விபத்து இழப்பீடு: முறைகேடுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வேண்டும்

விபத்து இழப்பீடு: முறைகேடுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வேண்டும்
Updated on
1 min read

வாகன விபத்துகளை விசாரித்துவரும் அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களின் ஆவணங்களையும் சரிபார்க்க மாவட்டவாரியாக நீதிபதிகளைக் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்புக்குரியது. வாகன விபத்து இழப்பீடுகளில் நீதிமன்ற ஊழியர் ஒருவர் கையாடல் செய்ததாகப் புகார் எழுந்ததையொட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகளின் அடிப்படையில் நீதிமன்றமே தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

வாகன விபத்து வழக்குகளைப் பொறுத்தவரை அதன் காலதாமதங்கள், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நிவாரணத்தைப் பெற முடியாமல் செய்துவிடுகின்றன. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆர்.பானுமதி ஓய்வுபெற்றபோது, அவருக்கு நடந்த விடையளிப்பு விழாவில் வாகன விபத்து வழக்குகளின் காலதாமதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் தன்னையும் ஒருவராக அவர் நினைவுகூர்ந்து பேசியதே இந்தச் சூழலின் தீவிரத்தை உணர்த்தப் போதுமானது. விபத்து நடக்கும் இடத்துக்கு வரும் அவசர ஊர்தி, மருத்துவமனை ஊழியர்கள், வழக்குப் பதிவுசெய்யும் காவலர்கள், தாமாகவே வழக்கில் உதவுவதற்கு முன்வரும் வழக்கறிஞர்கள் என்று கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் விபத்து வழக்குகளை மாய வலைகள் சூழ்ந்துள்ளன. பாதிக்கப்பட்டவரின் சிகிச்சைச் செலவுக்காக அளிக்கப்படும் பண உதவிகள், பின்பு இழப்பீடு கிடைக்கிறபோது வட்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படுகிற சம்பவங்களும் உண்டு. வழக்குச் செலவுகளை ஏற்க வாய்ப்பில்லாத எளியவர்கள் இழப்பீட்டின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அதற்குப் பதிலாக அளிக்கத் தயாராக உள்ளனர்.

இழப்பீட்டை வழக்கறிஞர்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவரின் வங்கிக்கணக்கிலேயே செலுத்தும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. என்றாலும், வழக்கறிஞர்களின் வழிகாட்டுதல்கள் இல்லாமல் இழப்பீடு பெறுவது சாத்தியமல்லாத வகையில்தான் நீதிமன்ற நடைமுறைகள் அமைந்துள்ளன. உத்தரவிடப்பட்ட இழப்பீட்டில் ஒரு பகுதி உடனடியாகப் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்டு, எஞ்சிய தொகை வங்கிக்கணக்கில் இருப்பு வைக்கப்படுகிறது. குறிப்பிட்ட கால அளவுக்குப் பின்பு, அந்தத் தொகையை எடுக்க வேண்டியும், கணக்குகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியும், காசோலை அளிக்க வேண்டியும் நீதிமன்றத்தைப் பாதிக்கப்பட்டவர்கள் அணுக வேண்டியிருக்கிறது. எனவே, வழக்குகள் முடிந்த பிறகும் வழக்கறிஞர்களின் வழிகாட்டுதல்கள் பாதிக்கப்பட்டவருக்கு அவசியமாக இருக்கின்றன.

நீதிமன்றக் கண்காணிப்புடன் தற்போது விபத்து இழப்பீடுகள் அளிக்கப்பட்டுவரும் நிலையில், நீதிமன்றப் பணியாளர்களே கையாடலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளித்தாலும் அதன் பின்னணி இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டியது. கீழமை நீதிமன்றங்களில் ஏற்கெனவே குவிந்துள்ள வழக்குகளின் சுமையோடு பணியாளர்களை நிர்வகிக்கும் பணியையும் நீதிபதிகளின் மேலேயே சுமத்துவது சரியாக இருக்க முடியாது. உயர் நீதிமன்றங்களில் நிர்வாகப் பணிகளுக்காக நீதித் துறைப் பதிவாளர்கள் நியமிக்கப்படுவதுபோல மாவட்ட அளவிலும் நீதித் துறையைச் சேர்ந்தவர்களைச் சுழற்சி முறையில் நிர்வாகப் பணிக்கு நியமிப்பது குறித்தும் பரிசீலிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in