

ஒரு அடி முன்னே எடுத்துவைத்தால் இரு அடி பின்னே வழுக்குகிறது
மத்திய அரசு. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் தனது அரசு இல்லத்துக்கு வரவழைத்துத் தேநீர் வழங்கி, சுமுக நிலையைக் கொண்டுவருவதற்காக அவர்களிடம் இணக்கமாகப் பேசினார் பிரதமர் மோடி. அரசியல் தாக்குதல் குறைந்து, பொதுச் சரக்கு சேவை வரி உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேறவும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமளியில்லாமல் நடக்கவும் இது வழிவகுக்கும் என்று தேசம் எதிர்பார்த்தது. அடுத்த சில நாட்களிலேயே அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டனர் அவரது சகாக்கள்.
இதற்கு முன்பு ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த குமாரி செல்ஜா, குஜராத் மாநிலத்தில் துவாரகை கோயிலுக்குச் சென்றபோது அங்கிருந்தவர்கள் அவருடைய சாதி என்ன என்று கேட்டதாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது குறிப்பிட்டார். இதை அவர் குறிப்பிடக் காரணம், மத்திய அமைச்சராக இருந்தபோதிலும் தன்னிடமே சாதியைக் கேட்டார்கள். அந்த அளவுக்கு இன்றைக்கும் தலைதூக்கி நிற்கும் சாதிய உணர்வுகளைக் களைய வேண்டும் என்பதற்காகத்தான்.
2013 பிப்ரவரி 22-ல் இச்சம்பவம் நடந்திருக்கிறது. செல்ஜா இப்படிப் பேசிய சில நாட்கள் கழித்து, துவாரகை ஆலயத்தின் பார்வையாளர் பதிவேட்டை ஆராய்ந்து, அதில் ஆலய நிர்வாகம் தன்னை அன்போடு வரவேற்றதைப் பாராட்டி எழுதிய குறிப்புகளைத் திரட்டி அவையில் தெரிவித்து, செல்ஜா கூறியது உண்மையல்ல என்று நிரூபித்துவிட்டதைப் போலப் பெருமிதப்பட்டுள்ளனர். அவரை அவமதித்தது துவாரகையின் பெரிய கோயில் அல்ல; பேட் துவாரகையில் உள்ள சிறிய கோயில் என்பதை விளக்கிய செல்ஜா, இதை நாடாளுமன்றத்தில் பேசியபோதே தான் தெரிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
குமாரி செல்ஜா, இல்லாத பிரச்சினைகளையெல்லாம் இருப்பதாகக் கற்பிதம் செய்து பேசினார் என்பதைப் போல இருந்தது அமைச்சர்களின் பேச்சும் செயலும். பிறகு செல்ஜா அளித்த விளக்கத்தை ஏற்ற அமைச்சர்கள், தங்களுடைய குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற்றனர். எனினும், விவகாரம் இத்துடன் முடிந்துவிடாது.
குமாரி செல்ஜா ஒரு பெண் என்பதுடன் பட்டியல் இனத்தவர் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், பேட் துவாரகை ஆலயத்தில் நடந்த சம்பவத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட முடியாது. சமூகத்தில்
புரையோடிப்போயிருக்கும் தீண்டாமைக் கொடுமையை அகற்றிவிட்டதாக நாம் மார்தட்டிக்கொண்டாலும் அவ்வப்போது இதைப் போன்ற சம்பவங்கள்
வெளிப்பட்டு இதன் கோர முகத்தைக் காட்டிக்கொண்டே இருக்கிறது.
அக்காலத்தில் தலித்துகளின் ஆலயப் பிரவேசம் என்பது சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியமான அங்கமாக இருந்தது. மகாத்மா காந்தி அதை ஒரு தேசிய இயக்கமாகவே நடத்தினார். பொது வழிபாட்டுக்கான அனைத்து இந்துமத ஆலயங்களையும் வழிபாட்டு இடங்களையும் அனைவருக்கும் திறந்துவிட உரிய சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை அரசியல் சட்டம் வழங்கியிருக்கிறது. அரசியல் சட்டம் வகுத்தளிக்கப்பட்டு ஏற்கப்பட்ட நாளையொட்டி சிறப்பு விவாதம் நடந்திருப்பதால், அதையொட்டிதான் செல்ஜா அந்தக் கருத்தைப் பொருத்தமாகக் கூறியிருக்கிறார். ஒரு விஷயம் ஆட்சியாளர்கள் முன் கொண்டுவரப்படும்போது, எதிராளிகள் முதலில் என்ன சொல்கிறார்கள் என்பதற்குக் காது கொடுக்க வேண்டும்; எப்போது மட்டையடி அடிக்கலாம் என்பதிலேயே கவனம் இருக்கக் கூடாது. மேலும், அரசு நிர்வாகத்திலும் நாடாளுமன்றத்தைச் சுமுகமாக நடத்திச் செல்வதிலும்தான் அரசின் கவனம் இருக்க வேண்டுமே தவிர, அரசியல் செய்துகொண்டிருப்பதிலேயே அல்ல!