Published : 06 Jul 2021 03:12 AM
Last Updated : 06 Jul 2021 03:12 AM

ஓட்டுநர் உரிமங்களுக்கான புதிய விதிமுறைகள் பாதுகாப்பை மேம்படுத்தட்டும்

ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் புதிய விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சியை முடித்து, அங்கு நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே நிரந்தர ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியும். ஒன்றியப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக அறிவிக்கையின் ஒரு பகுதியாக இந்தப் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஓட்டுநர் உரிமம் பெறுவதில் மண்டலப் போக்குவரத்து அலுவலகங்களை மையமாக வைத்து, ஒரு சில இடங்களில் இயங்கிவந்த இடைத்தரகர் முறைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைத்துள்ளதோடு, விபத்துகளைக் குறைக்கவும் பாதுகாப்பான பயணங்களை உறுதிசெய்யவும் ஓட்டுநர் பயிற்சியை மேம்படுத்த வேண்டிய காலத்தின் தேவையையும் கருத்தில் கொண்டுள்ளது.

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளைப் பொறுத்தவரை தகுதியான பயிற்சியாளர்கள் இருந்தபோதிலும் பெரும்பாலானவை பயிற்சிகளுக்கான பிரத்யேக சோதனைச் சாலைகள் இல்லாதவையாகவே இருந்துவருகின்றன. இதற்கு அவை நகரங்களின் மையப் பகுதிகளில் அமைந்திருப்பதும் ஒரு முக்கியக் காரணம். தற்போது திருத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை மேம்படுத்திக்கொள்ளக்கூடிய வாய்ப்பாகக் கொள்ளலாம். அதே நேரத்தில், ஏற்கெனவே பயிற்சிப் பள்ளிகளை நடத்திவருபவர்கள் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு முன்னுரிமையும் முதலீட்டுக் கடன் வாய்ப்புகளையும் வழங்கிட வேண்டும். ஓட்டுநர் பயிற்சி பெறுபவர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் முறை, இணையவழித் தேர்வுகள் ஆகியவை நம்பிக்கையளிக்கின்றன என்றபோதும் முழுமையான பயிற்சியை முடித்தவர்களுக்கு மட்டுமே சான்றிதழ்கள் அளிக்கப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பது அவசியம். பயிற்சி மையங்களை வழக்கமாகவும் அவ்வப்போது எதிர்பாராத வகையிலும் சோதனைகள் மற்றும் தணிக்கை செய்வதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன என்றபோதும் நடைமுறையிலும் அவை செயல்வடிவம் பெற வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நாட்டின் மிகச் சிறந்த சாலைக் கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் ஒன்று. சுமார் 66,000 கிமீ தொலைவிலான சாலைகள், மூன்று கோடிக்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள், ஏறக்குறைய இரண்டு கோடி ஓட்டுநர் உரிமங்கள் என்ற கட்டமைப்பைக் கொண்ட மாநிலம் இது. போக்குவரத்து விதிமுறைகளைக் கண்டிப்பான முறையில் கடைப்பிடிப்பதிலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கிவருகிறது. விபத்துகளைக் குறைப்பதில் தமிழ்நாட்டை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியே பரிந்துரைத்திருக்கிறார். மதுபோதையில் வாகனம் ஓட்டியது, வாகனம் ஓட்டிக்கொண்டே செல்பேசியில் பேசியது, சிவப்பு விளக்குகளைக் கடந்தது உள்ளிட்ட விதி மீறல்களுக்காகக் கடந்த சில ஆண்டுகளில் லட்சக்கணக்கான உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை ஓரங்களில் நடத்தப்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டதும் விபத்துகளைக் குறைப்பதில் முக்கியக் காரணமாக அமைந்தது. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருகிறது. தற்போது நடைமுறைக்கு வந்திருக்கும் ஓட்டுநர் உரிமங்களுக்கான புதிய விதிமுறைகள் பாதுகாப்பான பயணங்களுக்கான அடுத்த பரிணாமமாக அமையட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x