Published : 08 Jul 2021 03:12 AM
Last Updated : 08 Jul 2021 03:12 AM

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டுக் கட்சிகளிடம் கருத்தொற்றுமை வேண்டும்

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகத்தின் மேகேதாட்டு பகுதியில் அணை கட்டும் திட்டத்தில் தாம் உறுதியாக இருப்பதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ள கருத்து, இரு மாநிலங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நீடித்துவரும் நதிநீர்ப் பங்கீட்டுச் சிக்கல்களை இன்னும் தீவிரப்படுத்திவிடக்கூடிய வாய்ப்புகளையே கொண்டிருக்கிறது. இது தொடர்பில், சில நாட்களுக்கு முன்பு அவர் தமிழ்நாடு முதல்வருக்கு எழுதிய கடிதத்துக்குத் தாம் விரும்பிய பதில் கிடைக்காத நிலையில், தற்போது அணை கட்டுவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வருக்கு அவர் எழுதிய கடிதம் என்பது முடிவைத் திணிக்கும் நோக்கம் கொண்டது என்பதும் உண்மையிலேயே பேச்சுவார்த்தைகளை நோக்கி இட்டுச்செல்லும் எண்ணமில்லை என்பதும் இதிலிருந்து தெரிகிறது. மேகேதாட்டு அணை தொடர்பாக தமிழ்நாட்டு விவசாயிகளின் அச்சத்தை நியாயமெனக் கொள்ளும் வகையிலேயே கர்நாடக முதல்வரின் சமீபத்திய கருத்து அமைந்துள்ளது.

ஏற்கெனவே, தென்பெண்ணையின் துணை ஆறான மார்க்கண்டேய நதியில் கட்டப்பட்ட தடுப்பணையை எதிர்த்துப் போராட்டம் நடத்திவரும் தமிழ்நாடு விவசாயிகள், தற்போது மேகேதாட்டு அணைக்கு எதிராகவும் அத்திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாதென்றும் போராட்டங்களை நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். மேகேதாட்டு அணையை அனுமதிக்கக் கூடாது என்று பிரதமரைத் தமிழ்நாடு முதல்வர் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், உரிய அமைச்சகத்தை அணுகுமாறு பதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் கருத்தைக் கேட்காமல் மேகேதாட்டு அணைக்கு அனுமதியளிக்க மாட்டோம் என்று ஒன்றிய அரசின் நீர்வளத் துறை அமைச்சர், தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சரிடம் உறுதியளித்துள்ளது மட்டுமே தமிழ்நாட்டின் தற்போதைய ஒரே நம்பிக்கை.

காவிரி நீர்ப் பகிர்வு தொடர்பில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களிடம் கருத்தொற்றுமை இல்லாததையும் பார்க்க முடிகிறது. இது ஒன்றிய அரசிடம் நாம் வைக்கும் கோரிக்கைகளைப் பலவீனப்படுத்திவிடக்கூடும். கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது வலியுறுத்திய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதுபோல் ஒரு கூட்டத்தை நடத்தி முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது. மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப் பகிர்விலும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கான அவசியம் இருக்கிறது என்பதையே ஒருசில தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிடமிருந்து வரும் மாறுபட்ட குரல்கள் தெரிவிக்கின்றன. அனைத்துக் கட்சிக் கூட்டங்களின் வழியாக தமிழ்நாட்டின் குரலை ஒற்றுமையாகவும் வலுவானதாகவும் முன்வைக்க வேண்டும். அதே நேரத்தில், தேசியக் கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் தமது மாநிலங்களின் நலன்கள் சார்ந்து இயங்குவது, தேசிய அரசியலுக்கு எதிரானது என்று அர்த்தமாகிவிடாது. கர்நாடகம் தேசியக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலம் என்பதாலேயே தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைக்கப்பட்டது என்ற வாதங்களும்கூட உண்டு. காங்கிரஸ் மீதான பழியை பாஜகவும் சுமக்கக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x