

பெரிய சாதக பாதகங்கள் அற்றதாக 2016-17 நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு. சுரேஷ் பிரபுவின் நீண்ட அறிக்கையையும் அவர் தொட்டிருக்கும் புள்ளிகளையும் பார்க்கும்போது, இந்திய ரயில்வேயின் பிரச்சினைகளை அவர் புரிந்துணர்ந்துகொண்டிருப்பது தெரிகிறது. ஆனால், அவற்றை எதிர்கொள்ள அவர் முன்வைக்கும் திட்டங்களும் கனவுகளும் எந்த அளவுக்கு எடுபடும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணத்திலிருந்து ரயில்வே துறைக்குக் கிடைக்கும் வருமானத்துக்கான வழிகள் குறைந்திருக்கும் நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான மதிப்பீடுகளுடன் ஒப்பிட ரூ. 8,720 கோடியைச் சேமிக்க முடியும் எனும் சுரேஷ் பிரபுவின் கணிப்பு, ஒரு சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்டான அவர் சிக்கன நடவடிக்கை களில் வைத்திருக்கும் நம்பிக்கைகளை எடுத்துக்காட்டுகிறது.
இந்த ஆண்டின் மிகப் பெரிய சவால், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளின்படி ரயில்வே துறை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்க வேண்டிய நிலை. இந்த ஊதிய உயர்வால் அதிகம் பாதிப்படையாத வகையிலேயே அறிக்கையைத் தாக்கல் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். சம்பளம் மற்றும் ஓய்வூதியம் உயர்வதால் அடுத்த ஆண்டின் செயல்பாட்டுச் செலவீனங்களின் உயர்வு 11.6% ஆகக் குறைக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது நிர்வாகச் செலவில் 2% அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். இதன் விளைவாக ஏற்படும் மூலதனச் செலவுக்கான நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ரயில்வே துறையின் சொத்துகள், குறிப்பாக நிலங்களை விற்பது, உணவு விற்பனை போன்ற டிக்கெட் கட்டணம் அல்லாத பிற ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தை அதிகரிப்பது, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட திட்டங்களை அவர் முன்வைத்திருக்கிறார். வார்த்தை அளவில் இவை கேட்க உகந்தவை; காரியங்கள் எந்த அளவுக்குச் சாத்தியம் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. மேலும், செலவுகளை எதிர்கொள்ள பொதுச் சொத்துகளை விற்பதை ஒரு கலாச்சாரமாக இந்த அரசு தொடர்வதும் நல்லதல்ல.
சர்வதேச அளவில் ரயில்வே துறையில் டிக்கெட் கட்டணம் அல்லாத பிற ஆதாரங்களிலிருந்து பெறப்படும் வருமானத்தின் சராசரி 10 முதல் 20% ஆக இருக்கும் சூழலில், இந்திய ரயில்வே துறையில் தற்போது 5% ஆக உள்ள டிக்கெட் கட்டணம் அல்லாத ஆதாரங்களிலிருந்து பெறப்படும் வருமானத்தின் அளவைச் சர்வதேச அளவுக்கு அதிகரிப்பதற்கான இலக்கையும் இந்த நிதிநிலை அறிக்கை வகுத்திருக்கிறது. சரக்குப் போக்குவரத்துக்கான சந்தையை அதிகரிக்க சரக்கு ரயில்களுக்கான நேர அட்டவணை உட்பட பல்வேறு திட்டங்களும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. சரக்கு ரயில் தொடர்பான அரசின் அணுகுமுறை மேம்பட்டு, சரக்குப் போக்குவரத்துக்கு எனத் தனிப் பாதைகள் அமைக்க முடிவெடுத்திருப்பது, சென்னையில் ‘ஆட்டோ ஹப்’ அமைக்கவிருப்பது, புதிய ரயில் பாதை அமைக்கும் இலக்கை அதிகரித்திருப்பது போன்றவை குறிப்பிடத்தக்க நகர்வுகள்.
ரயில் நிலையங்களில் வைஃபை, ரயில் பெட்டிகளைச் சுத்தமாக்க எஸ்எம்எஸ் சேவை, நீண்ட தூர ரயில்களில் முன்பதிவற்ற பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, முன்பதிவில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு, பயணச்சீட்டை ரத்துசெய்ய தொலைபேசி உதவி எண் போன்ற ஏனைய அறிவிப்புகள் எல்லாம் வரவேற்கப்படக் கூடியவை என்றாலும், இவையெல்லாம் நிர்வாகரீதியாக ஒவ்வொரு நாளும் நடைமுறையில் மேம்படுத்தக்கூடியவை; ரயில்வேயின் போக்கையே மாற்றக்கூடிய அளவுக்கான நிதிநிலை அறிக்கைப் பிரகடனங்களாக இவையே இடம்பெறுவது பெரிய ஆர்ப்பாட்டங்களுடன் பயணத்தைத் தொடங்கிய இந்த அரசிடம் நிரம்பும் போதாமையையே காட்டுகிறது!