

சமீபத்தில் வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்டப் பிரிவு (யு.என்.டி.பி.) வெளியிட்ட மனித ஆற்றல் வளர்ச்சி அறிக்கை, நம்பிக்கையளிக்கும் தகவல்களைக்கொண்டு இருக்கிறது.
ஒரு நாளைக்கு 1.25 அமெரிக்க டாலருக்கும் மேல் ஈட்டுபவர்கள் வறுமைக் கோட்டுக்கும் மேலே வாழ்கிறவர்களாகக் கருதப்பட வேண்டும் எனும் அளவை, 1.90 டாலர்களாக உலக வங்கி உயர்த்திய பிறகும், 2009 முதல் 2011 வரையிலான காலத்தில் வறுமையிலிருந்து விடுபட்ட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது இந்த அறிக்கை.
கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் ‘நிகர தேசிய வருமானம்’ இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்திருக்கிறது. வாங்கும் சக்தி அடிப்படையில் கணக்கிடும்போது, 2000 முதல் 2014 வரையிலான காலத்தில், இது 2,522 டாலர்களிலிருந்து 5,497 டாலர்களாக உயர்ந்திருக்கிறது. அதற்கு முந்தைய 15 ஆண்டுகளைவிட இது உயர்வான வளர்ச்சியாகும். இந்தப் பொருளாதார வளர்ச்சியானது மனித வளம் தொடர்பாகவும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதே காலத்தில், இந்திய மனித ஆற்றல் வளர்ச்சி அட்டவணையும் 0.462-லிருந்து 0.609 ஆக உயர்ந்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சி, ஆயுட்கால அதிகரிப்பு, கல்வி வசதியில் மேம்பாடு ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்கள். மகளிருக்கான கல்வி வசதிகளும் இக்காலத்தில் அதிகரித்தன.
இதேபோல, ‘இந்தியச் சுகாதார அறிக்கை: ஊட்டச்சத்து 2015’ அறிக்கையை இந்தியப் பொது சுகாதார அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது. 2006-ல் கடைசியாக அறிக்கை கிடைத்தபோது குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைவு என்ற அம்சம் மாறி, ஊட்டச்சத்து மேம்பட ஆரம்பித்தது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாததால் வயதுக்கேற்ற உயரம் இல்லாமல் இருக்கும் விகிதம் 2006-ல் 48% ஆக இருந்தது; 2014-ல் அது 39% ஆகக் குறைந்தது. ஒரு கோடியே 40 லட்சம் குழந்தைகள் அவர்களுடைய வயதுக்கேற்ற வளர்ச்சி அடையத் தொடங்கினர். 70 லட்சம் குழந்தைகள் உயரத்துக்கேற்ற எடை இல்லாத நிலையிலிருந்து மீண்டு, தகுந்த எடையைப் பெற்றனர். இவையெல்லாம் அபாரமான சாதனைகள்.
இந்தக் கணக்கீடெல்லாம் ஒட்டுமொத்த இந்தியர்களைப் பற்றியது. வர்க்கம், சாதி, ஆண் - பெண் என்ற பாலின வேறுபாடு, சமூக ஏற்றத் தாழ்வுகள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு பார்த்தால், இந்தியா அடைந்துள்ள இந்த மனித ஆற்றல் வளர்ச்சியில் 30% குறைந்திருக்கிறது. அதாவது, நல்ல வருவாயுள்ள, மேல் சாதிகளைச் சேர்ந்த, ஆண் வர்க்கத்துக் குழந்தைகள் விஷயத்தில் இந்த வளர்ச்சி அதிகரித்திருக்கிறது என்று கொள்ளலாம். எனவே, இது வெற்றியோ மகிழ்வதற்கான சாதனையோ அல்ல என்றும் கூறிவிடலாம். உலக அளவில் இந்தியா அடைந்திருக்கும் மனித ஆற்றல் மேம்பாட்டு வளர்ச்சியை, பெண்களின் நிலையை மட்டும் கொண்டு அளவிட்டால் இன்னும் 30 படிகள் கீழே இறங்கிவிடுவோம். பெண்களிடையே எழுத்தறிவு குறைவாக இருப்பதும் அவர்களின் சமூக நிலைமையும் அவர்களுடைய ஆற்றல் வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கிறது. சமூகப் பாதுகாப்பு என்ற ஏற்பாடு இல்லையென்றால், இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மையினரின் நிலைமை மிக மோசமாகத்தான் மாறிவிடும். இந்த வளர்ச்சிகூட மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. தென் மாநிலங்களில் காணப்படும் வளர்ச்சியும் மேம்பாடும் வட இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் இல்லை. ஆண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் போஷாக்கு, பெண் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகக் கல்வி, சுகாதாரம், சமூக நலத் திட்டங்களுக்கான தொகைகளை மத்திய அரசு வெட்டும் வேகத்தைப் பார்க்கும்போது, காகிதத்திலாவது காணப்படும் இந்த வளர்ச்சியும் போய்விடுமே என்ற கவலை அதிகமாகிறது.
இந்திய அரசு தன்னுடைய நிதியை மட்டுமல்ல, இயற்கை வளங்களையும் பயன்படுத்தி ஏழைகள், கிராமப்புற மக்கள், பெண்கள், நலிவுற்றோர் ஆகியோருக்கு நேரடிப் பயன்கள் அதிகம் கிடைக்குமாறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் இந்தியர்களின் மனிதவள ஆற்றல் உண்மையிலேயே மேம்படும்.