

கச்சா பெட்ரோலிய எண்ணெயின் சர்வதேச விலை 2015 முழுவதும் இறங்குமுகமாகவே இருந்தது. இப்போது சில நாடுகளின் புதிய அறிவிப்புகள், முடிவுகள் காரணமாக அதன் விலை மேலும் சரியும் என்று தெரிகிறது. பிரிட்டனின் ‘பிரெண்ட்’ கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை பீப்பாய்க்கு 36.05 டாலர்களாகியிருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் இதுவே மிகவும் குறைந்தபட்ச விலையாகும். அமெரிக்காவிடம் கையிருப்பில் எண்ணெய் அபரிமிதமாக இருப்பதால் விலை குறைந்திருக்கிறது.
எண்ணெய் வள நாடுகள் தங்களின் கையிருப்பில் உள்ளதை விற்றுத் தீர்ப்பதற்குள் போட்டி போட்டுக்கொண்டு தொடர்ந்து உற்பத்தியை மேற்கொள்வதும் விலைச் சரிவுக்கு முக்கியக் காரணம். இந்நிலையில், உலக அளவில் கச்சா பெட்ரோலியத்தின் விலை பீப்பாய்க்கு 20 டாலர்கள் வரையில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய் விலை குறைந்துவருவதால்தான் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிச் செலவு கட்டுக்குள் இருக்கிறது. பொதுவான ஏற்றுமதி சரிந்துவிட்டாலும் ஏற்றுமதி - இறக்குமதி இடையிலான இடைவெளி அதிகரிப்பால் வெளிவர்த்தகப் பற்று வரவில் அதிகரித்திருக்க வேண்டிய பற்றாக்குறை வெகுவாகக் குறைந்திருக்கிறது. இந்தியாவின் பெட்ரோலியத் தேவைகளில் சுமார் 80% இறக்குமதி மூலம்தான் பெறப்படுகிறது.
2015 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் எண்ணெய் விலை குறைந்ததால் மட்டும் ரூ. 2.2 லட்சம் கோடி மிச்சமாகியிருக்கிறது. எனவே, உலக அளவில் பல செலாவணிகளின் மாற்று மதிப்பு தள்ளாடினாலும் இந்திய ரூபாய் சமாளித்துக்கொண்டது. அது மட்டுமல்லாமல், பெட்ரோலிய எண்ணெய் மீது கூடுதலாக உற்பத்தி (கலால்) வரியை விதித்ததன் மூலம் கூடுதலாக வருவாயைப் பெற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கணிசமாகக் குறைத்துக்கொண்டது மத்திய அரசு.
சர்வதேசச் சந்தையில்தான் எண்ணெய் விலை குறைந்துகொண்டே வருகிறதே, எதிர்காலத்திலும் விலை உயர்வதற்கான அறிகுறிகள் இல்லையே என்று அரசு மெத்தனமாக இருந்துவிட முடியாது. கண்ணை மூடிக் கண்ணைத் திறப்பதற்குள் உலக அரங்கில் எண்ணெய் விலை உச்சாணிக் கொம்புக்குப் போய்விடும்.
2008 முதல் 2011 வரையில் எண்ணெய் விலை அதிகரித்ததற்கு ஒரே காரணம், பங்குச் சந்தையில் நடந்த ஊக பேர வணிகம்தான். எனவே, கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதற்காக மத்திய அரசு நிம்மதி அடையலாமே தவிர, மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்ளாமல் சும்மா இருந்துவிடக் கூடாது.
உலக அளவில் எண்ணெய் தேவைக்காக இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் நாடு என்பதால், அடுத்த 20 ஆண்டுகளுக்கு உலக அளவிலான எண்ணெய் தேவையையும் விலையையும் தீர்மானிப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்ற முடியும் என்று சந்தை நோக்கர்கள் கருதுகின்றனர். எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ‘ஒபெக்’குடன் இந்தியா மீண்டும் தனது எண்ணெய்த் தேவைக்காகப் பேசத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறி.
ஒரு சில நாடுகளை மட்டும் எண்ணெய், நிலவாயுவுக்காக நம்பியிராமல் கொள்முதலைப் பரவலாக்க வேண்டும். வெளிநாடுகளில் எண்ணெய் வயல்களைக் குத்தகைக்கு எடுக்க இந்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சுதந்திரம் அளித்து ஊக்குவிக்க வேண்டும். விலை குறையும் சமயத்தில் எண்ணெய் கையிருப்பைப் பலமடங்காக உயர்த்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான், குறுகிய காலத்துக்குள் திடீரென எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தாலும்கூட அது நம்முடைய பொருளாதாரத்தைப் பாதித்துவிடாதபடிக்குக் காத்துக்கொள்ள முடியும்.