Published : 10 May 2021 04:56 AM
Last Updated : 10 May 2021 04:56 AM

மாற்றத்துக்கான அச்சாரம்

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்ட நிகழ்வு தமிழகத்தில் விடுபட்டுப்போயிருந்த ஜனநாயக மரபுகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறது. பதவியேற்பு நிகழ்வில் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் முதல் வரிசையில் அமர்ந்திருந்ததோடு, ஆளுநர் அளித்த விருந்திலும் முதல்வரோடு பங்கேற்ற படங்கள் சமூக ஊடகங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டன. 2016-ல் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் விழாவின்போது, எதிர்க்கட்சித் தலைவர்களில் முக்கியமானவராக இருந்த ஸ்டாலின் பின்வரிசையில் அவருடைய கட்சி சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக அமரவைக்கப்பட்டதை மக்கள் மறந்திடவில்லை.

அரசியலர்கள் இடையே நட்பார்ந்த உறவுவையும், மாநிலத்தின் நலனுக்காக ஒருமித்த உழைப்பையுமே மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் முதல்வர் ஸ்டாலின் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. எதிர்க்கட்சியினரோடு ஆக்கபூர்வமான உறவைப் பராமரித்திடுமாறு தன்னுடைய கட்சியினரை அவர் அறிவுறுத்தியிருப்பது நல்ல முன்னெடுப்பு.
தன்னுடைய அரசு எந்தப் பாதையில் செல்லும் என்பதையும் முதல்வராகப் பொறுப்பேற்ற அன்று ஸ்டாலின் கையெழுத்திட்ட கோப்புகளும், தன்னோடு இணைந்து செயலாற்ற அவர் தேர்ந்தெடுத்த செயலர்களின் பெயர்களும் தெரிவிப்பதாக இருந்தன. தலைமைச் செயலர் இறையன்பு, முதல்வரின் முதன்மைச் செயலர் உதயச்சந்திரன் இருவருமே துடிப்பான நிர்வாகிகள் என்று மக்களிடத்தில் பெயர் எடுத்தவர்கள். கொள்ளைநோயானது கூடவே ஊரடங்கையும் பொருளாதார நெருக்கடியையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கும் சூழலில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4,000 நிதி வழங்கும் திட்டத்தில் முதல்வர் கையெழுத்திட்டது காலத்திலான உதவி. உள்ளூர் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லா பயணம் என்ற அறிவிப்பு காலத்துக்கும் பேசப்படும்.

அமைச்சரவை அறிவிப்போடு, துறைகளின் பெயர்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம் கவனத்துக்குரியது. நீர்வளத் துறையாகப் பாசனத் துறை மாறியிருப்பதும், வேளாண் துறையுடன் உழவர் நலம் சேர்ந்திருப்பதும், சுற்றுச்சூழல் துறையுடன் காலநிலை மாற்றம் சேர்ந்திருப்பதும் தொலைநோக்குப் பார்வை. அதே சமயம், இந்த மாற்றமானது பெயர்களோடு முடிந்திடாமல் செயல்பாட்டிலும் தொடர அந்தந்தத் துறைசார் வல்லுநர்களோடு அமைச்சர்களும் அதிகாரிகளும் இணைந்து செயலாற்றுவதற்கான வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் சர்வதேசப் போக்கு, அதில் தமிழகத்தின் இன்றைய நிலை, முன்னெடுக்க வேண்டிய மாற்றங்கள் இவையெல்லாம் வல்லுநர்களின் வழி அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கலந்தாலோசனைக் கூட்டங்கள் வழி கொண்டுசெல்லப்பட வேண்டும். அதேபோல மருத்துவம், பொருளாதாரம், தொழில் துறைகள் சார்ந்து தமிழ்நாடு பெரும் சவால்களைச் சந்தித்துவரும் இந்நாட்களில், இத்துறைசார் வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு வழிகாட்டும் குழுவை உருவாக்குவது தொடர்பிலும் முதல்வர் யோசிக்கலாம்.

அமைச்சரவைத் தேர்வில் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தில் சமநிலையைப் பராமரிக்க முயன்றிருப்பதுபோலவே கட்சியில் மூத்தோருக்கும் இளையோருக்கும் இடையிலும் சமநிலையைப் பரமாரிக்க முயன்றிருப்பது தெரிகிறது. ஆயினும், பல முக்கியமான துறைகள் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பது கட்சிக்குள் முணுமுணுக்கப்படுவது கவனிக்கக்கூடியதாக இருக்கிறது. அதேபோல, காவிரிப் படுகைக்கு அமைச்சரவையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாதது அந்தப் பிராந்தியத்தில் ஏமாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. இதைப் போக்க முதல்வர் தன்னை அந்தப் பிராந்தியத்தவராக அடையாளப்படுத்திக்கொள்வதானது தற்காலிகச் சமாதானமாக அமையலாமே அன்றி தீர்வாக அமையாது என்பதை உணர வேண்டும்.

ஆட்சிப் பொறுப்பேற்ற கையோடு கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரமாகக் களம் இறங்கியிருக்கிறார் முதல்வர். அதிகாரிகளிடம் ‘எல்லாப் பிரச்சினைகளிலும் உண்மை நிலையை எனக்குச் சொல்லுங்கள்’ என்றதும், ‘ஒரு உயிர்கூடப் பறிபோக அனுமதிக்கக் கூடாது’ என்றதும் ஒரு நல்லாட்சியாளருக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்வுக்கான அடையாளங்கள். இரண்டு வார முழு ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பே நிவாரணத் தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள், புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்புவதற்கான கூடுதல் பேருந்துகள், மக்கள் திட்டமிட்டு செயலாற்ற இரண்டு நாட்கள் அவகாசம் ஆகியவை முந்தைய ஊரடங்குகளின் துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுத்திருக்கின்றன. புதிய அரசு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் தமிழகம் நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் பார்த்துக்கொண்டிருக்கிறது. இதே அக்கறையுடன் பணி தொடரட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x