Published : 04 Jun 2021 03:13 AM
Last Updated : 04 Jun 2021 03:13 AM

வேலையின்மையைக் குறைக்க என்னென்ன திட்டங்களை முன்னெடுக்கப் போகிறோம்?

கடந்த சில மாதங்களில் தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்துவரும் வேலையின்மையானது, சாமானியர்களின் வாழ்க்கையை எங்கு கொண்டுபோய் நிறுத்துமோ என்ற அச்சத்தையே ஏற்படுத்துகிறது. கரோனாவின் இரண்டாவது அலையில் தொற்றுகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பதற்றமடையச் செய்துகொண்டிருக்கையில், அதன் காரணமான பொருளாதாரப் பாதிப்புகள் இன்னொரு பக்கம் மக்களைப் பரிதவிப்புக்கு ஆளாக்கிவருகின்றன. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் வேலையின்மை விகிதம் 8% ஆக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இவ்விகிதம் மார்ச் மாதத்தில் 6.5% ஆக இருந்தது. மே மாத வேலையின்மை நிலவரம் மேலும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகவே இருக்கும். ஏனெனில், மே மாதத்தின் முதல் மூன்று வாரங்களுக்கான மதிப்பீடுகளின் அடிப்படையில், வேலையின்மை விகிதம் 13% அளவுக்கு உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வழக்கத்துக்கு மாறானது. வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சபட்ச அளவின் அடையாளமாகவே இதைக் கருத வேண்டும்.

ஏப்ரலில் மட்டும் குறைந்தபட்சம், 10 லட்சம் பேர் வேலையிழப்பைச் சந்தித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. 2020 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 39.98% ஆகக் குறைந்துள்ளது. முதல் அலையின்போது நாடு தழுவிய அளவில் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து கணக்கில் கொண்டால், கடந்த ஏப்ரல் மாதமே தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மிகவும் குறைவாகப் பதிவாகியுள்ள மாதமாகும். பொதுமுடக்கத்தின் காரணமாகவே தொழிலாளர்கள் பங்கேற்பு குறைந்திருக்கிறது என்றாலும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் உடனடியாக அது பழைய நிலைக்குத் திரும்பிவிடும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. காரணம், தேவையான அளவுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிலையில் பொருளாதாரச் சூழல் இல்லை. இரண்டாவது அலை காலகட்டத்தில் நகர்ப்புறங்களைக் காட்டிலும் ஊரகப் பகுதிகளிலேயே கணிசமான அளவுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. முதல் அலையின் முடிவில் நகர்ப்புற வேலைவாய்ப்புகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால், இரண்டாவது அலையால் ஊரகப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்குள்ள சிறு குறு தொழில் துறைகள் விரைவில் மீண்டெழுமா என்பது சந்தேகமே.

இந்த வேலையிழப்புகளின் தீவிரத்தால் இந்தியா மட்டுமே பாதிக்கப்படவில்லை. உலகம் முழுவதிலுமான உத்தேச வேலையிழப்புகள் 9.5 கோடியாக இருக்கும் என்று முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஊரக வேலையின்மைச் சிக்கலுக்கு உடனடித் தீர்வளிக்கும் வகையில், வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டுவருகிறது. கடந்த ஏப்ரலில் மட்டும் இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 34.1 கோடிப் பேருக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2020-க்குப்பிறகு, இதுவே அதிக அளவிலான வேலையளிப்பு. ஆனால், இது தற்காலிகத் தீர்வுதானேயொழிய நிரந்தரத் தீர்வுக்குத் தொழில் துறைகளுக்கான கடனுதவிகளும் மானியங்களும் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களுமே வழிவகுக்க இயலும். மேலும், வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்துவருவதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x