கரோனா தடுப்புச் செயல்பாடு மக்கள் இயக்கம் ஆகட்டும்

கரோனா தடுப்புச் செயல்பாடு மக்கள் இயக்கம் ஆகட்டும்
Updated on
1 min read

முதல்வர் பதவியேற்பு தொடர்பிலான சம்பிரதாயங்கள் நிறைவடைவதற்கு முன்பே தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் நடத்தியுள்ள ஆலோசனைக் கூட்டமும் அதையடுத்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் நம்பிக்கை தருகிறது. கரோனா சிகிச்சைக்குத் தேவையான படுக்கைகள், ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் தங்குதடையின்றி மக்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்ற ஸ்டாலினின் விருப்பம் விரைவில் செயல்வடிவம் பெற உறுதியான நடவடிக்கைகள் அவசியம். மே 20 வரையிலான புதிய கட்டுப்பாடுகள் குறித்து அவர் கூறியிருப்பதுபோல, மக்கள் அனைவரும் தங்களுக்குத் தாங்களே போட்டுக்கொண்ட கட்டுப்பாடுகளாகக் கருதி, மக்கள் இயக்கமாக மாறினால் மட்டுமே இந்த அலையின் பாதிப்புகளிலிருந்து முழுமையாகத் தற்காத்துக்கொள்ள இயலும்.

அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் பொருளாதாரச் செயல்பாடுகள் தேங்கிவிடக் கூடாது என்பதிலும் போதிய அக்கறை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது நல்ல விஷயம். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் ஊழியர்களில் 50% பேரைக் கொண்டு இயங்க அனுமதித்திருப்பதும், பொதுப் போக்குவரத்தைப் பாதி எண்ணிக்கையிலான பயணிகளுடன் இயங்க அனுமதித்திருப்பதும் ஒரு முழுமையான முடக்கத்தை நோக்கி மக்களைத் தள்ளிவிடாமல் இருப்பதற்கான முயற்சிகள். குறிப்பாக, தொழில் துறையைப் பொறுத்தவரையில் தொடர்ச்சியாகச் செயல்பட வேண்டியது அவசியம். அத்தியாவசியப் பொருட்களுக்கான தொழிற்சாலைகள் கட்டுப்பாடுகளின்றிச் செயல்படவும் அவற்றின் ஊழியர்கள் இரவில் பணிக்குச் சென்று திரும்பவும் அனுமதிக்கப்பட்டுள்ளது சரியானது. மஹாராஷ்டிரத்தில் ஏப்ரல் பின்பாதியில் அறிவிக்கப்பட்டிருந்த பொது முடக்கத்தின்போது அனைத்துத் தொழிற்சாலைகளும் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி முழுமையான தொழிலாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தன. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்று மட்டுமே தொழிற்சாலை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததை இங்கே நினைவுகூரலாம். அத்தியாவசியப் பொருட்களின் தேவைக்காக மட்டுமின்றி, பொருளாதார ஸ்திரத்தன்மைக்காகவும் வேலையின்மைச் சிக்கல்களைக் கூடியவரையில் தவிர்ப்பதற்காகவும் தொழிற்சாலைகள் தடையின்றி இயங்க வேண்டியது அவசியம்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி, பதவியேற்பதற்கு முன்பே ஒப்பந்தச் செவிலியர் 1,212 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக மம்தா பானர்ஜி அறிவித்த அடுத்த நாளே தமிழகத்திலும் அவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். மக்கள் நல்வாழ்வு தொடர்பிலான எந்தவொரு விஷயத்திலும் கட்சிசார் கண்ணோட்டத்தைத் தவிர்ப்பது, பெருந்தொற்று தொடர்பில் மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட சிறந்த நடவடிக்கைகளை உடனுக்குடன் தமிழகத்திலும் செயல்படுத்துவது என்று ஸ்டாலினின் முடிவுகள் நம்பிக்கைகளை விதைக்கின்றன. அதேசமயம், அவர் முன்னிற்பது பெருஞ்சவால்; இப்போதே தலைநகர் சென்னையிலேயே மருத்துவமனைகளில் இடம் இல்லை எனும் சூழல் உருவாகியிருக்கிறது. அடுத்து வரும் வாரங்களில் பெருகும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய கட்டமைப்புகள் வேகமாக உருவாக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசிடம் தேவையானவற்றைக் கேட்டுப்பெறுவதோடு பொதுச்சமூகத்திடமும் உதவிகளைக் கேட்டுப்பெற அவர் தயங்கக் கூடாது. மக்கள் இயக்கமாக இதை அவர் விரித்தெடுக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in