), சானியா மிர்சா (டென்னிஸ்) உள்ளிட்ட ஒலிம்பிக் அனுபவஸ்தர்களும் இந்த முறை பங்கேற்கிறார்கள். கடந்த முறைகளில் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவும் (பேட்மிண்டன்), மேரி கோமும் (குத்துச்சண்டை) இந்த முறையும் போட்டியிடுகிறார்கள். 2012-ல் 6 பதக்கங்களை வென்றதே, ஒரே முறையில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கை சாதனை. அந்தச் சாதனை இந்த முறை முறியடிக்கப்படுமா என்பதே 130 கோடி மக்களின் எதிர்பார்ப்பு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in