

இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலிப் பணியிடங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் ஒற்றைச் சாளர முறையில் அளிக்கும் திட்டம் ஒன்றைப் பல்கலைக்கழக மானியக் குழு மேம்படுத்திவருவது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகப் பணியிட வாய்ப்புகளைத் தகுதியானவர்கள் அறிந்துகொள்ளவும் சேரவுமான வாய்ப்பைப் பரவலாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், மாநில எல்லையைத் தாண்டி தேசிய அளவில் விரிவுபடுத்தப்படும் இந்தப் பணியிடங்கள் பற்றிய அறிவிக்கையால் உருவாகவிருக்கும் புதிய போட்டிகளைச் சமாளிக்கும் வகையில் தமிழ்நாட்டின் உயர் கல்வித் துறை தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டிருக்கிறதா என்ற கேள்வி முக்கியமானது.
கடந்த அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி இனிமேல் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். எனவேதான், எம்.ஃபில் படிப்புக்கான தேவையே கேள்விக்குறியாக மாறியுள்ளது. எம்.ஃபில் படிப்புகளைத் தொடர்ந்து நடத்த முடிவெடுத்திருக்கும் தமிழ்நாட்டின் உயர் கல்வித் துறை உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான குறைந்தபட்சத் தகுதியாக முனைவர் பட்டப் படிப்பை வலியுறுத்தும் அரசாணை குறித்து இன்னும் மௌனமே சாதித்துவருகிறது. 2018-லேயே பல்கலைக்கழக மானியக் குழு முடிவுசெய்த தர நிர்ணயம் இது.
முதுநிலைப் படிப்பும் தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சியும் மட்டுமே உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குப் போதுமானது என்றிருந்த நிலையில், தற்போது அத்தகைய ஒரு பணிவாய்ப்புக்கு மேலும் ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். அந்த ஐந்தாண்டுகளுக்குள் ஆய்வுப் பட்டத்தை நிறைவுசெய்ய முடியுமா என்பதும் ஒருவேளை நிறைவுசெய்தாலும் பணிவாய்ப்புகளுக்கு உறுதிசொல்ல முடியுமா என்பதும் பதிலளிக்க முடியாத கேள்விகளாகத்தான் தொடர்கின்றன. தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் கடந்த சில பத்தாண்டுகளாகவே ஆசிரியர் பணியிடங்கள் நியமனத்தின் வெளிப்படைத்தன்மை சந்தேகங்களை எழுப்பும் வகையிலேயே அமைந்துள்ளன. அரசுக் கல்லூரிகளின் ஆசிரியர் நியமனங்களும்கூட கடந்த அதிமுக ஆட்சியின் கடைசி சில மாதங்களில் கேலிக்கூத்தாக மாறவிருந்த நிலையில் நல்லவேளையாக கடைசியில் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டுவிட்டன.
உயர் கல்வித் துறையில் மாணவியர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பது பெருமைக்குரியது. ஆனால், பெண்களின் உயர் கல்வி பங்கேற்பு ஆராய்ச்சி நிலை வரை தொடரச் செய்வதும் அவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்புகளுக்கான சூழல்களை உருவாக்குவதுமான பொறுப்பு மாநில அரசுக்கும் உயர் கல்வித் துறைக்குமே உள்ளது. பள்ளிக் கல்வியிலும் பொதுச் சுகாதாரத்திலும் தமிழ்நாடு அடைந்துவரும் மேம்பாட்டை ‘திராவிட மாதிரி’யாக முன்னிறுத்தும் பொருளியலர்களும்கூட உயர் கல்வித் துறையில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டவே செய்கின்றனர். மாநிலத்தில் செயல்பட்டுவரும் ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் தமிழ்நாடு அரசு, உயர் கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டவருக்கான வாய்ப்புகளை உறுதிசெய்ய வேண்டும் எனில் ஒரு நெடும் பயணத்துக்குத் தயாராக வேண்டும்.