நெறிமுறைக்குள் வர வேண்டும் ஆளுநரின் பொறுப்புகள்!

நெறிமுறைக்குள் வர வேண்டும் ஆளுநரின் பொறுப்புகள்!
Updated on
2 min read

அருணாசலப் பிரதேச நிகழ்வைக் கேள்விக்கு உள்ளாக்கியிருக் கிறது உச்ச நீதிமன்றம். அங்கு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை உறுப்பினர் களின் ஆதரவு இருக்கிறதா, இல்லையா என்று அறிந்துகொள்ள வாய்ப்பு தராமல், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்கக் காரணம் என்ன என்று கேட்டிருக்கிறது. கூடவே, “ஆளுநர்கள் தம் பதவிக்குரிய பொறுப்புடனும் கடமையுணர்வுடனும் நடுநிலையாக, நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்” என்று புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியை அமலாக்குவதற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசு அணுகியபோது, அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்று குடியரசுத் தலைவர் எச்சரித்தது நாம் இங்கு நினைவுகூர வேண்டியது.

ஆளுநரிடமும் மத்திய அரசிடமும் விளக்கம் கேட்ட உச்ச நீதிமன்றம், அரசியல் சட்டப்படி ஆளுநர் தன்னுடைய நடவடிக்கைகளுக்கு நீதிமன்றங்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர் அல்ல என்ற வாதத்தை ஏற்று, அந்த நோட்டீஸைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. எனினும், முதல்வராக இருந்த நபாம் டுகிக்கும் அவருடைய அமைச்சரவையில் இருந்தவர்களுக்கும் எழுதப்பட்ட கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆளுநர் ஜே.பி. ராஜ்கோவாவுக்கு எதிராக நபாம் டுகி தன்னுடைய தரப்பு வாதத்தை எடுத்துவைக்க உதவியாக இந்தக் கடிதங்கள், ஆவணங்கள் ஆகியவற்றைத் தர உத்தரவிடப்பட்டிருக்கிறது.

முதல்வர் நபாம் டுகியின் இனத்தைச் சேர்ந்த நியிஷிகளை ஆளுநருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யத் தூண்டியதாகவும் பதவி விலகுமாறு வலியுறுத்தச் சொன்னதாகவும் ஆளுநர் ராஜ்கோவா குற்றம்சாட்டியிருந்தார். தனக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுடன் முதல்வரும் சேர்ந்துகொண்டார் என்றும் ராஜ்பவனுக்கு எதிராக ஒரு பிராணியைப் பலி கொடுத்ததாகவும்கூட அவர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியிருந்தார்.

ஆளுநரும் முதலமைச்சர்களும் மோதலில் ஈடுபடுவது அல்லது அது தொடர்பாக புகார்கள் வெளிவருவது இது முதல் முறையல்ல. கடந்த ஓராண்டில் மட்டும் திரிபுரா ஆளுநர் ததாகத ராய், உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக், மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாடி, அசாம் ஆளுநர் பி.பி. ஆசார்யா ஆகியோர் அந்தந்த மாநில முதல்வர்களுடன் மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர். லோக்ஆயுக்த பதவிக்கு ஒருவரை நியமிப்பது தொடர்பாகவும் சட்ட மேலவைக்கு ஐந்து பேரை நியமன உறுப்பினர்களாக்குவது தொடர்பாகவும் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுடன் ஆளுநர் ராம் நாயக் மோதலில் ஈடுபட்டார். மாநிலத்தின் அரசியல் விவகாரங்களில் தலையிடுகிறார் என்று ஆளுநர் ஆசார்யா மீது அசாம் முதல்வர் தருண் கோகோய் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

மத்தியில் ஆட்சிக்கு வரும் எல்லாவிதமான அரசுகளும் ஆளுநரைப் பயன்படுத்தி மாநில அரசைப் பதவியிலிருந்து அகற்றும் மரபையொட்டியே அருணாசலப் பிரதேசத்திலும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக்கப்பட்டிருக்கிறது. கூட்டாகச் செயல்படும் கூட்டரசை ஏற்படுத்துவோம் என்று ஆரம்பம் முதலே பேசிவரும் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் பதவி தொடர்பான ஒரு விவாதத்தையும் புதிய முடிவுகளையும் எடுப்பது தொடர்பாக யோசிக்க வேண்டும். ஆளுநர் பதவி தேவையா, இல்லையா என்பது பெரிய விவாதமாக இருக்கலாம். ஆனால், ஆளுநர்களின் சொல்லும் செயலும் அரசியல் சட்டம் வகுத்தளித்த நெறிமுறைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்படுவதில் அத்தனை பெரிய விவாதம் அல்ல. இம்மாத இறுதியில் நடைபெறும் மாநில ஆளுநர்களின் மாநாடு அதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கலாம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in