

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டபோது தொடங்கிய விவாதங்களும் சர்ச்சைகளும், அவர் பொறுப்பேற்ற பிறகு வேறு திசையில் இன்னும் தீவிரம்பெற்றிருக்கின்றன. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பெண்களைக் கண்ணியக் குறைவான முறையில் பேசியதாக லியோனி மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள், அவர் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டபோது மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தப்பட்டிருக்கின்றன.
33 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த லியோனி, அறிவொளி இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டவர். அவரைப் பாடநூல் கழகத்தின் தலைவராக நியமித்தது சரியானதுதான் என்று திமுகவுக்கு வெளியிலிருந்தும் ஆதரவுக் குரல்கள் எழுந்தன. தவிர்த்திருக்கப்பட வேண்டியவை என்று அவரது மேடைப் பேச்சுகளைக் கடந்துசென்றாலும், பாடநூல் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அவர் அளித்த பதில்கள் விவாதத்துக்குரியதாகவே அமைந்துள்ளன.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் இலக்கியப் பணிகள், கல்விப் பணிகள், பொதுமக்களுக்கு ஆற்றிய பணிகள், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி கற்பதற்காக ஆற்றிய பணிகள் குறித்துப் பாடங்கள் இடம்பெறும் என்று லியோனி தெரிவித்துள்ளார். நடப்புக் கல்வியாண்டில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுவிட்டதால், அடுத்த ஆண்டு இத்திருத்தங்களைச் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். திமுகவின் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்துகொண்டதற்கான பரிசாகத் தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை அவர் கருதியிருக்கலாம்.
அதற்கான நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையிலேயே அவரது பேச்சு அமைந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஏறக்குறைய அனைத்து வகுப்புப் பாடங்களிலுமே திமுக குறித்தும் மு.கருணாநிதி குறித்தும் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்தக் குறிப்புகள் நீக்கப்பட்டன. அதுபோலத் தலைவர்களின் பங்களிப்புகளை மாணவர்களுக்குப் பாடமாக வைப்பதை அரசியலாகப் பார்க்கக் கூடாது என்று ஒரு கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார் லியோனி. ஒன்றிய அரசோ, மாநில அரசோ எந்தவொரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் அதன் கருத்தியல்ரீதியிலான சார்புநிலைகள் பாடநூல்களிலும் எதிரொலிக்கவே செய்கின்றன. தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஆனால், ஒரே கருத்தியலில் இயங்கும் இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆளும் மாநிலத்தில், குறிப்பிட்ட ஒரு கட்சியின் தலைவரைப் பற்றி மட்டுமே பாடங்கள் இடம்பெறும்போதுதான், ஆட்சி மாற்றங்களின்போது பாடநூல் வரிகள் கருப்பு மை கொண்டு அழிக்க ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. மு.கருணாநிதியின் இலக்கியப் பணிகள் பாடமாக்கப்படும்போது, அவரது சமகாலத்து திராவிட இயக்க எழுத்தாளர்களைப் பற்றி பாடங்கள் இடம்பெறுவதில்லை. முன்னாள் முதல்வர் என்ற முறையில் அவரது சமூகப் பணிகள் பாடமாக்கப்படும்போது, அவருக்கு முன்பும் பின்பும் ஆட்சிசெய்த மற்ற முதல்வர்களைப் பற்றிய பாடங்களும் இடம்பெறுவதுதானே முறை? அதற்கு வாய்ப்பில்லாதபட்சத்தில்தான் கட்சி அரசியல் தலைதூக்குகிறது. கடந்த காலத் தவறுகள் மீண்டும் நிகழாதிருக்கட்டும்.