ஆக்ஸிஜன் ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க வழிகாட்டல்

ஆக்ஸிஜன் ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க வழிகாட்டல்

Published on

மருத்துவ ஆக்ஸிஜன் நெருக்கடியைத் தெளிவற்ற முறையில் கையாண்டுவரும் ஒன்றிய அரசின் மீது அதிருப்தி தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் இது தொடர்பில் உடனடியாக 12 பேரை உள்ளடக்கிய தேசிய சிறப்புப் படையை உருவாக்குமாறு பிறப்பித்திருக்கும் உத்தரவு வரவேற்கத்தக்கது. இந்தச் சிறப்புப் படையைக் கொண்டு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கான மருத்துவ ஆக்ஸிஜனை ‘அறிவியல்பூர்வமாகவும் ஏற்புடைய வகையிலும் நியாயமாகவும் செயலூக்கத்துடனும் வெளிப்படையாகவும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், தற்போதுள்ள ஆக்ஸிஜன் விநியோகத்தை, பெருகிவரும் தேவைகளுக்கு ஏற்றபடி அதிகரிக்கவும் ஒவ்வொரு மாநில, ஒன்றியப் பிரதேசத்திலும் துணைக் குழுக்களை நியமித்து ஆக்ஸிஜன் விநியோகத்தைக் கண்காணிக்கவும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

பெருந்தொற்றுக் காலத்தில் எதிர்வரும் அவசரத் தேவைகளைச் சமாளிக்கும் வகையில் அவசியமான உயிர்காக்கும் மருந்துகளின் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இரண்டாவது அலையின் காரணமான நெருக்கடிகளை எப்படிக் கையாள்வது என்று வழிநடத்தவுள்ள தேசிய சிறப்புப் படையானது நீதித் துறையால் அதிகாரமளிக்கப்பட்ட குழுவாக இயங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, ஒதுக்கீடு தொடர்பில் உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை எதிர்கொள்வதற்காக ஒன்றிய அரசு சமர்ப்பித்த பதில் மனுக்களில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த வல்லுநர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டு ஒதுக்கீட்டின் அளவுகள் புதிதாக நிர்ணயிக்கப்படும் என்றே கூறப்பட்டிருந்தது. ஒன்றிய அரசு தினந்தோறும் கர்நாடகத்துக்கு 1,200 டன் ஆக்ஸிஜனை விநியோகிக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.

இப்படி ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் ஆக்ஸிஜன் ஒதுக்கீடுகள் குறித்த புகார்களை ஏற்று உத்தரவிடத் தொடங்கினால், பெருந்தொற்று மேலாண்மை கேள்விக்குரியதாக மாறிவிடும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இவ்வழக்கில் வாதிட்டார். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம் இந்தச் சிக்கல் கவனத்துடன் கையாளப்பட வேண்டியது என்று குறிப்பிட்டுள்ளது.

பெருந்தொற்று தொடர்பிலான அரசின் வெவ்வேறு நடவடிக்கைகளை உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளன. இந்நிலை, அரசின் நிர்வாகரீதியிலான அதிகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதான எண்ணத்தையும் தோற்றுவித்துள்ளது. அந்த வாதத்தில் உண்மை இருக்கலாம். ஆனால், தினசரித் தொற்றுகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துவரும் நிலையில், மக்களின் உயிர் வாழும் உரிமையையும் நல்ல உடல்நலத்துக்கான உரிமையையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசமைப்பைப் பாதுகாக்க வேண்டிய நீதிமன்றங்களுக்கும் உண்டு என்பதை மறுக்க முடியாது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in