

பேரிடர்கள்தான் மக்களிடமும் நிறுவனங்களிடமும் உள்ள சிறப்பியல்புகளையும் சிறுமைகளையும் ஒருங்கே வெளிப்படுத்துகின்றன. சென்னை, கடலூர் மக்கள் வாழ்வை மிதக்கவிட்டிருக்கும் மழை, வெள்ளமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஏராளமான தனிநபர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தனித்தும், அரசுடன் இணைந்தும் மீட்பு - உதவிப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். அதே வேளையில், சிறுமதி கொண்ட அரசியல்வாதிகளும் விஷமிகளும் நெருக்கடியான இந்த நேரத்திலும்கூட, சுய விளம்பரத்துக்கும் சொந்த நலனுக்கும் உற்ற நேரமாக இதைக் கருதிச் செயல்படுகின்றனர்.
நிவாரண உதவிகளை எடுத்துச் செல்பவர்கள் பல இடங்களிலும் அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் தங்களுடைய சார்பிலேயே அவை விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் மிரட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் உதவி, நிவாரணம் என்று மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் தீவிரமாக இருக்க… அரசியல் கட்சிகளோ ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி சேற்றை வாரி இறைத்துக்கொண்டிருக்கின்றனர். இணையத்தில் சிலர் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கும் அதே நேரத்தில், அவற்றையே கேலி செய்யவும் பீதியைக் கிளப்பவும் பயன்படுத்துவதைக் காண வருத்தமாக இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் உச்சகட்டம் என்னவென்றால், எல்லா நீர்நிலைகளிலும் வெள்ள அபாயம் நீங்கிவிட்டது என்று ஒரு கோஷ்டியும் ஏரிகள் உடைத்துக்கொண்டு வெள்ளம் பாயப்போகிறது என்று இன்னொரு கோஷ்டியும் அடிக்கடி பரப்பிக்கொண்டிருக்கும் தகவல்கள். மக்களை உரிய எச்சரிக்கையுடன் இருக்கவிடாமலும், நிம்மதியின்றி ஓட வைக்கவும் செய்கின்றன வதந்திகள். வெட்கக்கேடாக இருக்கிறது.
அரசு ஊழியர்கள் உயிரைக் கொடுத்து மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். எனினும், அவர்களுக்கான உத்தரவுகள் வந்து சேர்வதிலும் பணிகளை ஒருங்கிணைப்பதிலும் நெருக்கடியான சூழலை எப்படிக் கையாள வேண்டும் என்பதிலும் குழப்பமான சூழல் நிலவுவதைப் பார்க்க முடிகிறது. ராணுவத்தின் முப்படைகளுக்கும் மாநில மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்துக்கும் இடையேயான ஒருங்கிணைப்பில் தென்பட்ட பிரச்சினைகள் ஒரு உதாரணம். மீட்பு, நிவாரணப் பணிகளில் நல்ல அனுபவம் கொண்ட ராணுவத்தினரும் தேசியப் பேரிடர் நிவாரணப் பணியினரும் படகுகள், கயிறுகள், ஜெனரேட்டர்கள், நீரிறைக்கும் பம்புகள், மருந்துகள், மிதவைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்றவற்றுடன் வந்தும் அவர்களுடைய ஆற்றல் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளப்படவில்லை என்ற கருத்து நிலவுகிறது. மிகவும் நெருக்கடியான நேரத்தில்கூட முடிவு எடுக்கும் விஷயத்தில் சுயேச்சையாகச் செயல்படும் அதிகாரம் இன்றிப் பலர் திணறுவது அப்பட்டமாகத் தெரிகிறது.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு சாதாரணமானது அல்ல. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் சில நூறுகளோ சில ஆயிரங்களோ அல்ல. சென்னை, கடலூர் சூறையாடல்களிலிருந்தே அரசு இயந்திரம் இன்னும் எழுந்திருக்காத நிலையில், காவிரிப் படுகையில் தொடங்கியிருக்கும் மழை பெரும் அச்சத்தை உண்டாக்குகிறது. நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு முறையாகப் பராமரிக்கப்படாத நிலையில், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் உண்டாகும் சேதங்கள் கடுமையாக இருக்கும் என்பது நினைவில் இருக்கட்டும். இங்கு நிவாரணப் பணிகளும் அங்கு முன்னெச்சரிக்கைப் பணிகளும் ஒருசேர முழுவீச்சில் நடைபெற வேண்டிய நேரம் இது. விமர்சனங்கள் எழத்தான் செய்யும். அவற்றுக்கான ஆட்சியாளர்களின் பதில் சொல்லில் அல்ல; செயலில் இருக்க வேண்டும்!