Published : 16 Jul 2021 03:11 AM
Last Updated : 16 Jul 2021 03:11 AM

இலங்கைத் தமிழ் அகதிகளின் இந்தியக் குடியுரிமைக் கோரிக்கை: பேசப்படாத ஒரு பிரச்சினை

நிதிநிலை அறிக்கைக்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கக் கோரிக்கைவிடுத்துத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்தானது, மாறுபட்ட சில கருத்துகளுக்கும் வித்திட்டுள்ளது. இலங்கையில் போர்ச் சூழலின் நடுவே தங்களது உடைமைகளைக் கைவிட்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் ஒரே நோக்கத்துடன் இந்தியாவில் கரையேறிய காலகட்டம், தமிழர் வரலாற்றில் துயரம் படிந்த அத்தியாயம். தொண்ணூறுகளை ஒட்டிய ஆண்டுகளில் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த அகதிகள் ஒரே மொழி, ஒரே வாழ்க்கை முறை ஆகியவை அளிக்கும் பாதுகாப்புணர்வின் காரணமாக இங்கேயே தங்கிவிட்டார்கள். இப்போது இலங்கை என்பது அவர்களுக்குப் பெரிதும் இளம் பிராயத்து நினைவுகள் மட்டுமே. இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த இரண்டாவது தலைமுறையும் உருவாகிவிட்டது. இந்நிலையில், அவர்கள் இலங்கைக்குத் திரும்பிச்செல்லும் பட்சத்தில், அங்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை. தமிழ்நாட்டில் மாநில அரசால் குறைந்தபட்ச அளவிலேனும் மாதாந்திர உதவித்தொகையும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 100-க்கும் மேற்பட்ட அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் சுமார் ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் தங்கியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தை அணுகி, தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பிலும் அகதிகளின் குடியுரிமைக் கோரிக்கைகள் கருணையுடன் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மறுவாழ்வு முகாம்களிலிருந்து பிற ஊர்களுக்குச் சென்று வேலைவாய்ப்புகளை எளிதில் பெற முடியும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. 2019-ம் ஆண்டின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்த இந்துக்களைப் போலத் தங்களுக்கும் குடியுரிமை வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது அவர்களது வருத்தமாகவும் இருக்கிறது.

இலங்கையில் பூர்விகத் தமிழர்கள் சிறுபான்மையினராக இருந்ததாலேயே அவர்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தை இழந்தனர். அதுவே போர்ச் சூழலை நோக்கியும் தள்ளியது. 1981-ல் இலங்கையில் 12.7% ஆக இருந்த இலங்கைத் தமிழர்களின் மக்கள்தொகை 2021-ல் 10.8% ஆகக் குறையும் என்றும் இது 2041-ல் 9.8% ஆக மேலும் குறையும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் பாதுகாப்புணர்வுடன் வாழ வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதேபோல இலங்கையில் வாழும் தமிழர்களின் நிரந்தரப் பாதுகாப்புக்கு மக்கள்தொகையில் அவர்களது விகிதாச்சாரம் குறைந்துவிடக் கூடாது என்பதும் முக்கியம். இலங்கைத் தமிழர்களின் இந்தியக் குடியுரிமைக் கோரிக்கையில் பேசப்படாத இந்தப் பிரச்சினையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x