Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

தடுப்பூசி இயக்கத்தை உத்வேகப்படுத்துக!

கரோனா தடுப்பூசிக்கான முதல் தவணைக்கும், இரண்டாவது தவணைக்குமான இடைவெளியை அரசு மேலும் நீட்டித்திருப்பது வரவேற்புக்குரியது. பால் கொடுத்துக்கொண்டிருக்கும் பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும், தொற்றிலிருந்து மீண்டவர்கள் அதிலிருந்து மூன்று மாதங்கள் கழித்துத் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருப்பது சற்றே ஆசுவாசத்தைத் தருகிறது. முதல் தவணைத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு தொற்று ஏற்பட்டவர்கள், தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு மூன்று மாதங்கள் கழித்து அடுத்த தவணை போட்டுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் தொடக்கம் வரை வேறு விதமான தடுப்பூசித் திட்டத்தை இந்தியா பின்பற்றியது; கையிருப்பில் எவ்வளவு தடுப்பூசி இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டதோடு, நோய்த் தொற்றால் அதிக அளவு பாதிப்படையக்கூடியவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தது. இரண்டாவது அலை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில்... இதுவரை ஒன்றிய அரசை விமர்சித்துவந்த மாநில அரசுகள், தடுப்பூசிப் பொறுப்பை ஏற்றுத் தங்கள் செயல்திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவில் குழந்தைகளுக்குப் போடும் தடுப்பூசித் தவணைகளுக்கு 4-லிருந்து 8 வார இடைவெளி விடப்படுகிறது. எனினும், கோவிஷீல்டு தடுப்பூசிக்கான சோதனைகளில் (18-55 வயதினருக்குச் செலுத்தப்பட்டது) இரண்டாவது தவணையை முதல் தவணையிலிருந்து 6 வாரங்கள் கழித்துப் போட்டுக்கொண்டவர்களைவிட 8 வார இடைவெளியில் போட்டுக்கொண்டவர்களுக்குக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு எதிர்ப்பாற்றல் கிடைத்தது கண்டறியப்பட்டிருக்கிறது. நீண்ட இடைவெளியில் அந்தத் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் போட்டுப் பார்த்தபோது நல்ல பலனளித்திருப்பது தெரியவந்திருக்கிறது. நோய்த் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பின் அளவைக் கண்டறிவதற்கு எதிர்ப்பு சக்தி செல்கள் முக்கியமானவை என்றாலும் செல்கள் அடிப்படையிலான எதிர்ப்பு சக்தியும் முக்கியம். கரோனா பெருந்தொற்று ஏற்பட்டு 18 மாதங்கள்தான் ஆகின்றன என்பதால் தடுப்பு மருந்துகளால் எவ்வளவு காலத்துக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்பதைத் தற்போது உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அப்படியே, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் தொற்று ஏற்பட்டாலும் அவர்களுக்கு நோய் தீவிரமாவது மிகமிக அரிது. அதனால்தான், தடுப்பூசி மிகவும் முக்கியமானதாகிறது.

கையிருப்பில் இருக்கும் தடுப்பூசிகளை மக்களுக்குப் போடுவதற்கு, காலநீட்டிப்பு குறித்த ஒன்றிய அரசின் பரிந்துரைகள் உதவும் என்று நம்பலாம். ஆகஸ்ட் வாக்கில் மேலும் சில தடுப்பூசிகள் கிடைக்கவிருக்கின்றன. இந்தியாவின் தினசரி இறப்புகள் அமெரிக்கா, பிரேசிலைவிட அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையான இந்தியர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படாததாலும் புதியதாக கரோனா வைரஸின் வடிவங்கள் அச்சுறுத்திக்கொண்டிருப்பதாலும் நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. தடுப்பூசிகளின் நோக்கம் என்பது கடுமையான நோயையும் இறப்பையும் தடுப்பதாகும். ஆகவே, தடுப்பூசி தொடர்பாக எடுக்கப்படும் எந்த முடிவுகளும் இதை மனதில் கொண்டு எடுக்கப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x