அனைவருக்கும் கிட்ட வேண்டும் சமநீதி

அனைவருக்கும் கிட்ட வேண்டும் சமநீதி
Updated on
2 min read

நீதி அனைவருக்கும் பொதுவானதா என்ற கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. 1993 மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியும், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஆயுதங்களை விநியோகித்தவருமான இப்ராஹிம் மூசா சவுஹானுக்குத் தடா நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறைத் தண்டனையைக் குறைப்பது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்திருக்கிறது. ஆனால், இதே சம்பவத்தில் தொடர்புடைய சஞ்சய் தத், தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டு, பிப்ரவரி மாத இறுதியில் விடுதலை செய்யப்படவிருக்கிறார்.

அதி நவீன தானியங்கி ரகத் துப்பாக்கியை அனுமதி இல்லாமல் வாங்கி வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்ட சஞ்சய் தத் மீது வழக்குத் தொடரப்பட்டு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனையை அவர் தொடர்ச்சியாக அனுபவிக்கவில்லை. பலமுறை பரோலிலும் வேறு வகையிலும் விடுதலை பெற்று வீட்டுக்குச் சென்று வசித்தார். இந்நிலையில், சிறையில் அவர் வெளிப்படுத்திய நன்னடத்தைக்காக விடுதலை செய்யப்படவிருக்கிறார். அதே நன்னடத்தையைக் காரணம் காட்டித்தான் இப்ராஹிம் மூசா சவுஹானும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்கக் கோரி நீதிமன்றத்தை அணுகியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

சஞ்சய் தத் முதலில் 18 மாதங்கள் சிறையில் இருந்த பிறகு, அவருக்கு ஜாமீன் விடுதலை அளிக்கப்பட்டது. 2013 மார்ச்சில் உச்ச நீதிமன்றம் அவருடைய வழக்கில், கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கியது. அதே வேளையில், அவருடைய தண்டனைக் காலத்தை 6 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாகக் குறைத்தது. அவர் சாதாரணக் கைதியாக இருந்திருந்தால், தண்டனைக் காலம் முடிவதற்கு 8 மாதங்களுக்கு முன்னால் அவர் விடுதலையாவது குறித்து யாரும் பேசியிருக்கக்கூட மாட்டார்கள். சிறையில் நன்னடத்தையுடன் இருந்தார் என்று சிறைக்கூட அதிகாரிகளே பரிந்துரைத்ததால் அதில் குறைகூற ஏதுமில்லை என்றே சஞ்சய் தத்தின் ஆதரவாளர்கள் சொல்லக்கூடும். அதேசமயம், சிறையில் தனக்கு அளிக்கப்பட்ட பணிகளைச் சரியாகச் செய்யவில்லை என்று தன்னுடன் சிறையில் இருந்த ஒருவர் அளித்த வாக்குமூலத்தின்படி தனது தண்டனைக் குறைப்பு மறுக்கப்பட்டிருப்பதாக இப்ராஹிம் மூசா சவுஹான் கூறியிருப்பதையும் கவனிக்க வேண்டும்.

குடும்பத்துடன் சேர்ந்து வாழவும் சமூக வாழ்க்கையில் ஈடுபடவும் ஒருவரை ‘ஃபர்லோ’ முறையில் விடுதலை செய்வதற்கு முன்னால் அவர் கணிசமான நாட்களைச் சிறையில் கழித்திருக்க வேண்டும் என்பது சட்ட விதி. ‘பரோல்’ விடுதலை என்பதோ அவசரத் தேவைக்காக விடுவிக்கும் நடைமுறையாகும். ஒருவர் சிறையிலிருந்து விடுதலையானதும் அவர் நல்வாழ்வு வாழ்வதற்கான வாய்ப்புகளை அடைத்துவிடக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இவ்வித விடுதலை நடைமுறைகள் கொண்டுவரப்பட்டன.

ஆனால், அது சஞ்சய் தத் விஷயத்தில் மட்டும் தாராளமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் ஜைபுன்னிசா காஜி என்ற பெண்ணுக்கு 70 வயதுக்கு மேல் ஆகிறது. அவர் முன்கூட்டியே நன்னடத்தைக்காக விடுதலையாவாரா என்று தெரியவில்லை. தண்டனைக் காலத்தைக் குறைப்பது என்ற விதியை எல்லா கைதிகள் விஷயத்திலும் அரசு நேர்மையாகவும் நடுநிலையோடும் நடந்துகொள்ள வேண்டும். கைதிகளின் சமூகப் பின்னணி, பொருளாதார அந்தஸ்தைப் பொருத்து மாறுபாடுகள் இருக்கக் கூடாது. அப்போதுதான் அது அனைவருக்குமான சம நீதியாகக் கருதப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in