Published : 14 Dec 2015 08:54 AM
Last Updated : 14 Dec 2015 08:54 AM

டொனால்டு டிரம்பின் விஷ நாக்கு

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக, கட்சிக்குள் தனக்கு ஆதரவு திரட்டிவரும் டொனால்ட் டிரம்ப், மிக ஆபத்தான வார்த்தைகளைப் பேசிவருகிறார். அமெரிக்காவில் இனி முஸ்லிம்கள் யாரும் குடியேற முடியாதபடிக்கு முழுதாகத் தடை செய்துவிட வேண்டும் என்று அவர் பேசியிருக்கிறார். கடந்த சில காலமாகவே சர்ச்சைக்கு இடம்தரும் வகையில் அவர் பேசிவருகிறார். மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவில் குடியேற வருகிறவர்கள் பாலியல் பலாத்காரம் செய்கிறவர்கள் என்று பேசி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தவர் இவர். தன்னைப் பேட்டி கண்ட டி.வி. பெண் நிருபர் சிக்கலான கேள்வி கேட்டபோது அதற்கு நேரடியாகப் பதில் கூறாமல், பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் குத்தலாகப் பதில் அளித்தவர். இதனால் தாராள சிந்தனை உடையவர்கள், ஜனநாயகக் கட்சியினர் போன்றோரின் கண்டனங்களுக்கும் ஆளானார்.

முஸ்லிம்களை அனுமதிக்கக் கூடாது என்ற அவருடைய பேச்சை குடியரசுக் கட்சியின் இதர வேட்பாளர்களும் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்களும் ஏற்கவில்லை; அது அவருடைய கருத்து என்று ஒதுங்கிவிட்டனர். அவருடைய கருத்து அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்துக்கு முற்றிலும் முரணானது. ஒரு மதத்துக்கு எதிராகவோ, மதச் சுதந்திரத்துக்கு எதிராகவோ நாடாளுமன்றம் சட்டம் இயற்றக் கூடாது என்பதுதான் அந்தத் திருத்தத்தின் முக்கிய நோக்கம்.

பயங்கரவாதிகள் குறித்த அச்சம் இப்போது அமெரிக்காவில் மீண்டும் படர ஆரம்பித்திருப்பதைப் போலத் தெரிகிறது. கடந்த நவம்பர் மாதம் பாரிஸ் நகரைத் தாக்கிய ஐஎஸ் பயங்கரவாதிகள் பற்றி உலகெங்கும் பரவிய அச்சமும் இத்துடன் சேர்ந்துகொண்டிருக்கிறது. கலிஃபோர்னியா மாகாணத்தில் சான் பெர்னார்டினோ என்ற இடத்தில் நடந்த தாக்குதலையும்கூட இத்துடன் சிலர் இணைத்துப் பார்க்கின்றனர். எனவே, டிரம்பின் இந்தப் பேச்சை அமெரிக்க வலதுசாரி சிந்தனையாளர்களில் சிலர் ஆதரித்திருப்பதில் வியப்பேதும் இல்லை. இப்படிப் பேசியதற்காகவும் குடியரசுக் கட்சிக்குள் டிரம்புக்கு ஆதரவு குறைவதற்குப் பதில் அதிகரித்திருப்பதும் அதிர்ச்சி தருகிறது. உத்தி, வியூகம் என்ற அடிப்படையில் டிரம்புக்குக் கிடைத்துள்ள ஆதரவைப் பார்க்க வேண்டியிருக்கிறது. தனது கருத்துகளால், தீவிர வலது சாரிக் கருத்துகளைக் கொண்டவர்களுக்கு அவர் மிகவும் வேண்டப்பட்டவராகி விட்டார். அமெரிக்காவுக்குள் பிற நாட்டவர்களை குடியேற அனுமதிக்கக் கூடாது என்பவர்கள், கருத்தடைக்கு எதிரானோர், வெள்ளை இனத்தவர்கள் மேலானவர்கள் என்கிற சிந்தை கொண்டவர்கள் என்று பலதரப்பட்டவர்களும் அவரை ஆதரிக்கின்றனர். மற்ற அமெரிக்கர்களின் விருப்பம் எதுவென்று தெரியவில்லை.

அவர் இப்படியே பழமைவாதக் கொள்கைகளைப் பேசிக்கொண் டிருந்தால், ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பப்படும் ஹிலாரி கிளிண்டன் வெகு எளிதாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துவிடுவார்.

ஐ.எஸ். அமைப்பின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க இஸ்லாமியர் மீதான வெறுப்பும் சில வகைகளில் அதிகரித்துவருகிறது. இதை உணர்ந்துள்ள ஹிலாரி கிளிண்டன் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராகத் திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளிக்கும் அதே நேரத்தில், இஸ்லாமியர் உள்ளிட்ட அனைவரையும் அரவணைத்து ஒற்றுமையை நிலைநாட்டும் முயற்சிகள் குறித்துப் பேசிவருகிறார். இவ்விருவரில் யாரை அமெரிக்க வாக்காளர்கள் அதிபர் தேர்தலில் ஆதரிப்பார்கள் என்பதைப் பொருத்துத்தான் 2016-க்குப் பிறகு சிறுபான்மையின மக்கள் வரவேற்கப்படுவார்கள் அல்லது தீவிரவாதிகளின் படைக்கு ஆள் சேர்க்கும் பிரச்சாரத்துக்குக் களமாகிவிடும் அமெரிக்கா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x