இலக்கை எட்டட்டும் அனைவருக்கும் இலவசத் தடுப்பூசித் திட்டம்

இலக்கை எட்டட்டும் அனைவருக்கும் இலவசத் தடுப்பூசித் திட்டம்
Updated on
1 min read

தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்ட நான்கரை மாதங்களுக்குள் சீனா, அமெரிக்க நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் தடுப்பூசித் தவணைகள் போடப்பட்ட மூன்றாவது நாடாகியிருப்பது, பெருந்தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். ஒன்றிய அரசு உறுதியளித்தபடி நடப்பாண்டின் இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து வயதுவந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு எட்டப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது.

ஜனவரி 16-ல் தொடங்கி மே இறுதி வரையிலும் மொத்தம் 16.8 கோடிப் பேருக்குத் தடுப்பூசி முதல் தவணையும், 4.3 கோடிப் பேருக்கு இரண்டாவது தவணையும் போடப்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை மதிப்பீடு 136.3 கோடி எனக் கொண்டால், இதுவரையில் 12% பேருக்கு முதல் தவணையும், 3% பேருக்கு இரண்டு தவணைகளும் போடப்பட்டுள்ளன. 18 - 45 வயது வரையிலானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான செலவுகளை நிதிச் சுமை கருதி, மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அந்தப் பொறுப்பையும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்வது தவிர்க்க இயலாததாகிவிட்டது. தடுப்பூசிக் கொள்முதலுக்காக ரூ.35,000 கோடி செலவிடத் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அது ரூ.50,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. சீரம் நிறுவனத்திடமிருந்து 25 கோடி, பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து 19 கோடித் தடுப்பூசிகளை வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிப்பதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதற்கு முன்பு பயோலாஜிக்கல்-இ நிறுவனத்திடம் 30 கோடித் தடுப்பூசி தயாரிக்கக் கோரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஆகஸ்ட் தொடங்கி டிசம்பர் மாதங்களுக்குள் கிடைத்துவிடும். தற்போதைய நிலவரங்களின்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் இன்னும் 12.5 கோடிப் பேருக்கு இரண்டாவது தவணையும், 73.1 கோடிப் பேருக்கு இரண்டு தவணைகளும் போடப்பட வேண்டும். இரண்டையும் கவனத்தில் கொண்டால், இன்னும் ஏழு மாதங்களுக்குள் குறைந்தபட்சம் 159 கோடித் தடுப்பூசித் தவணைகள் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும். சராசரியாக மாதம் ஒன்றுக்கு 23 கோடித் தடுப்பூசிகள் தேவை. தவிர, நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு கருதி, உடனடித் தேவையுள்ள நாடுகளுக்குத் தடுப்பூசி ஏற்றுமதியை அனுமதிக்கவும் வேண்டியிருக்கிறது.

மொத்தத்தில், ஆண்டு இறுதிக்குள் வயதுவந்தவர்கள் அனைவருக்கும் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் அளித்துவிட முடியும் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதே வேளையில், வயதுவராதோர், குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது குறித்தும் முன்கூட்டியே திட்டமிட வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. இந்தியாவில் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 46.3 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இது நாட்டின் மக்கள்தொகையில் 34%. மூன்றாவது அலையில், குழந்தைகளும் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக அச்சம் நிலவுகிறது. குழந்தைகள் பள்ளிக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகளைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கவும் முடியாது. எனவே, குழந்தைகள், வயதுவராதோரிடையே தடுப்பூசி போடுவதன் பாதுகாப்பு அம்சங்களைப் பரிசோதனைகளின் வாயிலாக உறுதிப்படுத்தவும், தடுப்பூசி வாயிலாக நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கவும் இப்போதே யோசிக்கவும் தயாராகவும் வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in