கூடுதல் தீர்வை நிதி வீணாகக் கூடாது!

கூடுதல் தீர்வை நிதி வீணாகக் கூடாது!
Updated on
2 min read

கூடுதல் வரி அல்லது தீர்வை என்று அழைக்கப்படும் ‘செஸ்’ மூலம் திரட்டப்பட்ட 1.4 லட்சம் கோடி ரூபாய் பயன்படுத்தப் படாமல், சரியாகக் கணக்கில் வைக்கப்படாமல் சும்மா கிடப்பதைத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் ஆய்வறிக்கை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.

கூடுதல் தீர்வை விதிப்பதில் மத்திய அரசுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. காரணம், இதிலிருந்து கிடைக்கும் வருவாயை மாநில அரசுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை. குறிப்பிட்ட நோக்கத்துக்காக இந்த செஸ் விதிக்கப்படுகிறது. இப்படி வசூலிக்கும் தொகை முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

ஆரம்பக் கல்வி, உயர் நிலைக் கல்வி, சாலை மேம்பாடு, பீடித் தொழிலாளர்களுக்கான நல வாழ்வு, தூய்மையான மின்னாற்றலுக்கு, தொலைத்தகவல் தொடர்பு அனைவருக்கும் கிடைப்பதற்கான ஆராய்ச்சிப் பணிகளுக்கு என்று பல்வேறு நோக்கங்களுக்காக இப்படிக் கூடுதல் தீர்வை விதிக்கப்படுகிறது. ஆரம்பக் கல்வி, உயர் கல்வி வசதியை மேம்படுத்த வருமான வரிதாரர்கள் செலுத்திய கூடுதல் தீர்வை மூலம் 2006 முதல் 2015 வரையில் ரூ.64,000 கோடி திரட்டப்பட்டது. அதில் ஒரு ரூபாய்கூடச் செலவிடப்படவில்லை. ‘நெட்’ தேர்வில் தேர்வடையாத மாணவர்கள் எம்.ஃபில்., மற்றும் பி.எச்டி. பயில அளிக்கப்பட்டு வந்த ரூ. 5,000 மற்றும் ரூ. 8,000 கல்வி உதவித்தொகையை நிறுத்துவது என்று பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (யு.ஜி.சி.) முடிவெடுத்துள்ளதால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்தப் பட்டங்களுக்குத் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து படிக்க நேர்கிறது. அரசிடமோ கல்விக்கான நிதி செலவழிக்கப்படாமல் குவிந்திருக்கிறது. விமானப் பயணக் கட்டணத்தின் மீதான கூடுதல் தீர்வை விஷயத்திலும் இதே நிலை காணப்படுகிறது. எந்தெந்த ஊர்களுக்கான விமானப் பயணங்களுக்கு மானியம் அளிப்பது, இப்போது பயன்படாமல் உள்ள எந்தெந்த விமான நிலையங்களைப் புதுப்பிப்பது என்பதைத் தீர்மானிக்காமலேயே, கூடுதல் தீர்வை வசூலிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகத் திரட்டப்படும் கூடுதல் தீர்வையை அந்த நோக்கத்துக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும். அந்த வகையில், இது நல்ல ஆயுதம். ஆனால், அப்படி வசூலான தொகையைச் செலவிடாமல் தேங்கவிடுவது பொருளாதாரத்துக்கு இரட்டை வழிகளில் சேதத்தை ஏற்படுத்துகிறது. முதலாவதாக, இந்தத் தீர்வையை விதிக்காமல் இருந்திருந்தால் மக்களிடம் அந்தப் பணம் எஞ்சி, வேறு செலவுகளுக்குப் பயன்பட்டு பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியிருக்கும். இரண்டாவதாக, நிதியைச் செலவிடாததால் எட்டியிருக்க வேண்டிய சமூக, பொருளாதார முன்னேற்றம் கானல் நீராகவே போய்விடுகிறது. அரசின் வரவு செலவுத் திட்டமான பட்ஜெட்டே வரி வருவாயைப் பல்வேறு துறைகளுக்குப் பிரித்து வழங்குவதற்காகத்தான். அதற்குப் பிறகும் இப்படி துளித் துளியாக ‘செஸ்’ வரிகளை விதித்து நிதி திரட்டுவது அவசியமா என்று பார்க்க வேண்டும்.

மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்குத் தர வேண்டிய பங்கை 14-வது நிதிக் குழு அதிகரித்து பரிந்துரைத்துவிட்டதால், தனக்கென்று கூடுதல் நிதியை எப்படியாவது பெற வேண்டும் என்ற வேட்கை மத்திய அரசுக்கு ஏற்பட்டுவிட்டதையே இந்த ‘செஸ்’ வரி விதிப்பு காட்டுகிறது. வரி விதிப்பில் எளிமையைக் கொண்டுவர வேண்டும். விதி விலக்குகளையும் சலுகைகளையும் அளிக்கக் கூடாது என்றெல்லாம் வரிச் சீர்திருத்தம் பற்றிப் பேசிவிட்டு, கூடுதல் தீர்வைகளைத் தொடர்வது சரியல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in