Published : 17 May 2021 05:22 AM
Last Updated : 17 May 2021 05:22 AM

பெருந்தொற்றுக் காலத்தில் 69% விசாரணைக் கைதிகள் சிறையில் இருப்பது நியாயமா?

நாடு முழுவதும் சிறைகள் நிரம்பி வழிவது நீண்ட காலப் பிரச்சினை என்ற போதும், பெருந்தொற்றுக் காலத்தில் இது மிகவும் அபாயகரமானதாக மாறியிருக்கிறது. சமீபத்தில், கரோனாவை எதிர்கொள்ளும் வகையில் தகுதியுள்ள சிறைவாசிகளைத் தற்காலிகமாக விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் குறிப்பிட்ட கால அளவுக்குப் பிணை அல்லது சிறைவிடுப்பில் யாரை விடுவிக்கலாம் என்பதைத் தீர்மானிப்பதற்கு உயர் அதிகாரம் பெற்ற குழுக்களை நிர்மாணிக்குமாறு கேட்டிருந்தது. கடந்த வாரத்தில் பிறப்பித்துள்ள உத்தரவில், விடுவிப்பதற்கு இன்னும் அதிக அளவிலான சிறைவாசிகளை அடையாளம் காணுமாறும், அதிக அளவில் சிறைவிடுப்புகளை அனுமதிக்குமாறும் கூறியுள்ளது.

கட்டற்றுப் பெருகிவரும் எந்தவொரு தொற்றையும் நெரிசல் மிக்க சிறைகளுக்குள் பரவாமல் தடுக்கும் வகையில், விசாரணைக் கைதிகளைக் காவல் நீட்டிப்புக்காகவும் விசாரணைகளுக்காகவும் வாகனங்களில் நீதிமன்றங்களுக்கு அழைத்துச்செல்லும் வழக்கங்களை நிறுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பது, சிறைவாசிகளின் உயிரையும் அவர்களின் உடல்நலத்தையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது. 2019-ல் மட்டும் சிறைவாசிகளின் விகிதாச்சாரம் 118.5% ஆக அதிகரித்துள்ளது. தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக விவரங்களின்படி 2019-ல் 18,86,092 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,30,487 பேர் விசாரணைக் கைதிகள். தவிர, மொத்த சிறைவாசிகளில் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 69.5%. மேலும், சிறைத் துறைக்காக நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் தொகையும் அதிகம் (ரூ.6,818.1 கோடி).

சிறையில் கட்டாயம் வைத்தே ஆக வேண்டும் என்று வரிசைப்படுத்த வேண்டிய குற்றங்களையும், சிறையில் ஒருவரை வைத்திருப்பதற்கான காலகட்டத்தையும் அரசுகள் மறுவரையறுக்க வேண்டிய தருணம் என்றும்கூட இதைச் சொல்லலாம். வன்செயலுடன் எந்தவொரு நேரடித் தொடர்பும் இல்லாமல் பீமா கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர்களைப் போன்ற அரசியல் கைதிகளுக்கும்கூடத் தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டுவருகிறது. அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பதைத் தவிர்த்து இதற்கு வேறு காரணங்கள் இல்லை. டெல்லியைச் சேர்ந்த சில அரசியல் செயற்பாட்டாளர்கள், கடந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த கலவரங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலாவது, இத்தகைய வழக்குகளின் விசாரணைகளை இடைநிறுத்தி வைப்பதோடு, நிரந்தரமாகவே இதற்கெல்லாம் ஒரு தீர்வு காணவும் நாம் முற்பட வேண்டும். சிறைகளின் நெரிசலைக் குறைப்பது குறித்துப் பேசுகிறபோது, அது சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாக மட்டுமின்றி, சிறை ஊழியர்கள் நிலையையும், சிறைச் சூழலையும்கூட கணக்கில் கொள்வதாகவும் அது இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x