Published : 14 Jul 2021 03:13 AM
Last Updated : 14 Jul 2021 03:13 AM

பெருந்தொற்றுத் தடுப்பில் தனியாரின் பங்கேற்பும் ஏன் அவசியமாகிறது

பெருந்தொற்றுக் காலத்தில் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வுச் செயல்பாடுகளுக்கு ‘ஊபர்’ நிறுவனம் ஒரு முன்னுதாரணத்தை வழங்கியிருக்கிறது. வாடகை ஊர்திகள், உணவு விநியோகம், விரைவு அஞ்சல் என்று பல்வேறு வணிகங்களில் உலகளவில் விரிந்து, பரந்து வளர்ந்துவரும் அமெரிக்க நிறுவனமான ‘ஊபர்’, யுனெஸ்கோவுடன் இணைந்து இந்தியாவின் கரோனா தடுப்பூசி இயக்கத்துக்கு ஒரு முக்கியமான பங்களிப்பை அளிக்கவுள்ளது. தமிழ்நாட்டில் நடத்தப்பட்டுவரும் இலவசத் தடுப்பூசி முகாம்களுக்கு ஆசிரியர்களைப் பாதுகாப்பாகக் கொண்டுசேர்க்கும் வகையில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ஆகிய நகரங்களில் இலவசப் பயணத் திட்டங்களை இந்நிறுவனம் செயல்படுத்தவுள்ளது. 25,000 ஆசிரியர்கள் தடுப்பூசி முகாம்களுக்குச் செல்லவும் திரும்பவும் என இரண்டு தவணைகளுக்கும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சம் பயணச் சேவைகளை இலவசமாக அளிக்க ‘ஊபர்’ திட்டமிட்டுள்ளது.

பெருந்தொற்றின் பாதிப்புகள் உயிரிழப்புகளோடும் பொருளாதாரப் பாதிப்புகளோடும் மட்டும் முடிந்துவிடவில்லை. கல்வித் துறையில் பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு உயர்கல்வி, வேலைவாய்ப்பு என அடுத்து வரும் ஆண்டுகளிலும் பின்விளைவுகளுக்கு இட்டுச்செல்லும் அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. இந்தியாவில் மட்டும் கடந்த கல்வியாண்டில் ஏறக்குறைய 15 லட்சம் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதன் காரணமாக சுமார் 32 கோடி மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். இந்நிலையில், பெருந்தொற்றின் வேகம் குறைந்ததும் உடனடியாகப் பள்ளி, கல்லூரிகள் இயங்க வேண்டியது அவசியம். அதற்கு முன்பாக ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியதும் முக்கியம். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் கால அளவு நிர்ணயிக்கப்படவில்லை என்பதால், மாணவர்களில் பெரும்பகுதி அந்த வரம்புக்குள் வரவில்லை. ஆனால், முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டியது தவிர்க்கவியலாதது. பொதுப் போக்குவரத்தில் நோய்ப் பரவலுக்கான வாய்ப்புண்டு என்று அச்சம் நிலவுகின்ற நிலையில், ஆசிரியர்கள் தங்களது வீட்டிலிருந்து அருகில் இருக்கும் தடுப்பூசி மையங்களுக்குப் பாதுகாப்புடன் சென்று திரும்புவதற்கான ‘ஊபர்’ நிறுவனத்தின் இலவசப் பயணத் திட்டம் கவனத்தை ஈர்த்திருப்பதில் வியப்பில்லை. ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இத்திட்டத்தால் பயனடைபவர்களின் விகிதம் குறைவாக இருக்கலாம். ஆனால், தடுப்பூசி போடுவதில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தை இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை முடிவுக்கு வந்து, ஒரு புதிய இயல்புநிலையை நோக்கி அனைவரும் நகர வேண்டியிருக்கும் நிலையில், தேச அளவிலான தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்த வேண்டிய கடமை அரசுக்கு மட்டுமின்றி, ஒவ்வொருவருக்குமே இருக்கிறது. ஒன்றிய அரசு தடுப்பூசி விநியோகத்தின் பெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், தடுப்பூசிகள் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பிரிவினரைச் சென்றுசேருவதில் தனியார் நிறுவனங்களும் தன்னார்வலர்களும்கூடப் பங்களிக்க முடியும். அதற்கு யுனெஸ்கோவுடன் இணைந்து ‘ஊபர்’ முன்னெடுத்திருக்கும் இந்த இலவசப் பயணத் திட்டங்கள் முன்மாதிரியாக இருக்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x