நீதிமன்றத்தில் எதிர்கொள்ளுங்கள்

நீதிமன்றத்தில் எதிர்கொள்ளுங்கள்
Updated on
2 min read

தொடர்ந்து நான்காவது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது காங்கிரஸ். இத்தனைக்கும் பொதுப் பிரச்சினையை வலியுறுத்தி அக்கட்சி மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை அல்ல இது. ‘நேஷனல் ஹெரால்ட்’ பத்திரிகை நிறுவனச் சொத்துகள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட ஐந்து பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பதைக் காரணம்காட்டி மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை. ‘அசோசியேடட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தை ‘யங் இண்டியன்’என்ற புது நிறுவனம் வாங்கியதில் முறைகேடு ஏதும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கருதினால், அது தொடர்பான வழக்கை நீதிமன்றத்தில்தான் எதிர்கொள்ள வேண்டும்.

‘யங் இண்டியன்’ என்ற லாப நோக்கல்லாத நிறுவனத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் முக்கியப் பங்குதாரர்களாக இருக்கின்றனர். இந்த வழக்கை விசாரித்துவரும் கீழமை நீதிமன்றம் சோனியா, ராகுல் ஆகியோருக்கு அனுப்பிய அழைப்பாணை சரியானதுதான் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கருதுகிறது. அவ்விருவரும், அந்நிறுவனத்தின் இதர இயக்குநர்களும் குற்றச் செயலில் ஈடுபட்டிருப்பதாக ‘முதல் நோக்கில்’ கருத இடமிருக்கிறது என்றும் நீதிமன்றம் கருதுகிறது.

இந்தப் பரிமாற்றம் குறித்து சுப்பிரமணியன் சுவாமிதான் முதலில் பிரச்சினை எழுப்பினார். ‘இது சரியல்ல என்றால் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது வழக்குத் தொடுக்க வேண்டியதுதானே?’ என்று அவருக்குச் சவால் விட்டது காங்கிரஸ் கட்சிதான். ‘குற்றச்சாட்டுகளைக் கூறுவோர் அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்திடம் அளிக்க வேண்டும்’ என்றும் அக்கட்சி 2012-ல் சவால் விட்டது. இப்போது டெல்லி உயர் நீதிமன்றம், அழைப்பாணைகளை அனுப்பும் விசாரணை நீதிமன்றத்தின் முடிவு சரியானதுதான் என்று கூறிய பிறகு, ‘இது அரசியல்ரீதியிலான பழிவாங்கல் நடவடிக்கை’ என்று கூறுவதில் அர்த்தமில்லை. அப்படியே இதில் அரசியல் உள்நோக்கம் இருந்தாலும், விசாரணை நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் கடமை பிரதிவாதிகளுக்கு இருக்கிறது. பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத இந்த விவகாரத்துக்காக நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான செயல். இதை எந்த அடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாது. இது அரசியல்ரீதியிலான பழிவாங்கல் நடவடிக்கை என்று குற்றம்சாட்டுவதே நீதித் துறை மீது மறைமுகமாகக் களங்கம் சுமத்தும் செயலாகும்.

இந்த வழக்கில் பலவீனமான அம்சங்கள் இல்லாமல் இல்லை. இப்படி அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் சொத்துகளைக் கைமாற்றியதால் ஏமாற்றப்பட்டவர்கள், நிதி கையாடப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் என்று எவரையும் முன் நிறுத்த சுப்பிரமணியன் சுவாமியால் முடியவில்லை. அசோசியேடட் நிறுவனத்தின் சொத்துகள் அனைத்தும் அந்நிறுவனத்தின் பெயரிலேயே இருக்கின்றன; யங் இண்டியன்; நிறுவனம் பிரிவு 25-ன் கீழ் ‘லாபநோக்கமற்ற நிறுவனம்’ என்பதால், நிறுவனத்தின் வாடகை வருமானத்தில் யாருக்கும் லாபத்தையோ, லாப ஈவையோ வழங்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் யாரும் ஏமாற்றப்படவில்லை என்கிறது காங்கிரஸ் கட்சி. அப்படியெனில், இந்த வழக்கைச் சந்திப்பதில் அக்கட்சித் தலைவர்களுக்கு என்ன தயக்கம்?

இதை அரசியல் களத்துக்குக் கொண்டுவராமல் நீதிமன்றத்தில் மட்டுமே சந்திக்க வேண்டும். தங்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளைச் சட்டபூர்வமாகத்தான் முறியடிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்திக்க வேண்டிய இடம் நீதிமன்றங்கள்தானே தவிர அரசியல் களமோ, நாடாளுமன்றமோ அல்ல!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in