Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM

ராமர் கோயில் அறக்கட்டளை மக்களின் முழு நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு நிலங்கள் வாங்கப்பட்டது தொடர்பில் எழுப்பப்பட்டிருக்கும் சந்தேகங்கள் நாடு முழுவதும் உள்ள பக்தர்களையும் நன்கொடையாளர்களையும் வருத்தத்துக்கு ஆளாக்கியிருக்கின்றன. அறக்கட்டளை நிர்வாகிகள் அளித்துள்ள விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருப்பினும், அவற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டிய பொறுப்பு தற்போது அவர்களின் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

2019-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி ராமர் கோயில் கட்டுவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்துவருகின்றன. அந்தப் பணிகளின் ஒரு பகுதியாக, ராமர் கோயிலைச் சுற்றி அயோத்தியின் பல இடங்களில் உள்ள நிலங்களையும் அறக்கட்டளை நிர்வாகம் தொடர்ந்து வாங்கிவருகிறது. கடந்த மார்ச் 18-ல் சுல்தான் அன்சாரி, ரவி மோகன் திவாரி ஆகியோரிடமிருந்து ரூ.18.5 கோடி விலையில் சுமார் 3 ஏக்கர் அளவுள்ள நிலம் வாங்கப்பட்டது. அதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பு, அதே நிலம் அவர்களால் குசும் பாதக், ஹரீஷ் பாதக் ஆகியோரிடமிருந்து ரூ.2 கோடி விலையில் வாங்கப்பட்டதும் இந்தப் பத்திரங்களில் அறக்கட்டளை நிர்வாகிகள் சாட்சிக் கையெழுத்திட்டிருப்பதுமே தற்போது எழுந்திருக்கும் சந்தேகங்களுக்கான தொடக்கம். பதிவுத் துறைத் தரவுகளின்படி அந்த நிலத்தின் மதிப்பு ரூ.5.7 கோடி என்று மதிப்பிடப்பட்டிருந்தது, இந்தச் சந்தேகங்களை மேலும் வளர்த்தெடுத்துவிட்டது.

உத்தர பிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி இந்தப் பிரச்சினையைப் பெரும் முறைகேடாகச் சித்தரிப்பதில் ஆர்வம்காட்டிவருகிறது. சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும் அந்தக் கட்சி கோரிவருகிறது. காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவானது முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்தை நோக்கி கண்டனப் பேரணியை நடத்தியிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியும் இந்த அரசியல் வாய்ப்பைத் தவறவிட்டுவிடவில்லை. அடுத்து வரும் 2022-ல் உத்தர பிரதேசம் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் நிலையில், அறக்கட்டளை நிர்வாகத்தின் மீது எழுப்பப்படும் சந்தேகங்கள், மாநில அரசின் மீதான விமர்சனமாகவும் விரித்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய், அரசியல் உள்நோக்கத்துடனேயே இந்தப் புகார்கள் எழுப்பப்படுவதாகப் பதிலளித்துள்ளார். கோயிலுக்காக அறக்கட்டளை தொடர்ந்து நிலங்கள் வாங்கிவருவதை அறிந்த மக்கள், தங்களது நிலங்களின் விலையைப் பல மடங்கு உயர்த்திவருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் பதில்களில் உள்ள நியாயங்கள் மறுக்க முடியாதவை. நிலத்தை அறக்கட்டளைக்கு விற்றவர்களில் ஒருவரான சுல்தான் அன்சாரி, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே நிலத்துக்கு விலை பேசி முன்பணம் கொடுத்துவிட்டதாகவும், தீர்ப்புக்குப் பிறகு விலை மதிப்பு பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும் அளித்துள்ள விளக்கம் அறக்கட்டளையின் பதிலுக்கு வலுசேர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது. எனினும், இது தொடர்பிலான சந்தேகங்களுக்கு அறக்கட்டளை நிர்வாகம் விரிவான ஆதாரங்களுடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x