Published : 24 May 2021 03:10 am

Updated : 24 May 2021 06:03 am

 

Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 06:03 AM

பெருந்தொற்று மருந்துகளுக்கு வரிவிலக்கு வேண்டும்

pandemic-medicines

கரோனா தொற்றுக்கான மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்கு வரிவிலக்குச் சலுகைகளை அளிப்பதன் வாயிலாக அவை இன்னும் குறைவான விலையில் கிடைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற குரல்கள் தவிர்க்க முடியாதவை. இரண்டாவது அலையின்தீவிரத் தாக்குதலிலிருந்து விடுபடுவதற்குத் தேசமே போராடுகையில், ஒவ்வொரு உயிரையும் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டியது அவசியம். அம்முயற்சிகளின் ஒரு பகுதியாகச் சிகிச்சையுடன் தொடர்புடைய மருந்துகள், உபகரணங்கள் குறைவான விலையில் கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

கரோனா சிகிச்சையுடன் தொடர்புடைய அனைத்துப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிப்பதோடு இறக்குமதிக்கான சுங்கத் தீர்வையையும் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் வலியுறுத்தியதையடுத்து இந்தக் கோரிக்கை பொதுக் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, எதிர்க்கட்சிகளும் அதற்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. தற்சமயம் கரோனா தடுப்பூசிக்கு 5% ஜிஎஸ்டி வரியும், கரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களுக்கு 12% ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டுவருகிறது. அவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கும்பட்சத்தில் உற்பத்தியாளர்கள் ஏற்கெனவே செலுத்திய வரியைத் திரும்பப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்; அவர்கள் மேலும் விலையை உயர்த்துவதன் வழியாக அதைத் திரும்பப் பெற முயல்வார்கள் என்று நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், நுகர்வோர் எந்த வகையிலும் பாதிக்காதபடி வரிவிலக்கை நடைமுறைப்படுத்த முடியும் என்பதையும் வரித் துறை நிபுணர்கள் முன்வைக்கிறார்கள். அத்தகைய பரிந்துரைகளில் முதன்மையானது, தயாரிக்கப்பட்ட இறுதிப் பொருளுக்கு மட்டும் வரிவிலக்கு அளிக்காமல் தயாரிப்பு நிலை முழுமைக்கும் அதை விரிவுபடுத்த வேண்டும் என்பதாகும். உள்ளீடுகளுக்காக வரிகளைக் கட்டத் தேவையில்லாத நிலையில், அவற்றைத் திரும்பவும் நுகர்வோர்களிடமிருந்து பெறுவதற்கான தேவையும் இல்லாமல் ஆகிறது.


விற்பனையின்போதான வரியைப் பூஜ்ஜியமாக்கிவிட்டு, உற்பத்தியின்போது உள்ளீடுகளுக்காக முன்பு செலுத்தப்பட்ட வரிகளைத் திருப்பிச் செலுத்திவிடுவதற்கான திட்டம் ஒன்றையும் வகுக்கலாம். ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குத் தமது உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கும் தற்போது இது அனுமதிக்கப்பட்டுவருகிறது. ஏற்றுமதியாளர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியதில்லை என்பதுபோலவே அவர்கள் இறக்குமதி செய்த உள்ளீடுகளுக்காகவும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியதில்லை. எனவே, உள்ளீடுகளுக்காக அவர்கள் செலுத்திய வரிகள் திருப்பியளிக்கப்பட்டுவிடும். இந்த முறையை கரோனா மருந்துகள் தொடர்பிலும் பின்பற்றலாம். உள்ளீடுகளுக்காக செலுத்தப்பட்ட வரிகளைத் திரும்பப்பெறும் வகையில் கணக்குகளை எளிதாகப் பராமரிக்க 0.1% என்ற அளவில் பெயரளவிலான வரியையும்கூட பரிசீலிக்கலாம். பெருந்தொற்றுக் காலத்தில் உயிர் காக்கும் உபகரணமாக விளங்கும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளைச் சொந்த உபயோகத்துக்காக இறக்குமதி செய்யும்போது அதற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று சுட்டிக்காட்டியுள்ள டெல்லி உயர் நீதிமன்றம் தற்போதைய நெருக்கடிக் காலத்தில் உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கான வரிவிலக்குக் கோரிக்கைகளைத் திறந்த மனதுடன் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகும்கூட வரிவிலக்கு விஷயத்தில் ஒன்றிய அரசு கடைப்பிடித்துவரும் பிடிவாதம் என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கே முரணானது. மே 28-ல் நடக்கவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலாவது வரிவிலக்கு தொடர்பில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும்.பெருந்தொற்று மருந்துமருந்துகளுக்கு வரிவிலக்குPandemic medicinesகரோனா தொற்றுமருந்துகள் தடுப்பூசிகள் மருத்துவ உபகரணங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x