

பெண் சிசுக்களைக் கருவிலேயே அடையாளம் கண்டு அழிப்பதைத் தடுப்பது தொடர்பாக விபரீதமான யோசனை ஒன்றை முன்வைத் திருக்கிறார், மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி. ஜெய்ப்பூரில் நடந்த மாநிலப் பத்திரிகையாசிரியர்கள் மாநாட்டில் பேசிய அவர், கருவுற்ற தாய்மார்கள் அனைவருக்கும் ஸ்கேன் பரிசோதனையைக் கட்டாயமாக்கி, அது ஆணா, பெண்ணா என்பதை முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு, பெண் சிசுவைக் கருச் சிதைவு மூலம் அழித்திருந்தால் கண்டுபிடித்துவிடலாம் என்பது அவரது யோசனை.
கருவில் இருப்பது எந்தப் பாலினம் என்று முன்கூட்டியே அறிந்து தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று அரசு அறிவித்து, அது இதுவரையில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஓரளவுக்கு வசதி படைத்தவர்களும் விவரம் தெரிந்தவர்களும் கருவில் இருப்பது பெண்தான் என்று தெரிந்தாலும் வரவேற்பதற்கு மனத்தளவில் தயாராகிவிடுகின்றனர். கல்வி அறிவில்லாத பாமரர்களும் கிராமவாசிகளும்கூட இயற்கையாகவே பொங்கிவழியும் கருணை காரணமாக எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற அடிப்படையில் பெண் சிசுக்களைக் கொல்வதில்லை. மனிதாபிமானமற்ற சிலர் மட்டுமே வெவ்வேறு காரணங்களைக் கூறி பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிக்கின்றனர். எனினும், இந்திய மக்கள்தொகைச் சூழலில்,
‘இந்தச் சில'ரின் சதவீதமே கனிசமான எண்ணிக்கையாக மாறும் என்பது நினைவில் கொள்ள வேண்டியது.
2011-ல் எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1,000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் என்ற விகிதம்தான் இருக்கிறது. பெண் குழந்தைகளைக் கருவிலேயே கொல்கிறார்கள் என்ற சந்தேகம் வலுப்பட, இதுபோன்ற சான்றுகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு கர்ப்பத்தையும் பதிவுசெய்யவும் தொடர்ந்து கண்காணிக்கவும் கருச் சிதைவு ஏற்பட்டாலோ பிறந்த சிசு இறந்தாலோ அதைப் பதிவுசெய்து விசாரிக்கும் வசதியும் ஊழியர் எண்ணிக்கையும் அரசிடம் இல்லை. எனவே, அவற்றையெல்லாம் தயார் செய்துகொள்ளாமல் இப்படி அரைகுறையான யோசனைகளைச் செயல்படுத்தக் கூடாது. இதைச் சட்டபூர்வமாக்கிவிட்டால், பெண் சிசுக்கள் காப்பாற்றப்படுவதற்குப் பதில் அழிக்கப்படும் விகிதம் அதிகரிக்கலாம். ஒரு வேளை தற்செயலாகக் கருச்சிதைவு ஏற்பட்டால் அவர்களை விசாரணை, வழக்கு என்று காவல்துறை அலைக்கழிக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே, இந்த யோசனையை அமல்படுத்தவே கூடாது.
இந்தியாவில் அடிப்படை சுகாதார வசதிகள்கூட இல்லாத பகுதிகள்தான் அதிகம். இன்னமும் வீடுகளிலேயே பிரசவம் பார்க்கும் சமூகங்களும், பகுதிகளும் அநேகம். முதலில் பாதுகாப்பான பிரசவத்துக்கும் கர்ப்பிணித் தாய் மற்றும் சிசுக்களின் ஆரோக்கியத்துக்கும் மத்திய - மாநில அரசுகள் முழுக் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவர்கள் சிசுக்களை ஸ்கேன் செய்வது குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது, குறைபாடுகள் உள்ளனவா என்று அறிவதற்குத்தான். அதை அவர்கள் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஏற்பாட்டில்தான் அனுமதிக்கப் படுகிறது.
மக்களுக்குக் கல்வி, மருத்துவ வசதிகளைச் செய்துதந்து விழிப்புணர்வை ஊட்டினாலே பெண் சிசுக்கொலை அழிப்பு நின்றுவிடும். பல்வேறு துறைகளில் பெண்கள் நிகழ்த்திவரும் சாதனைகள், வளர்ச்சிப் பணிகளில் அவர்களின் பங்கு ஆகியவை தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதும் மனமாற்றத்தைத் தரும். பெண் சமூகத்துக்கும் பாலியல் சமத்துவத்துக்கும் நம்முடைய அரசு அமைப்புகள் செய்ய வேண்டிய காரியங்கள் ஆயிரமாயிரம் இருக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு விபரீத விளைவுகளைத் தரும் இதுபோன்ற அர்த்தமற்ற யோசனைகளை அரசியல் தலைவர்கள் தவிர்ப்பது நலம்!